30 வயதிற்குள் பல கோடி ரூபாய் மதிப்பு நிறுவனத்தை கட்டமைத்த இந்திய தொழில் முனைவர்கள்!
30 வயதுகளிலேயே பல கோடி ரூபாய் மதிப்புடைய வணிகத்தை வெற்றிகரமாகக் கட்டமைத்துள்ள 5 இந்திய தொழில்முனைவோர்களின் தொகுப்பு இது.
சாதனை படைக்கும் தொழில்முனைவோர் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் அவர்களுக்கு மட்டும் படிப்பினையாக இருப்பதில்லை. இவர்களது தொழில்முனைவுப் பயணம் வளர்ந்து வரும் எண்ணற்ற தொழில்முனைவோருக்கு உந்துதலளித்து வழிகாட்டுகிறது.
30 வயதுகளிலேயே பல கோடி ரூபாய் மதிப்புடைய வணிகத்தை வெற்றிகரமாகக் கட்டமைத்துள்ள 5 இந்திய தொழில்முனைவோர்களின் தொகுப்பு இது.
பாலா சர்தா, Vahdam Teas
பாலா சர்தாவின் குடும்பத்தினர் டீ ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் டீ துறை பற்றிய புரிதல் அவருக்கு இருந்தது.
2015ம் ஆண்டு தனது 23-வது வயதில் புதுடெல்லியில் Vahdam Teas நிறுவினார் பாலா தர்தா. இந்தியாவின் மிகச்சிறந்த தேநீரை உலக நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கினார். இந்திய தேநீருக்கு தேவை அதிகம் இருந்தபோதும் ஒரு பிராண்டாக வெளிநாடுகளில் பிரபலமடையவில்லை என்பதை பாலா கவனித்தார். USDA சான்றிதழ் பெற்றார். Non-GMO சர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்.
“இந்தியாவில் தேநீர் பிராண்டை உருவாக்கி வெளிநாடுகளுக்கு பலர் ஏற்றுமதி செய்வதில்லை. நம் உள்நாட்டு தயாரிப்புகளின் நன்மைகளையும் Starbucks போன்ற மேற்கத்தியர்களே அதிகம் விளம்பரப்படுத்துகின்றனர். எனவே இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன்,” என்று பாலா விவரித்தார்.
அமெரிக்க சந்தை தவிர கனடா, யூகே, ஜெர்மனி போன்றவை அதிக சாத்தியக்கூறுகள் நிறைந்த சந்தை என்கிறார் பாலா.
Vahdam தற்போது அமெரிக்காவில் 1,000-க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் கிடைக்கின்றன. அமெரிக்காவில் பாரம்பரியமாகவும் ப்ரீமியம் முறையிலும் செயல்படும் சில்லறை வர்த்தக தொடர் நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெகு சில இந்திய பிராண்டுகளில் இதுவும் ஒன்று.
பிரமிட்-டீ பேக், சூப்பர்ஃபுட்ஸ், கிஃப்ட் செட்ஸ், அசார்ட்மெண்ட், டீவேர், ட்ரிங்க்வேர் உள்ளிட்ட 175 SKU-க்கள் உள்ளன.
2020 நிதியாண்டில் இந்நிறுவனம் 145 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளது. Vahdam தயாரிப்புகளுக்கு சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க வாடிக்கையாளர்கள் இருப்பதாக பாலா தெரிவிக்கிறார்.
ரிஷப் சொக்கனி, Naturevibe Botanicals
ரிஷப் சொக்கனிக்கு 29 வயதிருக்கும்போது சுத்தமான உணவுப் பழக்கத்தை பின்பற்றவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார். இதை நடைமுறைப்படுத்தியதில் உடலளவிலும் மனதளவிலும் அபாரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் மருந்து வணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் வெல்னெஸ் சம்பந்தப்பட்ட துறையைத் தேர்வு செய்தார். ஆர்கானிக் உணவுத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த ரிஷப் 2017-ம் ஆண்டு மும்பையில் Naturevibe Botanicals தொடங்கினார்.
“இந்தியாவில் ஆர்கானிக் தயாரிப்புகளுக்கான சந்தை வளர்ச்சியடைந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஆனால் அமெரிக்காவில் மக்கள் ஆர்கானிக் தயாரிப்புகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். ஆர்கானிக் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களில் பெரும்பாலானவை இந்தியாவில் கிடைக்கின்றன. இருந்தபோதும் அந்நிய சந்தைகளில் வெகு சில இந்திய சப்ளையர்கள் மட்டுமே இருந்தனர்,” என்று ரிஷப் விவரித்தார்.
அமெரிக்க சந்தைக்கு முதலில் சேவையளிக்கத் தொடங்கிய ரிஷப் படிப்படியாக ஐரோப்பா வரை விரிவுபடுத்தினார். அந்நிய சந்தைகளில் செயல்பட்டு துறை சார்ந்த அனுபவம் பெற்ற ரிஷப் 2019-ம் ஆண்டு இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்கினார்.
Naturevibe Botanicals சூப்பர்ஃபுட்ஸ், ஆர்கானிக் உணவு, ஆயுர்வேத சப்ளிமெண்ட்ஸ், ஸ்டேபிள்ஸ், மளிகைப் பொருட்கள், எசன்ஷியல் ஆயில், மசாஜ் எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் 650-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மகாராஷ்டிராவின் ராய்கர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
இன்று இந்நிறுவனம் 250 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய தாவரங்களை ஏற்றுமதி செய்திருப்பதாகவும் 2020-21 நிதியாண்டில் 140 கோடி ரூபாய் டர்ன்ஓவர் அளவை எட்டியிருப்பதாகவும் ரிஷப் தெரிவிக்கிறார்.
பல்லவ் பிஹானி, Boldfit
பல்லவ் பிஹானி பள்ளிப் பருவத்தில் இருந்தபோது அவருக்கு 'ஸ்லிப் டிஸ்க்’ பிரச்சனை இருந்துள்ளது. இதனால் ஆரோக்கியமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை இளம் வயதிலேயே உணர்ந்திருக்கிறார் 29 வயதாகும் பல்லவ்.
”நான் 105 கிலோ உடல் எடையுடன் இருந்தேன். ஆரோக்கியமாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது ஜிம் சென்றேன். ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். என்னால் எடையைக் குறைக்க முடிந்தது. ஆனால் இதற்கு அதிகம் செலவழிக்க வேண்டியிருந்தது,” என்று பல்லவ் நினைவுகூர்ந்தார்.
இந்தியாவில் ஃபிட்னெஸ் முயற்சிகளுக்கான செலவு அதிகம். ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ், ஃபிட்னெஸ் ஆக்சசரி, இம்யூனிட்டி பூஸ்டர் போன்றவை அதிக விலையிலேயே கிடைக்கின்றன.
இந்த நிலையை மாற்றி அனைவருக்கும் நியாயமான விலையில் கிடைக்கவேண்டும் என்பதற்காக பல்லவ் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் Boldfit நிறுவினார். பல்லவ் தனது அப்பாவிடம் 8 லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுக்கொண்டு இந்த நிறுவனத்தை நிறுவினார்.
முழுவீச்சில் தயாரிப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பணப் பற்றாக்குறை இருந்தது. வெளியிலிருந்து நிதி திரட்டவும் பல்லவிற்கு விருப்பம் இல்லை. எனவே சிறியளவில் தொடங்க நினைத்தார். முதலில் யோகா மேட் தயாரிப்பைத் தொடங்கினார்.
ஒரே ஒரு தயாரிப்புடன் தொடங்கப்பட்ட Boldfit தற்போது ஃபிட்னஸ் & யோகா, ஊட்டச்சத்து, ஹெல்த், வெல்னெஸ் என 30 SKU-கள் கொண்டுள்ளது. 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின்படி, இரண்டாண்டுகளில் ஆண்டு டர்ன்ஓவர் 30 கோடி ரூபாய் என்கிறார் பல்லவ்.
கேசவ் ராய், Bike Blazer
27 வயதான கேசவ் ராய் பள்ளிப் பருவத்தில் சராசரி மாணவராகவே இருந்தார். பழுது பார்ப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. எனவே பொறியியல் படித்தார்.
கல்லூரி நாட்களில் கேசவ் தனது நண்பர்களுடன் ஸ்டார்ட் அப் யோசனைகளைப் பகிர்ந்துகொள்வார். 2015-ம் ஆண்டு இவர் தனது செயலி சார்ந்த வணிகத்திற்காக அப்பாவின் நிதியுதவி கேட்டார்.
ஆனால் கேசவின் முதல் ஸ்டார்ட் அப் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் புதுமை படைப்பதிலும் தொடர்ந்து கற்பதிலும் இவருக்கு இருந்த ஆர்வம் தொழில்முனைவு முயற்சியில் வெற்றியடையச் செய்தது.
திடீரென்று ஒரு நாள் பெற்றோரிடம் நான்கு நாட்களில் திரும்பி வருவதாக சொல்லிவிட்டுப் புறப்பட்டார். வருங்காலத்தை எப்படி அமைத்துக்கொள்ளப் போகிறோம் என்பது பற்றி எந்த ஒரு யோசனையும் கிடைக்காமல் மூன்று நாட்களில் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
நான்காவது நாள் வீடு திரும்ப நினைத்தார். டெல்லி மெட்ரோ நிலையத்தில் இருக்கும் பார்க்கிங் பகுதியில் உட்கார்ந்திருந்தார். ஒருவர் தனது பைக்கைத் துடைக்கத் துணியைத் தேடினார். அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே பக்கத்தில் இருந்த பைக்கில் இருந்த டஸ்டரை எடுத்து தன் வாகனத்தைத் துடைத்துவிட்டு சென்றுவிட்டார்.
இதுவே அவரது இரண்டாவது தொழில் முயற்சிக்கான விதையாக அமைந்தது. 2016-ம் ஆண்டு Bike Blazer தொடங்கினார்.
Bike Blazer இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யும்போது தூசி படியாமல் பாதுகாப்பதற்கான நீர்புகா தன்மை கொண்ட கவர்களை வழங்குகிறது. இந்தக் கையடக்க சாதனத்தை எளிதாக 30 நொடிகளுக்குள் வாகனத்தில் பொருத்திவிடலாம் என்கிறார் கேசவ்.
2021 நிதியாண்டின்படி Bike Blazer ஆண்டு டர்ன்ஓவர் 1.3 கோடி ரூபாய்.
ஜெய் கே முல்சந்தனி, CoreB Group
ஜெய் கே முல்சந்தனி 14 வயதிலேயே தன் அப்பாவின் வணிக நடவடிக்கைகளில் உதவத் தொடங்கினார்.
ராஜஸ்தானின் கோட்புட்லி பகுதியைச் சேர்ந்த ஜெய் படிப்பில் ஆர்வம் காட்டினார். அவர் ஐஐடி-யில் சேர்ந்து படிக்கவேண்டும் என்பதே அவரது பெற்றோரின் கனவாக இருந்தது. ஆனால் அவர் நுழைவுத் தேர்வில் வெற்றி தேர்ச்சி பெறவில்லை.
மற்றொரு கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் சேர்ந்தார். பிரபல ஆட்டோ தயாரிப்பு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். ஆனால் இங்கு சம்பளம் மிகவும் குறைவு.
ஜெய் ஒவ்வொரு ட்ரக் விற்பனைக்கும் கமிஷன் பேசிக்கொண்டு அதற்கான தொகையைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் ஜெய் பங்கேற்றார். அதில் அவர் வேலை செய்த நிறுவனத்தின் போட்டியாளரும் பங்கேற்றிருந்தனர். ஜெய் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்வதை கவனித்து அவர்கள் நல்ல சம்பளத்தும் வேலை வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
”என்னை ட்ரக் விற்பனை செய்ய பார்மர் பகுதிக்கு மாற்றினார்கள். அது ராஜஸ்தானின் பாலைவனப் பகுதி. அப்படிப்பட்ட இடத்தில் கிளையண்டை சந்தித்து விற்பனை செய்வது கடினமாக இருந்தது. ஆனால் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய ட்ரக்களின் தேவை அதிகம் இருப்பதை கவனித்தேன்,” என்கிறார் ஜெய்.
ஜெய் அதிகம் யோசிக்காமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தொழில் முயற்சியில் இறங்க அதுவே சரியான சமயம் என்று அவருக்குத் தோன்றியது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார். ட்ரக், ஸ்பேப் பார்ட்ஸ், ட்ரெய்லர்ஸ் என மூன்று வகையான தயாரிப்புகளில் ஈடுபடத் தீர்மானித்தார். CoreB Group நிறுவினார்.
இந்தியாவில் அலுமினியம் ட்ரெய்லர்களையும் 52 டன்னர் ட்ரெய்லர்களையும் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் CoreB Group.
2017-ம் ஆண்டு 800 ட்ரெய்லர்களாக இருந்த ஆண்டு உற்பத்தித் திறன் கடந்த நிதியாண்டில் 2,000 ஆக அதிகரித்து 40 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டிருந்தது. இந்த நிதியாண்டில் 100 கோடி ரூபாய் என்கிற இலக்கி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா