கரும்பு சக்கைகள் கொண்டு பயோ செங்கல் உருவாக்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள்!
இரண்டு ஆராய்ச்சியாளர்களால் கரும்பு சக்கைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புதுமையான பயோ செங்கல் களிமண் செங்கலுக்கு சிறந்த மாற்றாகும்.
மாசு நம் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இயற்கை வளங்கள் வேகமாக அழிந்து வருகிறது. துணிப்பைகள் பயன்படுத்துதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், மின்சார வாகனம் என அனைத்து பிரிவுகளிலும் உலகளாவிய இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
கட்டுமானத்திற்கு வழக்கமான களிமண் செங்கலுக்கு மாற்றாக பயோ செங்கல் பயன்படுத்தப்படுவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளில் ஒன்றாகும். கரும்பில் இருந்து சாறு பிழியப்பட்ட பிறகு மீதமிருக்கும் சக்கைகளில் இருந்து தயாரிக்கப்படுவதே இந்த பயோ செங்கலின் சிறப்பம்சமாகும்.
ஐஐடி ஹைதராபாத்தின் வடிவமைப்புத் துறையைச் சேர்ந்த ப்ரியாபிரதா ரௌத்ரே என்கிற பிஎச்டி ஆராய்ச்சி மாணவர், புவனேஷ்வரில் உள்ள KIIT கட்டிடக்கலை பள்ளியில் துணை பேராசியரான அவிக் ராய் ஆகியோர் இணைந்து இந்த பயோ செங்கலை உருவாக்கியுள்ளனர்.
ஐஐடி ஹைதராபாத் வடிவமைப்புத் துறைத் தலைவரான பேராசிரியர் தீபக் ஜான் மேத்யூ, ஆஸ்திரேலியா ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் போரிஸ் எய்சன்பர்ட் ஆகியோரின் வழிகாட்டலுடன் தற்போது இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவிக் இந்தத் திட்டம் குறித்து கூறும்போது,
“பயோ செங்கல் களிமண் செங்கலுக்கு சிறந்த மாற்றாக இருப்பதுடன் இவை உற்பத்தி செய்யும் கரியமில வாயு அளவைக் காட்டிலும் அதிகளவில் உள்வாங்கும் தன்மை கொண்டது,” என்று Edex Live உடனான உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
ஐஐடி ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பயோ செங்கலுக்கு சுமார் 900 கிராம் கரும்பு சக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எரிக்கப்படும்போது 639 கிராம் கரியமில வாயு வெளியேறும். வளி மண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை உள்வாங்கிக்கொள்ளும் என்பதே இந்த செங்கலின் தனித்துவமான அம்சமாகும். ஒவ்வொரு பயோ செங்கலும் 322.2 கிராம் கரியமில வாயுவை உள்வாங்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என இந்தக் குழு கணிக்கிறது.
பருத்தி செடி, கோதுமை வைக்கோல், நெல் வைக்கோல், கரும்பு சக்கை போன்ற உலர்ந்த வேளாண் கழிவுகளை தேர்வு செய்வது இந்த செங்கற்களை தயாரிப்பதற்கான முதல் பணியாகும். பயோ செங்கலின் முதல் மாதிரியை உருவாக்க கரும்பு சக்கையைப் பயன்படுத்த இக்குழுவினர் தீர்மானித்தனர் என என்டிடிவி தெரிவிக்கிறது.
கரும்பு சக்கைகள் துண்டாக்கப்பட்டு சுண்ணாம்பு சார்ந்த குழம்பில் சேர்க்கப்படுகிறது. இது கைகளாலோ அல்லது மெக்கானிக்கல் மிக்சரைக் கொண்டோ நன்றாக கலக்கப்படுகிறது.
இந்தக் கலவை தயாரானதும் தேவையான வடிவத்தையும் அளவையும் பெற அச்சுகளில் வார்க்கப்பட்டு மரத் துண்டுகளால் அழுத்தப்படுகிறது. அச்சில் வார்க்கப்பட்ட கலவை ஓரிரு நாட்கள் உலரவிடப்படுகிறது. அதன் பிறகு அச்சு அகற்றப்பட்டு அடுத்த 15-20 நாட்கள் வரை வெயிலில் உலர வைக்கப்படுகிறது. செங்கற்கள் ஈரம் இல்லாமல் காற்றில் உலர வைக்கப்பட்டு உறுதித்தன்மை பெற கூடுதலாக ஒரு மாதம் தேவைப்படும்.
வழக்கமான செங்கற்கள் போலல்லாமல் இந்த பயோ செங்கற்களை மரம் அல்லது உலோகங்கள் இணைத்து கட்டப்படும் கட்டிட அமைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். கரியமில வாயுவை உள்வாங்குவதுடன் வெப்பமோ ஒலியோ உட்புகாமல் பாதுகாக்கும். அத்துடன் வீட்டின் வெப்பநிலை பராமரிக்கப்படுவதற்கும் உதவும்.
”பயோ செங்கற்கள் மட்டுமல்லாது இந்த மூலப்பொருட்களை பேனல் போர்டாகவோ அல்லது இன்சுலேஷன் போர்டாகவோ பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பொருளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை வடிவமைப்பாளர்களாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்று என்டிடிவி உடனான உரையாடலில் ப்ரியாபிரதா குறிப்பிட்டார்.
சமீபத்தில் ஹைதராபாத்தின் தேசிய கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Rural Innovators Start-Up Conclave 2019 நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடு கட்டுமான நடைமுறைக்காக இந்தப் புதுமையான பயோ செங்கல் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றது.
கட்டுரை: THINK CHANGE INDIA