ஆடு வளர்ப்பில் ரூ.1 கோடி வருமானம்: அசத்தும் ஓய்வு பெற்ற அதிகாரி!
விவசாயிகள் விவசாயம் மட்டுமன்றி, விவசாயம் சார்ந்த துணை தொழில்களான ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், விவசாயத்தால் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டிக் கொள்ளவும் முடியும்.
விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால், அந்த விவசாயத்தின் முதுகெலும்பு பருவமழை. இது அடிக்கடி பொய்த்து விடுவதால், கடன் சுமை விவசாயிகளின் தலையில் ஏறி அவர்களைத் தடுமாறச் செய்கிறது. எனவே, விவசாயிகள் விவசாயம் மட்டுமன்றி, விவசாயம் சார்ந்த துணை தொழில்களான ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு, விவசாயத்தால் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டிக் கொள்ளவும் முடியும் என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள கம்மாளம்பூண்டி பகுதியைச் சேர்ந்த சுப்பையா.
வணிக வரித்துறையில் இணை ஆணையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுப்பையா, தனது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு, இப்பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் மற்றும் ஆடு, கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் நமக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
“நான் கடந்த 6 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இருப்பதிலேயே அதிக வருமானம் ஈட்டும் தொழில் என்றால் அது ஆடு வளர்ப்புதான்,” என்கிறார்.
இவர் தனது நிலத்தில் ஆடு, கோழி வளர்ப்பு, மீன் பண்ணை போன்றவற்றை செய்து வந்தாலும், ஆடு வளர்ப்பில் மட்டுமே ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை வருமானம் பார்க்கலாம் என்கிறார்.
ஆடு வளர்ப்பு குறித்தும், அதில் வருமானம் பெறும் முறை குறித்தும் அவர் மேலும் கூறியது, ஆடுகளில் 2 வகைகள் உள்ளன. இதில் செம்மறியாடு வகை ஆண்டுக்கு 1 முறை, 1 குட்டி மட்டுமே ஈனும். ஆனால் வேகமாக வளரும், விரைவில் அதிக எடை உடையதாக மாறி விடும்.
வெள்ளாடுகள் ஆண்டுக்கு 2 முறை, ஓவ்வொரு ஆடும் 2 குட்டிகளை ஈனும். இதில் முதலில் ஈன்ற குட்டி அடுத்த 6 மாதங்களில் கருத்தரித்து குட்டி ஈனும். இவ்வாறு நாம் குறைந்தபட்சம் கணக்கிட்டால் 1 வெள்ளாட்டின் மூலம் நமக்கு ஆண்டுக்கு 6 குட்டிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
நான் இங்கு எனது பண்ணையில் 500 ஆடுகளை வளர்த்து வருகிறேன். அப்படியென்றால் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 3000 ஆடுகள் வரை எனக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஓர் ஆடு சராசரியாக 18 முதல் 20 கிலோ வரை இருக்கும். ஆடுகளை நான் எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை செய்வதில்லை. எடையின் அடிப்படையில் விற்பனை செய்கிறேன்.
கிலோ ரூ.250 என விலை நிர்ணயித்துள்ளேன். இதனால் ஓரு ஆடு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனையாகிறது. அப்படியென்றால் 500 ஆடுகள் மூலம் குறைந்தபட்சம் ஓராண்டில் 3 ஆயிரம் ஆடுகள் கிடைக்கின்றன. இவற்றை குறைந்தபட்சமாக ஆடொன்றுக்கு ரூ.4 ஆயிரம் என விற்பனை செய்தால்கூட ஆண்டுக்கு ரூ. 1 கோடி முதல் ஓன்றகால் கோடி வரை சம்பாதிக்கலாம்,” என்கிறார்.
இதில், தொழிலாளர்களின் கூலி, ஆடுகளின் தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவு என அனைத்தயும் கழித்துவிட்டுப் பார்த்தால் கூட குறைந்தபட்சம் ரூ.75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை தாராளமாக சம்பாதிக்க முடியும் என்கிறார்.
ஆனால், இதற்கு குறைந்தபட்சம் 7 ஏக்கர் நிலமாவது வேண்டும். மேலும், தரமான ஆட்டுக்குட்டிகளை வாங்கி, முறையாகப் பராமரிக்கவேண்டும். அப்போதுதான் இத்தொழிலில் எண்ணிய லாபத்தை ஈட்ட முடியும்.
ஆடுகளுக்குகென கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, கடலை உமி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துப் பொருள்களை வாங்கி, இவற்றை அதற்கென உள்ள இயந்திரத்தில் அரைத்து ஆடுகளுக்கு வழங்குகிறார். மேலும், தனது நிலத்தில் ஆடுகளுக்காக மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி, அதில் சிறப்பான, தரமான வகையிலான புல் ரகங்களை வளர்த்து வருகிறார்.
இவற்றை வாரத்தின் 7 நாள்களுக்கேற்றவாறு பிரித்து ஆடுகளை ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு பகுதியில் மேய விடுகிறார். அவர் இதுகுறித்து கூறும்போது,
“கருத்தறித்த ஆடுகளை, மற்ற ஆடுகளில் இருந்து தனியாக பிரித்துவிடுவோம். அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்குவோம். இதேபோல, குட்டி ஈன்ற ஆடுகளையும், அதன் குட்டிகளையும் தனித்தனியாக பிரித்து வைத்து பராமரித்து வருவோம். முறையான கால இடைவெளியில் அவற்றுக்கு தடுப்பூசி போன்றவை அளிப்பதால் எங்கள் பண்ணையில் உள்ள ஆடுகள் மிகுந்த ஆரோக்கியத்துடன் உள்ளன.”
ஆடுகள் சுகாதாரமான முறையில் வாழ, அவற்றின் கூண்டுகளை தரையில் இருந்து 6 அடி உயரத்தில் இரும்புச் சட்டங்கள் அமைத்து, அதில் யூக்ளிப்டஸ் எனும் மலைப் பகுதிகளில் வளரும் தைல மரங்களைக் கொண்டு, மரச்சட்டங்களை தரைத்தளமாக அரை அங்குல இடைவெளியில் அமைத்துள்ளோம். இதன் மூலம் ஆடுகளின் புழுக்கை போன்ற கழிவுகள் கீழே விழுந்துவிடும். அவற்றை சேகரித்து உரமாக பயன்படுத்தலாம். ஆடுகளும் நல்ல காற்றோட்டமான, சுகாதாரமான சூழலில் வசிக்க இயலுகிறது என்றார்.
ஆடு வளர்ப்புத் தவிர, கோழி வளர்ப்பின் மூலமும் ஆண்டுக்கு 6, 7 லட்சங்களை சம்பாரித்து வரும் இவர், ஆடு வளர்ப்பே நல்ல லாபம் தரும் தனது பிரதான தொழில் என்கிறார். தனது நிலத்தில் குட்டைகளை அமைத்து, அதில் பல்வேறு வகையான மீன்களை வளர்த்து விற்பனை செய்து, அதன் மூலமும் வாரந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். தனது நிலத்தின் ஓர் பகுதியில் நெல், உளுந்து, துவரை போன்றவற்றையும் பயிர் செய்து வருகிறார்.
இவ்வாறு விவசாயிகள் விவசாயத்தை மட்டும் சார்ந்திருக்காமல், தங்களிடம் உள்ள நிலம் மற்றும் மூலதனத்தைப் பொறுத்து, ஆடு, கோழி வளர்ப்பு போன்ற தொழில்களிலும் ஈடுடவேண்டும் என மற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் இவர், வாரந்தோறும் புதன்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை ஆடு வளர்ப்பது குறித்து இலவச வகுப்புகளும் நடத்துகிறார்.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இவ்வகுப்பில் ஆடு வளர்ப்பு தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து மற்றவர்களையும் இத்தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கிறார்.
விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருள்களுக்கு எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பதால், 5 ஏக்கர் நல்ல நீர் வசதியுள்ள நிலம் மட்டும் இருந்தால் போதும், விவசாயி, யாரையும் எதிர்பார்த்து வாழத் தேவையில்லை, தற்சார்புடன் வாழலாம் எனகிறார்.
அரசு அதிகாரியாக வாழ்நாள் முழுவதும் உழைத்துவிட்டு, ஓய்வு பெற்றபின்னும் ஓய்ந்திருக்காமல், விவசாயிகளின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் தானும் உழைத்து, மற்றவர்களையும் உழைத்து உயரத் தூண்டும் சுப்பையா, வயதில் மூப்படைந்தாலும், எண்ணத்திலும், செயல்களிலும் இளைஞராகவே பரிணமிக்கிறார் என்றால் மிகையல்ல.
இலவசப் பயிற்சிக்கு தொடர்பு கொள்க: சுப்பையா - 9884301017