[டெக்30] பாதுகாப்பாக தேங்காய் பறிக்க உதவும் ரோபோடிக் இயந்திரம் உருவாக்கிய சென்னை நிறுவனம்!
சென்னையைச் சேர்ந்த மேகரா ரோபோடிக்ஸ் நிறுவனம், விவசாயம், மருத்துவம் மற்றும் மனிதநேய பயன்பாடுகளுக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை உருவாக்கி வருவதற்காக யுவர்ஸ்டோரியின் டெக் 30 -2020 பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா; உலகின் மிகப்பெரிய தேங்காய் உற்பாதி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. பொதுவாக, உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பது என்பது இடர் மிக்கதாக இருக்கிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னையைச் சேர்ந்த மேகரா ரோபோடிக்ஸ் (Megara Robotics) செய்ற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் சார்ந்த தேங்காய் பறிக்கும் சாதனத்தை உருவாக்கியுள்ளது. 'அமரன்' எனும் இந்த இயந்திரம், தரையில் இருந்து வீடியோ மூலம் தேங்காய் பறிக்கை வழி செய்கிறது.
2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்ட நிறுவனம், மரத்தில் ஏறுவதால் எற்படும் இடரை குறைக்க உதவுவதற்காக யுவர்ஸ்டோரியின் 'டெக் 30' 'Tech30' பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் துறையில் உள்ள அதிக இடர் காரணமாக, பாரம்பரியமாக தேங்காய் பறிப்பதில் ஈடுபட்டு வந்தவர்கள் இதில் ஈடுபட தயக்கம் காட்டுவதால், ஆட் பற்றாக்குறை இருப்பதாக மேகரா ரோபோடிக்ஸ் நிறுவனர் ராஜேஷ் மேகலிங்கம் கூறுகிறார்.
எப்படி செயல்படுகிறது?
கேரளாவில் 180 மில்லியன் தென்னை மரங்கள் இருப்பதகாவும், இவற்றில் இருந்து தேங்காய் பறிக்க 50,000 பயிற்சி பெற்ற மரம் ஏறுபவர்கள் தேவை என்றும் ராஜேஷ் கூறுகிறார். ஆனால், நடைமுறையில் 7,000 பேர் மட்டுமே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்குத் தீர்வாக உருவாக்கப்பட்டுள்ள மரம் ஏறும் ரோபோ அமரன், நேரடி வீடியோ மூலம், எந்த கிளைகளில் இருந்து தேங்காய் பறிக்க வேண்டும் என்பதை மவுஸ் கிளிக் மூலம் தேர்வு செய்ய வைக்கிறது. மனிதர்கள் மரம் ஏறுவதை இது தவிர்க்கிறது.
“அமரன் இயந்திரத்தில் உள்ள ஆறு கைகள் மூலம், மர உச்சியில் எந்த இடத்தில் வேண்டுமானால் காய்களை பறிக்க முடியும். தேவையான தேங்காயை தேர்வு செய்ய மவுஸ் கிளிக் முறையை கொண்டுள்ளது. நேரடி வீடியோ மூலம், இதை இயக்குபவர் தேங்காய் பறிக்க வேண்டிய கிளையை தேர்வு செய்யலாம்.
இதில் உள்ள ஐ.ஓ.டி அமைப்பு மரம் தொடர்பான தகவல்களை சேகரிக்க உதவுகிறது, என்கிறார் ராஜேஷ்.
ஆய்வில் இருந்து துவக்கம்
ராஜேஷ் மேகலிங்கம், ரிசர்ச் லேப் ஹுயுமனடேரியன் டெக்னாலஜி லேப்ஸ் (HuT Labs) இயக்குனராகவும் இருக்கிறார். அமிர்தா வித்யாபீடம் பல்கலையின் அமிர்தா பொறியியல் கல்லூரியில் இந்த மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் ராஜேஷ் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.
2014ல் ஆளில்லா இயந்திரங்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்கும் யோசனை அவருக்கு உண்டானது. இந்த எண்ணமே தேங்காய் பறிக்கும் ரோபோவாக உருவானது.
“நிலையான மற்றும் வர்த்தகத் தன்மை கொண்ட அமரன் இயந்திரத்தை உருவாக்க 12 முன்னோட்ட மாதிரிகளை உருவாக்க வேண்டியிருந்தது,” என்கிறார் ராஜேஷ்.
ராஜேஷ் இந்தத் துறை தொடர்பாக பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். நான்கு காப்புரிமைகளையும் பெற்றிருக்கிறார்.
வர்த்தக மாதிரி
நிறுவன வருவாய் பற்றி பேசும் போது, அமெரிக்காவிலும் காப்புரிமை பெற்றிருப்பதால், தென்னை மர உரிமையாளர்களுக்கு நேரடியாக இயந்திரத்தை விற்பது அல்லது வாடகைக்கு விடுவதன் மூலம் வருவாய் வருவதாக ராஜேஷ் கூறுகிறார்.
இன்னமும் எந்த இயந்திரத்தையும் நிறுவனம் விற்கவில்லை என்றாலும், 15 விவசாயிகள் முன்னோட்ட அடிப்படையில் இதை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கிறார். இந்த இயந்திரம் 5 முதல் 10 லட்சம் வரை விலை கொண்டதாக இருக்கலாம்.
“நூற்றுக்கணகான தென்னை மரங்கள் கொண்ட விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் கொண்ட தேங்காய் தொழில் உரிமையாளர்கள் மற்றும் வீட்டில் மரங்கள் கொண்டவர்கள் என மூன்று இலக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். பஞ்சாயத்துகள் இந்திய இயந்திரங்களை வாங்கி வாடகைக்கு விடும் சாத்தியம் இருக்கிறது,” என்கிறார் ராஜேஷ்.
இதே போன்ற இயந்திரங்கள் சந்தையில் இல்லை என்று கூறும் ராஜேஷ், தற்போதுள்ள இயந்திர மாதிரிகள் வரம்புகள் கொண்டவை மற்றும் இவற்றுடன் ஒருவர் மரமேறும் அவசியம் கொண்டிருப்பதால் இடர் மிக்கவை என்கிறார்.
“மரமேறுபவர் மேலே மாட்டிக்கொள்ளும் அல்லது இயந்திரக் கோளாறால் கீழே விழும் அபயாம் இருப்பதாகச் சொல்கிறார்.
நிதி
கேரளாவின் கொல்லத்தில் உள்ள அமிர்தா பொறியியல் கல்லூரியில் இன்குபேஷன் பிரிவில் நிறுவனம் உண்டானது. இதுவரை நிறுவனம் ரூ.35 லட்சம் நிதி திரட்டியுள்ளது. பல்கலை வேந்தர் அமிர்தானந்த மாயி உள்ளிட்ட ஏழு உறுப்பினர்க்ள் இதன் வழிகாட்டியாக உள்ளனர்.
பல்வேறு வழிகளில் இருந்து முதலீட்டை எதிர்பார்ப்பதாக கூறும் ராஜேஷ், அடுத்த 18 மாதங்களில், இந்த இயந்திரத்தை வர்த்தக நோக்கில் கொண்டு செல்லத் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ராசி வர்ஷனி | தமிழில்- சைபர்சிம்மன்