கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோபோக்கள்; எங்கே தெரியுமா?
இந்த ரோபோக்கள் கிருமிநாசினி, நாப்கின், முகக்கவசம் ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதுடன் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிக்கிறது.
இன்று தொழில்நுட்பம் புதுமைகளைப் புகுத்தி பல்வேறு துறைகளை மேம்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று உருவான சீனாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்காமல் இருப்பதற்காக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்துகளும் உணவுப்பொருட்களும் வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன.
அதேபோன்று கேரளாவில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் முதலில் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. ஆரம்பத்தில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது இங்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி தற்போது 22 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 12,000-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் பல விதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க ரோபோக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதில் இரண்டு ரோபோக்கள் காணப்படுகிறது. ஒரு ரோபோ முகக்கவசம் அணிந்துகொண்டு கிருமிநாசினி, நாப்கின், முகக்கவசம் ஆகியவற்றை மக்களுக்கு வழங்குகிறது. மற்றொரு ரோபோ மக்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறது.
இந்த ரோபோவை கேரளாவைச் சேர்ந்த ‘அஸிமோவ் ரோபோடிக்ஸ்’ (Asimov Robotics) என்கிற ஸ்டார்ட் அப் உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ரோபோக்கள் தற்போது கேரள அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பயனுள்ள தகவல்கள் கொண்ட வீடியோக்களை காட்சிப்படுத்தும் வகையில் இந்த ரோபோக்களை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அஸிமோவ் ரோபோடிக்ஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜெயகிருஷ்ணன் இந்த வீடியோவில் தெரிவித்தார்.
மேலும் இந்த வீடியோவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலை ஒரு ரோபோ வழங்குகிறது. இதற்கிடையில் அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஆதரவளிக்கவேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.