பணியிடத்தில் ரொமான்ஸ் செய்பவரா நீங்கள்? - உங்கள் கவனத்துக்கு 4 விஷயங்கள்
அலுவலகம் என்றாலே வேலை, வேலை, வேலை மட்டுமே என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. வாட்ஸ்அப், டீம், ஜூம் மீட்டிங் என டிஜிட்டல் யுகத்தில் உறவுகள் மலர்வதற்கும், காதலைப் பரிமாறுவதற்கும் சாத்தியங்கள் அதிகரித்துவிட்டன.
ஒத்த சிந்தனையோட்டம், பொதுவான குணநலன்கள், ஒரே மாதிரியான அணுகுமுறைகள், கொள்கைகள், பழக்க வழக்கங்கள் என பல விஷயங்கள் ஒத்துப்போவதன் காரணமாக உறவுகளும் எளிதில் உதயமாகிவிடுகின்றன.
இந்த அகம் சார்ந்த விஷயங்களைத் தாண்டி புறம் சார்ந்த ஈர்ப்புகளும் ரொமான்ட்டிக் உறவுகளுக்கு வித்திடுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதற்கு டிஜிட்டல் யுகம் துணைபுரிவதால்தான் எளிதில் காதலும் உறவும் வசமாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பணியிடத்தில் ரொமான்ஸ்
சமீபத்தில் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பணியிடங்களில் பழகி காதல் திருமணம் செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக இருப்பது தெரியவந்துள்ளது. தங்களுக்கு ஏற்ற இணையரைத் தேர்ந்தெடுப்பதில் பணியிடம்தான் சரியான சாய்ஸ் என்பதையே இது காட்டுகிறது.
சரி, இதெல்லாம் இருக்கட்டும். பணியிடங்களில் ரொமான்ஸ் என்பது நம்மில் பலராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட சூழலில், அத்தகைய காதலும் உறவும் மலரும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் உளவியல் நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.
இவை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளை மையமாகக் கொண்டவைதான் என்றாலும், நம் மண்ணுக்கேற்ப நாமும் பொருத்திப் பார்த்து கவனத்துடன் கையாள்வது சிறப்பு.
‘ஹைராக்கி’ ஜாக்கிரதை
பணியிடத்தில் சக ஊழியர், நமக்கு இணையான பொசிஷனில் உள்ளவர் மீது காதல் கொள்வது பெரிய அளவில் கரியரில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், நாம் காதலிப்பவர் நம்மை விட குறைவான பொசிஷனில் இருந்தாலோ அல்லது நம்மை விட உயர் பொறுப்பில் ‘பாஸ்’ ஆக இருந்தாலோ ரிலேஷன்ஷிப்பை மிக கவனமாக அணுக வேண்டும்.
குறிப்பாக, உயர் பொறுப்பில் உள்ளவர்களை காதலிப்பவர்கள் தங்களது கரியரில் மிகப் பெரிய பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில், பணியிடத்தில் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தன் கைமீறிப் போயிவிடுவார் என்ற இன்செக்யூரிட்டி காரணமாகவும் தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் போன்றவை உயர் பொறுப்பில் உள்ளவரால் மறுக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
அதேபோல், என்னதான் திறமைக்கு ஏற்ற பலன்கள் கிடைத்தாலும், ‘உயர் பொறுப்பில் உள்ளவருடன் உறவில் இருப்பதால் இதெல்லாம் கிடைத்தது’ என அலுவலகத்தில் முணுமுணுக்கப்படுவது அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.
பர்ஃபார்மன்ஸில் பாதிப்பு
பணியிடத்தில் நம் மனம் காதலில் திளைத்தால், அது நிச்சயம் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, ஒரு ரிலேஷன்ஷிப்பின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களின் எண்ண ஓட்டம் எந்நேரமும் காதல் சார்ந்தே இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இது, பணிச் சூழலையும் பணியையும் வெகுவாக பாதிக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
அதேநேரத்தில், மனமுதிர்ச்சியுடன் அணுகும் பட்சத்தில், இப்பிரச்சினையை தவிர்க்க முடியும் என்றும் அழுத்தமாக சொல்கின்றனர். நம் பக்கத்துக்கு சீட்டிலேயே காதல் இணையர் இருந்தாலும் பக்குவமாக வேலை நேரத்தில் பணியில் மட்டுமே கவனம் செலுத்துவோருக்கு இந்த உளவியல் சிக்கல் இருக்காது.
நிறுவனக் ‘கொள்கை’ என்ன?
சில நிறுவனங்களில் வேலைக்கு சேரும்போதே உறவுகள், தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்தவற்றை அணுகும் போக்கு குறித்து தெளிவாக எடுத்துச் சொல்வது உண்டு. அப்படி நேரடியாகச் சொல்லாத நிறுவனங்களின் எழுத்துபூர்வ நிபந்தனைகளை உங்களது அப்பாயின்ட் ஆர்டரில் மீண்டும் வாசித்துப் பார்ப்பது நல்லது.
அலுவலகத்தில் வாய்ப்பு கிடைக்கும்போது தன் காதல் இணையருடன் ஹக் செய்தல், முத்தமிடுதல் போன்றவற்றை பலராலும் தவிர்க்க முடியாது. ஆனால், அதுபோன்ற செய்கைகளை நிறுவனம் அறிந்தால் எப்படி அணுகப்படும் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
ஓர் ஊழியரின் பிரைவசிக்கு இடம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நெருக்கமான எந்த ஒரு நிகழ்வும் பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல் முதலான குற்றச்சாட்டுகளாக மாற நேர்ந்தால் என்னாவது என்பதையும் யோசித்து செயல்படுவது நல்லது.
குறிப்பாக, ஓர் உயர் பொறுப்பில் உள்ளவர் தனக்கு கீழ் பணிபுரிபவரிடமும், ஓர் ஊழியர் தனது உயரதிகாரியிடமும் உறவு ரீதியில் நெருக்கம் காட்டுவதை பெரும்பாலான நிறுவனங்களை நெகட்டிவாகவே பார்த்தையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
பிரேக்-அப் ஆனால்..?
தற்கால பணியிடச் சூழல் என்பது உறவுகள் மலர்வதற்கு எந்த அளவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறதோ, அதைவிட அதிகமாக அந்த உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கான அபாயாங்களையும் அதிகமாகக் கொண்டிருக்கிறது. அனைவரிடமும் பழகுவதில் சுதந்திரம் கிட்டாமை, நண்பர்களுடன் நேரம் செலவிட முடியாமை, இன்செக்யூரிட்டி ஃபீலிங், புதுப்புது அவெய்லபிளிட்டி என பல காரணிகளால் பிரேக்-அப் என்பது இப்போதெல்லாம் லஞ்ச் ப்ரேக் மாதிரி இயல்பாகிவிட்டது.
ஆனால், நம்மில் பலரும் இதை இயல்பாக எடுத்துக்கொள்வது இல்லை. உறவு விரிசலால் மனமுடைவது, மன அழுத்தத்துக்கு ஆளாவது என உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதுபோன்ற காரணங்களால் பணியிடத்தில் இயல்பாகவே நம் பர்ஃபார்மன்ஸ் குறையும். எதிலுமே பிடிமானம் இல்லாமல் போகும். இது நம் பணியிட முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும்.
காதலால் கரியர் காலியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற சூழல்களுக்கு ஆளானோரை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு நிறுவனங்கள் கவுன்சிலிங் போன்ற வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
கட்டுரையாளர் - ஜெய்
(இக்கட்டுரையில் உள்ள கருத்துக்கள் கட்டுரையாளருடையது. இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.)