கூடிய விரைவில்: ரஷ்யாவில் கிரிப்டோவை சட்டப்பூர்வமாக்கத் திட்டம்!
பணம் செலுத்தல் முறையில் கிரிப்டோ சட்டப்பூர்வமாக அறிவிப்பது குறித்து ரஷ்யா ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கிரிப்டோ தடை கோரிக்கைகள் அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநரிடம் இருந்து எழுந்து வரும் நிலையில் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கான ஒரு வடிவமாக கிரிப்டோக்களை ரஷ்யா சட்டப்பூர்வமாக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மாந்துரோவ் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
"அரசாங்கம் கிரிப்டோகரன்சிகளை சரியான நேரத்தில் பணம் செலுத்தும் வடிவமாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார் என்று ராய்ட்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது. இது ரஷ்ய அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்குமான சிந்தனை வேறுபாட்டை காட்டுகிறது.
கிரிப்டோக்களை பணம் செலுத்துவதற்கான ஒரு வடிவமாக்குவதை சட்டப்பூர்வமாக்குவது குறித்த கேள்விக்கு ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மாந்துரோவ் பதிலளித்துள்ளார். அதில்,
"இது எப்போது நிகழும், எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது கேள்வி, இதுதொடர்பான செயல்பாடுகள் குறித்து மத்திய வங்கியும் அரசாங்கும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது," என குறிப்பிட்டார்.
மேலும் இதுகுறித்து கூறுகையில், "இருப்பினும் அனைவரும் இதை புரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். விரைவிலோ அல்லது பின்னரோ, ஏதேனும் ஒரு வடிவத்திலோ அல்லது வேறு வடிவத்திலோ செயல்படுத்தப்படும்," என கூறினார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்குவதற்கு முன்னதாக, கிரிப்டோகரன்சிகளை தடை செய்ய வேண்டும் என்ற அந்நாட்டு மத்திய வங்கியின் விருப்பத்துடன் ரஷ்ய நிதி அமைச்சகம் வேறுபட்டு நின்றதாக கூறப்படுகிறது.
மத்திய வங்கி ஆளுநர் எல்விரா நபியுல்லினா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ரஷ்யாவில் கிரிப்டோ முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் அதோடு ரஷ்யாவில் கிரிப்டோவை தடை செய்ய வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தனர். இந்த நிலையில் அரசாங்கம் கிரிப்டோவை செயல்படுத்துவதற்கு முன்பு மத்திய வங்கி உடன் இதற்கான முறைகள் வகுக்கப்படும் எனவும் ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மாந்துரோவ் தெளிவுப்படுத்தினார்.
டிஜிட்டல் நாணயமான "டிஜிட்டல் ரூபிள்" உருவாக்குவதற்கு சில அரசியல் உந்துதல் சமீபத்திய மாதங்களாக மத்திய வங்கிக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. கிரிப்டோகரன்சிகள் மீது நீண்டகாலமாக பல சந்தேகமான கண்ணோட்டத்தை கொண்ட நாடாக ரஷ்யா இருக்கிறது. தொழில்நுட்ப மோசடி அல்லது பயங்கரவாதத்திற்கான நிதியுதவி போன்றவைகளுக்கு இது வழிவகுக்கும் என்ற கருத்து அந்நாட்டில் இருந்து வருகிறது.