200 சந்தனமரங்கள்; 350 மூலிகை செடிகள்; மரத்தில் திருவள்ளுவர்; வீட்டைச் சுற்றி காட்டை உருவாக்கிய ஜஸ்வந்த் சிங்!
வானுயர்ந்த மரங்கள், கிளைபரப்பி நிற்கும் செடி, கொடிகள், மருந்து மணம் வீசும் மூலிகைகள், பூச்செடிகளில் தேன்குடித்து மயங்கும் தேனீக்கள், பழங்களை கொத்தி தின்று மகிழும் பறவைகள் என அடர்ந்த வனமாக காட்சி அளிக்கிறது ஜஸ்வந்த்தின் சென்னை இல்லம்.
‘வீட்டுக்கு பின்னாடி பத்து ஏக்கருக்கு இல்லாட்டியும், குட்டியா ஒரு தோட்டம்... அதில் சமைக்க தேவையான அத்தனை சமாச்சாரங்களும் விளையணும்... டெய்லி கூடையத் தூக்கிட்டு காய்கறி பறிச்சு பிரஷ்ஷா சமைச்சு சாப்பிடணும்’- செம பீல் கொடுக்கும் இந்த அரை நிமிட காட்சி பலருக்கும் பல நாள் கனவு.
‘கனவு இல்லம்' தாண்டி அதிலொரு ‘கனவுத் தோட்டத்தையும்' சேர்த்து கனாக் காண்பவர்களுக்கும், ‘சிட்டி'வாழ் மக்களுக்கும் வரமாய் வந்தது தான் ‘மாடித்தோட்டம்'. இக்கான்செப்டையே சற்று உல்டாவாக்கி ‘தோட்டத்துக்குள் ஒரு மாடி' என்று சொல்லும் அளவிற்கு வீட்டைச்சுற்றி ஒரு காட்டை உருவாக்கியுள்ளார் சென்னையை சேர்ந்த ஜஸ்வந்த் சிங்.
பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாய் கொண்ட ஜஸ்வந்த் சிங், பக்கா சென்னைவாசி. பிறந்து, வளர்ந்தெல்லாம் தலைநகரில் தான். முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் தரையிலும், மாடியிலும் 350 வகையான மூலிகைச் செடிகள், பழவகை, காய் வகை, பூச்செடிகள், வகை வகையான மரங்கள் தழைத்து வளர்ந்து இருக்கின்றன.
காட்டுக்குள் ஒரு வீடு போல காட்சியளிக்கும் ஜஸ்வந்தின் இல்லம் கண்களுக்கு விருந்து. கட்டுமானத் தொழில்புரிந்து வரும் ஜஸ்வந்த் சிங், கடந்த 35 வருடங்களாக வீட்டுக்குள் மினி காட்டை உருவாக்கி வருகிறார். இதற்கெல்லாம் அடித்தளமாய் இருந்துள்ளது ஒருசின்ன துளசிச் செடி.
“மனிதன் உணவு, நீர் இல்லாமல் கூட சிலநாட்கள் தாக்குபிடிக்கலாம். ஆனால், சுவாசிக்க காற்று இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதற்கு எந்த மிஷினும் வாங்க போறதில்லை. அதுக்கு, செடிகளை நட்டு பசுமையா இருந்தாலே போதும். அப்படி, 18 வயதில் துளசிச் செடி ஒன்றை வாங்கி நட்டு வைத்தேன். அப்படியே, படிப்படியாக செடிகள் வாங்கி இதை உருவாக்க 35 ஆண்டுகளாகிவிட்டது. இதுவே என்னுடைய ஹாபியாக மாறிவிட்டது,'' என்றார் ஜஸ்வந்த் சிங்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மரக்கன்றுகளையும் வாங்கி வந்து வளர்த்து வரும் ஜஸ்வந்திடம், மூலிகைச் செடிகளில் மட்டும் 350வகைகள் உள்ளன. ஒவ்வொரு செடியின் பெயர், மரத்தின் விஞ்ஞானப் பெயரை போர்டில் எழுதி வைத்திருப்பதுடன், அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் அதன் பின்னாலுள்ள கதைகளையும் தெரிந்து வைத்துள்ளார்.
வசம்பு, ஆடாதொடை, சித்தரத்தை, இனிப்பு துளசி, திப்பிலி, பிரண்டை, வெட்டிவேர், நொச்சி, வல்லாரை போன்ற மருத்துவக் குணம் வாய்ந்த தாவரங்களும், அன்றாட தேவைகளுக்கான காய்கறி வகைகளாக, தக்காளி, பீன்ஸ், வெண்டை, கத்திரிக்காய், பாகற்காய் என பல வகையான காய்கறி செடிகளும் விளைந்து கிடக்கின்றன.
“கிச்சனில் இருந்து கொண்டே என்ன காய் சமைக்க தேவை என்று பார்க்கிறேன். சாம்பார் வைக்கப்போறேன்னா பின்னாடியே முருங்கைகாய் இருக்கு, 2 தக்காளி பறிச்சாலே போதும். இல்லாட்டி, வண்டி எடுத்து கடைக்கு போய் வாங்கணும். நேரச்செலவு, பணச்செலவு, எதுவும் இல்லை. நமக்கு சத்தான, கெமிக்கலற்ற காய்கறிகளும் கிடைக்குது. ஒரு மொட்டைமாடி இருந்தால் போதும், நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம், என்கிறார் சிங்.
மாடியில் ஒரு பிரிவாக, சீதாப்பழம், ஆரஞ்சு, டிராகன் பழம், மாதுளை, கொய்யா, பேரீச்சம்பழம்னு நிறைய பழ வகைகளும் உள்ளன. 12 மாதங்களுக்கும் சில காய்கள் காய்க்கும்.
”நிறைய இடங்களில் பழக்கன்றுகள் வாங்கி வைப்பாங்க. நல்லா வளரும், பூ பூக்கும் ஆனா, காய்க்காது. நம்மிடம் இரண்டு தேனீ பெட்டிகள் இருக்கிறது. உள்ளூர் மற்றும் ஆஸ்திரேலிய ரக தேனீக்கள் இருக்கிறது. அதனால், மகரந்தசேர்க்கை நடைபெற்று காய் காய்க்க உதவுகிறது.'' என்று ஐபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார் அவர்.
தில்லை மரம், திருவோட்டுகாய் மரம், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் போன்ற அரிய வகை மரங்களும், தமிழகத்தின் மாநில மலரான செங்காந்தள் பூவும் ஜஸ்வந்த் சிங்கின் தோட்டத்தில் பூத்துக் குலுங்குகிறது. தவிர, தோட்டத்தில் ஓங்கி வளர்ந்து இருக்கின்றன சந்தன மரங்கள்.
சந்தன மரங்களை வளர்ப்பதற்கான தடை தமிழகத்தில் 2002ம் ஆண்டில் நீக்கப்பட்டநிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே வீட்டைச்சுற்றி ஜஸ்வந்த் நட்டுவைத்த 200 சந்தனமரங்கள் இப்போது ஓங்கி நிற்கிறது.
அவற்றை விற்றால், அவர் குடியிருக்கும் இடத்தின் மதிப்பைவிட அதிகமாகவே இருக்கும் என்கிறார் அவர். சந்தன மரங்களை வளர்ப்பவர்கள் அவர்களாகவே அவற்றை வெட்டதடை இருப்பினும், ஜஸ்வந்த் அதைப்பற்றி எண்ணாமல் அவருடைய செல்லப்பிராணியை போல் மரங்களை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்.
வீட்டுக் கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தி சூரிய மின்சாரத்தை பயன்படுத்தும் அவர், மின்சார நுகர்வை மேலும் குறைப்பதற்கு வீடு முழுக்க எல்இடி பல்புகளையே பயன்படுத்திவருகிறார். அத்துடன், வீட்டுக்கு இயற்கை எரிவாயுக் கொள்கலன் (பயோ கேஸ் பிளான்ட்) அமைத்துள்ளார்.
இயற்கையுடன் இணைந்து வாழும் ஜஸ்வந்த்தின் வீடே, பல பறவைகளுக்குமான வீடு. ஆம், இயல்பாய், இயற்கையாய் பறவைகள் மரங்களில் கூடுக் கட்டி வாழ்கின்றன.
தோட்டத்திற்கு சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி, தண்ணீர் பாய்ச்சுகிறார். மேலும், பிவிசி குழாய்கள் மூலமாக அவரது மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளின் ஏ.சிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீரை சேகரித்து தோட்டத்திற்கு பயன்படுத்தி கொள்கிறார். அதனால், சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவிய காலத்திலும் ஜஸ்வந்தின் நந்தவனத்திற்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளது.
ஹாபியான தாவர வளர்ப்பையும், தொழிலாகிப் போன கட்டுமானத்தையும் இணைக்கும் ஒரு புள்ளியையும் கண்டறிந்து அதையும் செயல்படுத்தியுள்ளார் ஜஸ்வந்த். அது தான் மரவீடு. மாமரத்தின் நடுப்பகுதியில் ஓய்யாரமாய் வீற்றிருக்கிறது அழகிய சிறு மரவீடு. அதைப்பற்றி ஜஸ்வந்த் கூறுகையில்,
‘‘கட்டுமானத் தொழில்ல இருக்கிறதால, மரத்தாலான அறை ஒன்றைக் கட்ட வேண்டும் என நினைச்சேன். அதனால, என் வீட்டுல இருக்கிற மாமரத்துல, தொங்கும் அறை அமைச்சிசேன். ஓய்வு நேரங்கள்ல இந்த அறையிலதான் தங்குவேன். பெரும் சிரமங்களுக்கிடையே இந்த மர அறையை ஆறு வருடங்களுக்கு முன் அமைத்தேன். சென்னையில் வர்தா புயலின்போது பெரிய மரங்களே விழுந்தன. ஆனா, என்னுடைய இந்த மர அறை விழவில்லை. அந்த அளவுக்கு உறுதியான கட்டுமானத்தால் அமைச்சிருக்கேன்,'' என்று கூறியுள்ளார்.
மரங்களோடு கதைப்பேசி வாழும் ஜஸ்வந்த் தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் சிறப்பு ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார். அதனால், ஜஸ்வந்தின் நந்தவனத்திற்கு வருகைத்தரும் விருந்தினர்களின் எண்ணிக்கைக்கு பஞ்சமில்லை.
மாணக்கர்கள் தவிர்த்து துபாய், ஐரோப்பா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் மக்கள் ஆர்வத்துடன் தோட்டத்தை விசிட் அடிக்கிறார்களாம். ஜஸ்வந்தின் தோட்டத்தில் கண்டு களிக்க பல அரிய வகை மரங்கள் இருக்கும் அதே வேளை பிரமிக்க வைக்கும் வகையில், சந்தன மரத்தில் திருவள்ளூவர் உருவம் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும், ஜஸ்வந்தின் கைவண்ணத்திலே!
“எனக்கு தமிழ் ஆர்வம் அதிகம். 1330 திருக்குறள்களும் மனப்பாடமாக தெரியும். நான் அரசு அனுமதி பெற்று 16 வருடங்களுக்கு முன்பு என் வீட்டை சுற்றி சந்தன மரக்காடு உருவாக்கினேன். அதில் 200 சந்தன மரங்கள் உள்ளன. அவைகளில் 50-க்கு மேற்பட்டவைகள் முற்றி, நன்றாக வளர்ந்துவிட்டன. அதில் முற்றி வளர்ந்த 16 வயதான 30 அடி உயர சந்தன மரத்தில் திருவள்ளுவர் உருவத்தை வடிக்க முயற்சித்தேன். பல நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக நானே, மரத்தில் திருவள்ளுவர் உருவத்தைச் செதுக்கினேன்.
நான் வளர்த்த சந்தன மரத்தில் நானே அவரது சிற்பத்தை வடிவமைத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி. சந்தன மர சிற்பம் ஒரு அடி உயரமும், அரை அடி அகலமும் கொண்டது. அதேபோல், மாமரத்திலும் 3 அடி உயரத்திலும் இரண்டரை அடி அகலத்திலும் இன்னொரு திருவள்ளுவர் சிற்பமும் வடித்துள்ளேன்,'' என்று தினதந்தியிடம் தெரிவித்துள்ளார் ஜஸ்வந்த்.
சிங் ஜி... யூ ஆர் கிரேட்!
தகவல் உதவி: ஐபிசி தமிழ் | நியுஸ் ஜெ படங்கள் உதவி : தி பெட்டர் இந்தியா | கட்டுரை தொகுப்பு: ஜெயஸ்ரீ