‘அப்பாவின் வாழ்க்கைப் பாடங்களை பின்பற்றி வாழ்கிறேன்' - சத்ய நாதெல்லா
தந்தையர் தினத்தன்று, தன் அப்பா மற்றும் அவர் வாழ்ந்த விதம், தனக்கு வாழ்க்கை பற்றிய புரிதலை தந்தது பற்றி விரிவாக பதிவிட்டார் மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாதெல்லா.
கடந்து சென்ற ‘தந்தையர் தினத்தை முன்னிட்டு மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாதெல்லா உருக்கமான ஒரு பதிவினை செய்தார். அதில் அவரின் கடந்த காலம் பற்றியும் அவரின் அப்பாவின் நினைவுகள் பற்றியும் பகிர்ந்தார்.
என் அப்பா பற்றிய பல நினைவலைகள் வந்து போகின்றது. குறிப்பாக பல இரவுகள் அவர் தூங்காமல் படுக்கையறையில் தடிமனான புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு தன் நினைவை விட்டு அகலவில்லை என்று லின்கிட் இல் பதிவிட்டார்.
சத்ய நாதெல்லாவின் தந்தை பி.என்.யுகாந்தர், 1962 பாட்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அவர் தனது 82 வயதில் ஹைதராபாத்தில் காலமானார்.
“என் அப்பாவுக்கு அவரது வேலை, பணி என்பதையும் தாண்டி வாழ்க்கையோடு இணைந்தது. அவர் பத்து வயது இருந்தபோது இந்தியா சுதந்திரம் பெற்றது. பின்னர் அவர் ஐஏஎஸ் தேர்வு எழுதி குடிமைப் பணிகளில் சேர்ந்தார்.”
யுகாந்தர், பிரதமர் பிவி நரசிம்ஹ ராவ் அலுவலகத்தின் கீழ், லால் பஹதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக மையத்தின் இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.
“அவருக்கு இது வெறும் தொழில்முறை பணி அல்ல, அது நாட்டுக்குச் சேவை புரிவதற்கான அழைப்பாக அவர் பார்த்தார். தன் பணி மீதான இந்த அர்ப்பணிப்பை தன் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தார், இறுதி மூச்சு வரை அதே உணர்வுடன் இருந்தார்,” என உருக்கமாக எழுதி இருந்தார் நாதெல்லா.
சத்ய நாதெல்லா, திருப்பதியில் உள்ள ஸ்ரீகாகுளம் பகுதியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கி, பின்னர் டெல்லி, முசெளரி மற்றும் ஹைதராபாத் என பல இடங்களில் படித்தார். ஐஐடி நுழைவுத்தேர்வில் தோல்வியுற்ற நாதெல்லா அமெரிக்கா சென்றார்.
“எனது தந்தை, தனது பணி மற்றும் சொந்த வாழ்க்கையை இணைத்து வாழ்ந்ததில் ஒரு ஆழமான அர்த்தம் இருந்தது. அதுவே எனக்குள்ளும் வாழ்க்கைக்கான பாடத்தையும், உலகைப் பற்றிய சரியான பார்வையையும் கொடுத்தது,” என்றார்.
ஒருவரின் உண்மையான தாக்கம், அவர் அப்பணியை விட்டுச்சென்ற பின் மதிப்பீடு செய்யும்போதே தெரியும் என நாதெல்லாவின் தந்தை குறிப்பிடுவார்.
பலவகைகளில் தன் வெற்றிக்கும், தான் இத்தகைய இடத்தை அடைந்ததற்கும் தன் தந்தையின் வாழ்க்கை நெறிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உதவியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் சத்ய நாதெல்லா.
“நாம் வழிகாட்டும் நபர், அவர் அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் கலாச்சாரமே நீண்ட நாட்கள் தாக்கத்தை வெளிப்படுத்தும். ஏற்கனவே இருக்கும் ஒன்றைப் பற்றி விரிவாக புரிந்து கொண்டு அதில் மாற்றத்தை ஏற்படுத்தி செயல்படுத்தாமல், அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, புதியதாக ஒன்றை தொடங்குபவர்களைக் கண்டு தான் சலிப்படைவதாக,” கூறுகிறார் நாதெல்லா.
சத்ய நாதெல்லா, தனது 'Hit Refresh’ என்ற புத்தகத்தில் எழுதும் போது, மார்க்சிச சிந்தனை உள்ள எனது தந்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி, என் தாய் ஒரு சம்ஸ்கிரத வல்லுனர் என குறிப்பிட்டுள்ளார்.
“நான் என் தந்தையிடம் இருந்து பலவற்றைக் கற்றிருக்கிறேன், அது அறிவுசார் தேடல் முதல் வரலாற்று மீதான காதல் வரை நீடிக்கிறது. ஆனாலும் நான் எப்போதும் அம்மாவின் பிள்ளை,” என எழுதியுள்ளார்.
இவற்றையெல்லாம் தாண்டி நான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நேரம் மற்றும் காலம் வேறாக இருந்தாலும், எப்போதும் மனிதநேயத்துடன் வாழக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். இதுவே வாழ்க்கையில் நான் கடைப்பிடிக்கும் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும் என பதிவிட்டுள்ளார் சத்யா நாதெல்லா.