Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் கல்வி கற்க பள்ளி கட்டிய காவலர்!

குழந்தைகள் கல்வி கற்க குடும்பச்சூழல் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் இந்த அற்புத சேவையை செய்கிறார்.

சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் கல்வி கற்க பள்ளி கட்டிய காவலர்!

Monday November 11, 2019 , 2 min Read

கல்வி மற்றும் கற்றலின் விளைவுதான் மாற்றம் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஏழ்மை நிலையில் இருப்போரையும் நலிந்த பிரிவினரையும் மேம்படுத்த கல்வி உதவும் என்பதை நன்கறிந்திருந்தார் ராஜஸ்தானைச் சேர்ந்த காவலர் ஒருவர். இவர் தனது பகுதிக்கு அருகில் இருக்கும் குழந்தைகள் கல்வி கற்க உதவுகிறார்.


ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த தரம்வீர் ஜக்கர் தனது பகுதியில் உள்ள நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளுக்காக ’அப்னி பாட்ஷாலா’ என்கிற இலவச பள்ளியைத் தொடங்கினார். 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி மகளிர் காவல் நிலையத்திற்கு அருகில் மாவட்ட தலைமையகத்தில் அமைந்துள்ளது. தற்போது இங்கு 450 குழந்தைகள் படிக்கின்றனர். இந்தக் குழந்தைகள் இதற்கு முன்பு சாலைகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர்.

1

இந்தப் பள்ளியில் மாணவர்களுக்குப் படிப்பு மட்டுமின்றி சீருடைகள், புத்தகங்கள், பைகள் போன்ற பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.

பள்ளி தொடங்குவதற்கான உந்துதல்

தரம்வீர் கூறும்போது,

“இந்தக் குழந்தைகளுடன் நான் பேசியபோது அவர்களுக்கு பெற்றோர்களோ உறவினர்களோ இல்லை என தெரிவித்தனர். ஆரம்பத்தில் அது பொய்யாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர்களது குடிசைப்பகுதிக்குச் சென்றபோது அது உண்மை என்பதைத் தெரிந்துகொண்டேன். இந்தக் குழந்தைகளுக்கு நான் உதவாமல் போனால் இவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்தே வீணாக்கிவிடுவார்கள் என்பதை உணர்ந்தேன். எனவே தினமும் ஒரு மணி நேரம் வகுப்பெடுக்கத் தொடங்கினேன்,” என தெரிவித்ததாக ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிடுகிறது.

இந்தப் பள்ளியில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை நடக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை 360 மாணவர்களும் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் 90 மாணவர்களும் படிக்கின்றனர்.


தினமும் குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கும் வீட்டிலிருந்து பள்ளிக்கும் ஒரு வேன் அழைத்துச் செல்கிறது. மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போவதைக் கட்டுப்படுத்த பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் இடையே சிறப்பான தகவல் பரிமாற்றம் உள்ளது. இந்தப் பணியில் இரண்டு பெண் கான்ஸ்டபிள் தரம்வீருக்கு உதவி வருகின்றனர்.

2
”பல குடும்பங்கள் இங்கு பணிபுரிவதற்காக உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹாரில் இருந்து வந்துள்ளனர். அவர்களது குழந்தைகளை படிக்கவைக்கவும் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகும் படிப்பைத் தொடரச் செய்யவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். சில குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகள் குப்பைகளை பொறுக்க அனுமதிக்காமல் போனால் படிக்க அனுப்புவதற்கு மறுக்கின்றனர். அத்தகைய குழந்தைகள் பள்ளி நேரம் முடிந்ததும் அந்தப் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பிவிடுகிறோம்,” என்று தரம்வீர் தெரிவித்ததாக ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிடுகிறது.

பள்ளியை நடத்துவதற்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட 1.5 லட்ச ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. தரம்வீருக்கு இது எளிதாக இருக்கவில்லை. இருப்பினும் ஃபேஸ்புக் பிரச்சாரங்கள் மூலம் நன்கொடை பெற்று நிர்வகித்து வருவதாக ’ஸ்டோரிபிக்’ தெரிவிக்கிறது.


கட்டுரை: THINK CHANGE INDIA