உலகப் பணக்காரர் 'பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய எலான் மஸ்க்'
உலகப் பணக்காரர் பட்டியலில் 2வது இடத்துக்கு வந்துள்ளார் எலான் மஸ்க்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் எலான் மஸ்க்.
கடந்த 20 வருடங்களாக, எலான் மஸ்க் (Elon Musk) ஒவ்வொரு பிசினஸைத் தொடங்கும்போதும் உலகம் கை கொட்டிச் சிரித்து வருகிறது. மஸ்க்குக்கு மட்டுமல்ல, முயற்சிகள் செய்யும் முன்னோடிகள் எல்லோருக்கும், மக்களின் முதல் மரியாதை இதுதான்.
பெட்ரோல் டீசல் இல்லாமல் முழுக்க முழுக்க பேட்டரியால் ஓடும் அவருடைய டெஸ்லா (Tesla) கார்களின் எண்ணிக்கை 7,20,000–க்கும் அதிகம். மஸ்க்கின் SpaceX நிறுவனத்தின் இலக்கு செவ்வாய் கிரகத்தில் மக்களைக் குடியேற்றம் செய்வது. 2010 இல் தொடங்கிய இந்த நிறுவனம் இதுவரை 82 ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தியிருக்கிறார்கள். ராக்கெட்களைத் திரும்பி வரச்செய்து, மறுபடி செலுத்தும் ஒரே நிறுவனம் SpaceX தான்.
இப்படிப்பட்ட எலான் மஸ்க்கின், டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதால், அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்களில் இருந்து 128 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் எலான் மஸ்க் உள்ளார். புதிய டெஸ்லா பங்குகள் அமெரிக்காவின் முக்கியமான பங்குப்பட்டியலான S&P 500ல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக எலான் முஸ்க்கின் சொத்து மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது.
தங்களது போட்டியாளர்களான டொயோட்டா, ஜெனரல் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களைவிடக் குறைவான வாகனங்களைத் தயாரித்தாலும், உலகின் மதிப்புமிக்க கார் நிறுவனமாக டெஸ்லா இருக்கிறது. கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
பல ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்த நிறுவனம், இப்போது தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக லாபத்தை ஈட்டி வருகிறது. பெருந்தொற்று காலத்திலும், டெஸ்லாவின் கார் விற்பனை சிறப்பாகவே இருந்து வருகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்தான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2017ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்தார். அமேசான் நிறுவனர் ஜெஃப் அவரை அந்தாண்டு பின்னுக்குத் தள்ளினார்.
கேட்ஸின் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் அமரிக்க டாலர்கள். தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 128 பில்லியன் டாலர்களாக உயர்ந்ததையடுத்து, பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் எலான். அமேசான் நிறுவனர் ஜெஃப்பின் சொத்து மதிப்பு 182 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.