‘செல்ஃப் லாக்டவுன்’ - கொரோனா 2ம் அலையில் இருந்து தப்ப இதுவே தீர்வு என மருத்துவர் ஆலோசனை!
இரண்டாம் அலையை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வர நாம் என்னென்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூறுகிறார் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் வித்யாலட்சுமி தேவேந்திரன்.
கடந்த சில வாரங்கலாக இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு பரவும் தொற்று உருமாறி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தடுப்பூசி போடும் பணிகள் ஒரு புறம் நடைப்பெற்றாலும், நோய் தொற்று பரவுதலை சமாளிக்கமுடியாமல் மருத்துவத்துறையும், அரசாங்கமும் தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கோவி-19 இரண்டாம் அலை தொற்றை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் வித்யாலட்சுமி தேவேந்திரனை தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.
நோய் பரவல் அதிகரிக்க என்ன காரணம்?
கொரோனா காலத்தில் கடுமையாக கடைபிடிக்க வேண்டிய சுய சுகாதார முறைகளை நாம் காற்றில் பறக்க விட்டதன் விளைவே இப்போதைய நோய் பரவல் அதிகரிப்பிற்கான காரணம். தொடக்கத்தில் மக்கள் அதனை தீவிரமாக எடுத்துக் கொண்டனர் ஆனால் தற்போது அந்த விழிப்புணர்வு குறைந்தவிட்டது.
சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை, பொதுமக்கள் அதிகம் கூடுதல், மாஸ்க் சரியாக அணியாதது போன்ற காரணங்கள் இருக்கின்றன. மேலும், கோவிட் 19 வைரஸின் மரபணுவிலும் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. வைரஸின் தன்மை மாறி இருக்கிறதா என்று ICMR 10ஆயிரம் மாதிரிகளை எடுத்து பரிசோதித்ததில் வைரஸ் இரண்டு வித மாற்றங்களைக் கொண்டிருக்கிறது என்பதும் கூட கண்டறியப்பட்டிருக்கிறது. இதனாலும் கூட தொற்று பரவல் விகிதம் அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
யாரை குறி வைக்கிறது தீவிர தொற்று மற்றும் ஆபத்தான பாதிப்பு?
பொதுவாகப் பார்த்தால் 80 சதவிகிதம் பேர் லேசான அறிகுறிகளுடனே கொரோனா நோய் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, எதிர்ப்பு சக்தி குறைப்பதற்கான மருந்து உட்கொள்பவர்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு மிதமானது முதல் தீவிரமான தாக்கத்தை கொரோனோ ஏற்படுத்தக் கூடும்.
15 சதவிகிதம் பேருக்கு தீவிர பரவலாகவும், 5 சதவிகிதம் பேருக்கு ஆபத்தானதாகவும் வைரஸ் தாக்கம் இருக்கக் கூடும்.
குழந்தைகளுக்கு கோவிட் தாக்கம் எந்த அளவில் இருக்கும்?
இரண்டாம் அலையில் குழந்தைகளுக்கும் கூட கொரோனா அறிகுறிகள் தென்படுகிறது, எனினும் அச்சம் கொள்ளத் தேவையில்லை, இளைஞர்கள், பெரியவர்கள் அளவிற்கு அவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. லேசான அறிகுறிகளுடனே அது இருக்கும், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை தேவையில்லை, எனினும் தொடர் கண்காணிப்பு தேவை.
மேலும், குழந்தைகள் மூலம் பெரியவர்களுக்கு பரவும் பட்சத்தில் உடல்பருமன் பிரச்னையுள்ள இளைஞர்களுக்கு வைரஸின் தன்மை தீவிரமாக இருக்கக் கூடும். பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதைத் தவிர்த்தல், மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதித்தல் மற்றும் ஒரு அறைக்குள் 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்து விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது என அனைத்துமே கோவிட் பரவலுக்கு வழிவகுக்கிறது, எனவே இதனை கட்டாயம் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது.
சாதாரண சளித் தொந்தரவா கொரோனா தொற்றா என்பதை எப்படி அறியலாம்?
பெருந்தொற்று காலத்தில் பரிசோதனையை அதிகரிக்க அனைவருமே முன்வரவேண்டும். நம்முடைய மருத்துவ பரிந்துரையே (Test,Treat,Track) என்பது தான். அதாவது பரிசோதனை, சிகிச்சை, தொடர்புகளைக் கண்டறிதல். அலட்சியம் காட்டாமல் பயணம் மேற்கொண்டிருந்தாலோ, கூட்டத்தில் பங்கேற்றிருந்தாலோ 3 நாட்களில் அறிகுறிகள் தென்பட்டால் உடனேயே பரிசோதனை செய்து கொண்டால் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
அடுத்த 1 மாத காலம் நமக்கு எவ்வளவு சவாலானது?
தற்போதைய வேகத்திலேயே கொரோனா நோய் பரவல் இருந்தால் ஹெல்த் கேரில் அதிக சவால்களை சந்திக்க நேரிடும். எனவே கோவிட் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை எப்போதும் கடை பிடிக்க வேண்டும். இந்த சவாலில் இருந்து நாம் மீண்டு வர வேண்டுமெனில் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, சமரசமின்றி தனிமைப்படுத்திக்கொள்வதற்கான விதிகளைக் கடைபிடித்தால் ஒழிய நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை.
முன்எச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
மக்கள் கூட்டம் கூடக் கூடாது, முகக்கவசத்தை பாக்கெட்டிலோ தாடைக்கு கீழேயோ வைக்காமல் முறையாக மூக்கு, வாய், தாடை மூன்றையும் மூடும் விதமாக அணிய வேண்டும். அடிக்கடி முகக்கவசத்தை தொடுவது, பயன்படுத்தியவற்றையே முறையாக சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்துதல் கூடாது. துணி மாஸ்க்குகளை பயன்படுத்தும் போது அதில் எத்தனை அடுக்கு துணிகள் இருக்கிறது என்பதை பார்த்து பயன்படுத்துவது அவசியம் மேலும் வால்வ் மாஸ்குகளை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பதை விட ‘செல்ஃப் லாக்டவுன்’ என்று தங்களுக்குத் தாங்களே விதிகளை வகுத்துக்கொண்டு அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்லாமல் இருந்தால் தங்களைப் பாதுகாப்பதோடு சமூகத்தையும் பாதுகாக்க முடியும்.
கொரோனாவிற்கு என்னென்ன மருத்துகள் பயன்படுத்தப்படுகின்றன?
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எதிர்ப்பு வைரல் மருந்து என்ற ஒன்று இல்லை என WHO-வே சொல்லிவிட்டது. எனினும் அந்த எதிர்ப்பு வைரலுக்கு இணையான பலன்களை ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கிறது. லேசான பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்த வேண்டியதில்லை, ஆனால் தீவிரமான தொற்று இருப்பவர்கள் மற்றும் ஆக்சிஜன் சுவாசம் தேவைப்படுபவர்களுக்கு ரெம்டெசிவிர் அறிகுறைகளைக் குறைக்கிறது. இதனாலேயே ரெம்டெசிவர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சிலருக்கு ஸ்டீராய்டு மருந்துகளும் வழங்கப்படுகிறது.
தடுப்பூசியால் என்ன பயன்?
அரசாங்கம் அறிவுறுத்துவது போல 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கொரோனா வராது என்று அர்த்தமல்ல, அவர்கள் தீவிர மற்றும் ஆபத்தான நிலைக்கு செல்லாமல் தடுப்பூசியானது உதவி செய்கிறது. ஆகவே அரசாங்கம் அறிவுறுத்துவது போல சரியான கால இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கோவிட் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் 3 மாதங்கள் கழித்தே அவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டோம் நமக்கு ஒன்றும் ஆகாது என்று தவறான பாதுகாப்பின்மையை மனதில் வளர்த்துக்கொள்ளாமல் கொரோனா சுகாதார நெறிமுறைகளையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் வித்யாலட்சுமி.
நம்மையும், நம் குடும்பத்தினர் மற்றும் சுற்றுப்புறம், சமூக நலனுக்காக கைகளால் ஒன்றிணையாமல் அவரவர்களின் வீட்டில் இருந்த படி மனதால் ஒன்றிணைந்து ஒற்றுமையை பிரதிபலித்தால் மட்டுமே கொரோனாவை கதறவிட முடியும் இல்லையென்றால் நாம் தான் தினம் தினம் கதற வேண்டும்.