பேரூழிக் காலத்தில் பெருந்தியாகம்: கொரோனாவால் உயிரிழந்த மதுரை கர்ப்பிணி மருத்துவர்!
தான் படித்த மருத்துவப் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, கொரோனா காலத்திலும் மக்கள் நலனே முக்கியம் என தொடர்ந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டு வந்த மதுரையைச் சேர்ந்த 31 வயதேயான கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை மிரட்டி வருகிறது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘வீட்டிலேயே இருங்கள்.. தேவையில்லாமல் வெளியில் சுற்றாதீர்கள்.. மறக்காமல் மாஸ்க் அணியுங்கள்... சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள்...’ என எங்கு திரும்பினாலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களைப் பார்க்க முடிகிறது.
முதல் அலையிலும் சரி, இப்போதும் சரி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முன்களப் பணியாளர்களாக கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவப் பணியில் ஈடுபடும் பலர் கொரோனாவால் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக கடவுளுக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் மருத்துவத்துறையில் உள்ளவர்கள், தங்களிடம் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளை எப்படியும் காப்பாற்றி பிழைக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில், தங்கள் உயிரையே பணயம் வைத்து பாடுபடுகிறார்கள்.
எவ்வளவு தான் பாதுகாப்பாக கவச உடை அணிந்து அவர்கள் சிகிச்சை அளித்தாலும், சமயங்களில் கொரோனா அரக்கனிடம் இருந்து அவர்களால் தப்பிக்க முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களின் இழப்பு அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே பெரிய இழப்பு ஆகும்.
அந்தவகையில், தன் வயிற்றில் உள்ள குழந்தையின் நலனைவிட அதிகமாக, தான் படித்த மருத்துவப் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, கொரோனா காலத்திலும் மக்கள் நலனே முக்கியம் என தொடர்ந்து மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வந்த மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
31 வயதேயான சண்முகப்பிரியா, தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர். கடந்த 2005ம் ஆண்டு மதுரை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த இவர், கடந்த ஆண்டு கொரோனா பாதிக்கத் தொடங்கியதில் இருந்தே, இடைவிடாமல் பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை கொடுத்து அவர்களை காப்பாற்றி இருக்கிறார்.
8 மாதக் கர்ப்பிணியாக இருந்த சண்முகப்பிரியா, மதுரை அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் மருத்துவராக பணி புரிந்து வந்தார். நெருக்கடியான இந்த கொரோனா தொற்று காலத்தில் வீட்டில் ஓய்வெடுக்க விரும்பாமல், வழக்கம்போல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
விடுமுறை காலத்திலும், பணிக்கு வந்து சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். கர்ப்பிணியாக இருந்த காரணத்தால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து முதலில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரது உடல்நிலை மோசமாகவே, மேல்சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், நுரையீரலில் 90 சதவிகிதம் அளவுக்கு தொற்று ஏற்பட்டதால், சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று மாலை உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சண்முகப்பிரியாவின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். அதில்,
"மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்களப்பணி வீரராக - அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பணி ஆற்றிய இளம் மருத்துவரை இழந்திருப்பது ஆழ்ந்த வேதனை தருகிறது.
மருத்துவர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன்.
”மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல மதுரை எம்பி சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
”எத்தனை பெரும் போரிலும், ஒரு கர்ப்பிணி இராணுவப்பெண் வயிற்றில் கருவைச் சுமந்து கொண்டு போரிட முடியாது. ஆனால் 8 மாத சிசுவை சுமந்து கொண்டு மருத்துவர் சண்முகப்பிரியா கோவிட் போர்க்களத்தில் பணியாற்றி, உயிர்த்தியாகம் செய்திருக்கிறார். பேரூழிகாலத்தின் பெருந்தியாகமென போற்றி வணங்குகிறேன்,'' எனக் கூறியுள்ளார்.
நோயாளிகள் மற்றும் உடன் பணியாற்றும் செவிலியர்களுடன் மிகவும் எளிமையாகவும், நட்புடன் இயல்பாகவும் பழகக்கூடியவராம் சண்முகப்பிரியா. அவரது இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, மருத்துவத் துறைக்கும் பெரிய இழப்பு என சண்முகப்பிரியாவுடன் பணி புரிந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பானது 27ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 51ஆயிரத்து 362ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 241பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,412 ஆக அதிகரித்துள்ளது.
பல மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அந்தவரிசையில், மதுரையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. நகரில், சராசரியாக 700 பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். 10 முதல் 17 பேர் நாள் தோறும் உயிரிழக்கின்றனர். தொடர்ந்து, தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மதுரையில் உச்சமாக 1,217 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 7 பேர் இறந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு மூலம் விரைவில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன், தமிழக அரசும், முன்களப் பணியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய கைமாறு ஊரடங்கு காலத்தில் அரசு வகுத்துள்ள வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி, வீட்டிலேயே இருப்பது தான். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்பவர்கள் மறக்காமல் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
இதுவே, மக்களின் நலனைக் காக்க தங்கள் உயிரைப் பணையம் வைத்து உழைக்கும் முன்களப் பணியாளர்களின் ஆரோக்கியத்திற்கு நம்மால் செய்ய முடிந்த சிறிய உதவி ஆகும். நமக்காக அவர்கள் களத்தில் போராடுகிறார்கள். அவர்களுக்காக நாம் பாதுகாப்பாக வீட்டிலேயே இருப்போம்.