இந்தியாவின் 'கொரோனா வாரியர்ஸ்’க்கு மக்கள் கொடுத்த அன்புப் பரிசு...
கோவிட் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவிட்டு வீடு திரும்பும் டாக்டர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் மக்கள் எப்படி எல்லாம் தெரிவித்தனர் என்று பாருங்கள்.
டாக்டர் விஜயஸ்ரீ பெங்களுருவில் தன் குடியிருப்பின் வாயிலுக்குள் நுழைந்தபோது, சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான ப்ளாட்களின் பால்கனியில் நின்று மக்கள் கரகோஷம் எழுப்பி, கைகளை விடாமல் தட்டி அவரை வரவேற்றனர். அதனை கண்ணீருடன் ஏற்றுக் கொண்ட விஜயஸ்ரீ, தன் கைகளைக் கூப்பி தன் நன்றியைச் செலுத்தினார்.
டாக்டர்.விஜயஸ்ரீ ஒரு கோவிட் வாரியர். பெங்களுரு எம் எஸ் ராமையா மெமோரியல் மருத்துவமனையில் பணிபுரியும் இவர், கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீடு திரும்பினார். ஓய்வின்றி மக்கள் பணியில் ஈடுபட்ட அவருக்கும் மக்கள் கொடுத்த பரிசு தான் இந்த ஆறவார வரவேற்பு.
அவரது வீடியோ வைரலாக மக்கள் பலரும் தங்களின் சல்யூட் மற்றும் அன்பை வெளிப்படுத்தினர். பெங்களுரு மேயர் கவுதம் குமார் டிவிட்டரில் Dr.விஜயஸ்ரீ பற்றி பதிவிட்டார். அதில்,
“மருத்துவர் விஜயஸ்ரீ போன்றோருக்கு ஒரு பெரிய நன்றி. தன்னலமின்றி இந்த உயிர்க்கொல்லி நோய் எதிர்ப்பில் முன் நின்று பணிபுரியும் கோவிட் வாரியர்களுக்கு நன்றி மற்றும் வணக்கங்கள்...”
அவரைத்தொடர்ந்து ட்விட்டரில் பலரும் விஜயஸ்ரீயின் பணியை பாராட்டி பதிவிட்டனர்.
மற்றொரு டாக்டரான சச்சின் ஹொஸ்கொட்டே வீடு திரும்பியபோதும் அவருக்கு பதாகைகள் ஏந்தி மக்கள் வரவேற்பு கொடுத்தனர். அவரின் வீடு இருக்கும் தெரு முழுதும் மக்கள் சமூக விலகள் மேற்கொண்டு நின்று கைத்தட்டி, நன்றி போஸ்டர்கள் காண்பித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
மற்றொரு இந்திய பெண் மருத்துவர் கோவிட் நோயாளிகளுக்கு ஐசியூ-வில் 20 நாட்கள் தொடர் சிகிச்சை செய்துவிட்டு வீடு திரும்பியபோது, அவரின் குடியிருப்புவாசிகள், மலர் தூவி, சத்தம் எழுப்பி, கைக்கூப்பி நன்றி தெரிவித்தனர். அதனை கண்டு நெகிழ்ந்து போன அவர், கண்ணீர் மல்க நன்றிகளை ஏற்றுக்கொண்டார். இந்த வீடியோவை பிரதமர் மோடி பதிவிட்டதில் அது வைரலானது.
“இதுவே இந்தியா... இது போன்ற நிகழ்வுகள் நம் உள்ளத்தை மகிழ்ச்சியில் நிரப்புகின்றன. நாம் கோவிட்-19 வைரசை தைரியத்துடன் எதிர்த்து போராடுவோம்...” என்று பதிவிட்டார் மோடி.
இப்படி நாடு முழுதும் பல கதைகள். இவை நமக்கு நம்பிக்கை ஊட்டும் தருணங்கள். கோவிட் வாரியர்ஸ் என அழைக்கப்படும் கொரோனா தொற்று போராட்டத்தில் களத்தில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை இச்சமயத்தில் போற்றிப் பாராட்டுவோம்.