தன்னலமின்றி தன்னார்வலப் பணிகளில் ஈடுபடும் சத்யா நடராஜன்!
புனேவைச் சேர்ந்த சத்யா நடராஜன் கடந்த பத்தாண்டுகளில் 60 சமூக குழுக்களிலும் என்ஜிஓ-க்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
சத்யா நடராஜன் புனே பகுதியைச் சேர்ந்தவர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்பவர். பகல் நேரங்களில் தன்னார்வலப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்வதற்காகவே இரவு நேரத்தை அலுவலகப் பணிகளுக்கு ஒதுக்கியுள்ளார்.
சமூக சேவை என்பது திடீரென்று ஒருநாள் முளைத்தது அல்ல. இந்த உணர்வு இவருக்குள் சிறு வயதிலேயே விதைக்கப்பட்டுள்ளது. இவர் படித்த பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதற்காக நிதி திரட்டியுள்ளார். என்எஸ்எஸ் மூலம் கிணறு தூய்மைப்படுத்தும் வேலைகளில் உதவியுள்ளார்.
இவருடன் சேர்ந்து சேவை மனப்பான்மையும் படிப்படியாக வளர்ந்துகொண்டே போனது. குறிப்பிட்ட பிரிவு என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளாமல் சுற்றுச்சூழல், கல்வி, ஆரோக்கியம், சுகாதாரம் என பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பணியாற்றத் தொடங்கினார். தொழிலாளர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதிலும் பங்களித்து வருகிறார்.
”சேவை செய்யவேண்டும் என்கிற நினைப்பை என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் சிறுவயதிலேயே மனதில் பதிய வைத்துவிட்டனர். எங்கெல்லாம் உதவி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறதோ அதைத் தவறவிடுவதில்லை,” என்கிறார் சத்யா.
பலதரப்பட்ட சேவைகள்
சத்யா 2009-ம் ஆண்டு முதல் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் 60 சமூக குழுக்களிலும் என்ஜிஓ-க்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளார். சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகள், பெண்களின் மேம்பாடு என பலதரப்பட்ட சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். மனிதர்களின் நலன் காக்கவேண்டும் என்பதை முன்னிறுத்தியே இவரது சேவைகள் இருந்து வருகிறது.
என்ஜிஓ-க்கள் மட்டுமல்லாது குளோபல் மெண்டல் ஹெல்த் அசோசியேஷன் (GMHA), புனா தமிழ் சங்கம், விஷ்வா சவாலி, நெல்டா ஃபவுண்டேஷன் உள்ளிட்ட சமூக குழுக்களும் இவரது பங்களிப்பை அங்கீகரித்துள்ளது.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பலவற்றில் பங்களித்துள்ளார். சுமார் 20 பள்ளிகளில் 4,000-க்கும் மேற்பட்ட பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இவைதவிர இவரே ஒரு குழுவை உருவாக்கி சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதில் சானிட்டரி பேட் பயன்பாடு, மாதவிடாய் கப் பயன்பாடு போன்றவை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மரங்கள் பாதுகாப்பு சட்டத்தை மீறுபவர்கள் பற்றி புகார் வந்தால் இரவு, பகல் பாராது உடனே அங்கு ஆஜராகிவிடுகிறார் சத்யா.
“மரங்களைப் பாதுகாப்பது குறித்து அமர்வுகள் ஏற்பாடு செய்திருக்கிறேன். புனேவில் பசுமை போர்வை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன்,” என்கிறார் சத்யா.
உள்ளூர் நகராட்சி அமைப்புகளுடன் கைகோர்த்து ஐந்தாண்டுகள் வரை தொடர்ந்து 52 வாரங்கள் ’ஸ்வச் புனே ஸ்வச் பாரத்’ முயற்சியில் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
”நான் டிவி பார்ப்பதில்லை. தூங்கும் நேரத்தில் 1.5 மணி நேரம் குறைத்துக் கொண்டேன். அநாவசியமாக நேரத்தை வீணாக்குவதில்லை. இதனால் என்னால் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் வரை சமூக பணிகளுக்கு ஒதுக்க முடிகிறது,” என்கிறார்.
சவாலான தருணங்கள்
கோவிட்-19 சமயத்தில் சத்யா பல சவால்களை சந்தித்துள்ளார்.
“கொரோனா பெருந்தொற்று சமயத்தில் நன்கொடை அளிப்பவர்களையும் உதவி பெறும் பயனர்களையும் இணைப்பது கடினமாக இருந்தது. உதவி பெறுபவர்கள் மரியாதையும் நடத்தப்படுவதை உறுதி செய்யும் அதேநேரம் நன்கொடை அளிப்பவர்களின் பெருந்தன்மையை அங்கீகரிக்கவும் தவறக்கூடாது,” என்கிறார் சத்யா.
கொரோனா சமயத்தில் பலர் பலவிதமான இன்னல்களை சந்தித்தனர். சிலர் நெருங்கிய உறவுகளை இழந்து தவித்தனர். குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவித்தார்கள். குழந்தைகள் வெளிநாடுகளில் இருக்க முதியோர் பலர் தனிமையில் தவித்தனர்.
“எங்கும் வலி நிறைந்த இதயங்களைப் பார்க்க முடிந்தது. பலருக்கு உதவி தேவைப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அதேசமயம் இவ்வாறு சொந்த ஊர் திரும்பியவர்கள் பசியால் வாடினார்கள். எனவே உணவுப் பொட்டலங்களை வழங்கி உதவினோம்,” என்கிறார்.
கிளவுட் கிச்சன் மூலம் உணவு தயாரித்து தொடர்ந்து 10 நாட்கள் 36,000 உணவுப் பொட்டலங்களை குழுவுடன் இணைந்து விநியோகித்துள்ளார். வெள்ள நிவாரணப் பணிகளிலும் சத்யா ஈட்பட்டுள்ளார். 16 டன் நிவாரணப் பொருட்களை சேகரித்து தேவைப்படுவோருக்கு கொடுத்துள்ளார்.
நலிந்தோருக்கு ஆதரவு
சத்யா இந்த ஆண்டு Oxfam நிறுவனத்துடன் இணைந்து நலிந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஏற்கெனவெ வறுமையில் தவித்த இவர்களின் நிலையை கொரோனா பெருந்தொற்று மேலும் மோசமாக்கியது.
”ஹெல்த்கேர் அமைப்பு மிகப்பெரிய அழுத்தத்தை சந்தித்தது. நலிந்த மக்கள் செல்வதற்கு இடமின்றி தவித்தார்கள். கொரோனா பெருந்தொற்றால் மட்டுமில்லாமல் சமத்துவமின்மை, பாகுபாடுகள் போன்றவற்றாலும் பலர் பாதிக்கப்பட்டனர். இத்தகைய பாகுபாடுகளைக் களைந்து இவர்களுக்கு உதவுவதற்கான முயற்சிதான் #WalkInMyShoes,” என்கிறார் சத்யா.
சமூகத்தில் சமத்துவத்தை ஊக்குவிக்கவேண்டும் என்பதே இவரது கனவு. இதை சாத்தியப்படுத்த உதவும் Oxfam Trailwalker போன்ற நிகழ்வுகளில் பங்களிக்க பலரை ஒன்றிணைக்கும் முயற்சியில் சத்யா ஈடுபட்டுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா