மும்பையில் ஏழை மக்களின் பசியைப் போக்கும் நெல்லை ஜான் பெஞ்சமின்!
மும்பையைச் சேர்ந்த ஜான் பெஞ்சமின் நாடார் பழங்குடியினர், சாலையில் வசிப்பவர்கள் என ஏழை மக்களைத் தேடிச்சென்று உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து பசியைப் போக்குகிறார்.
ஜான் பெஞ்சமின் மும்பை பந்தப் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக சமூக நலப் பணிகள் செய்து வருகிறார். குழந்தைகள் நல்லது கெட்டது அனைத்தையுமே பெற்றோரிடமிருந்துதானே கற்றுக்கொள்ளும்?
ஜானின் பெற்றோருக்கும் நலப்பணிகளில் ஆர்வம் இருந்துள்ளது. மும்பை சிகப்பு விளக்கு பகுதியில் சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. இங்கு சிக்கித் தவிக்கும் ஏராளமானோரை ஜானின் அம்மா மீட்டுள்ளார். ஜானின் அப்பா 2018ம் ஆண்டு உயிரிழந்தார். இவரும் தனது இறுதி மூச்சு வரை பல விதமான சமூக சேவைகள் செய்துள்ளார்.
ஆரம்பத்தில் Against Malnutrition என்கிற என்ஜிஓ-வுடன் சேர்ந்து தன்னார்வப் பணிகள் செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இந்த வேலைகள் தடைபட்டன.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஜான் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த ஏழை மக்கள் பலர் வறுமையில் தவித்துள்ளனர். முஸ்லீம் சமூகத்தினர் ஒரு குழுவாக இவர்களுக்கு உணவு கொடுத்து உதவியுள்ளார்கள். நண்பர் ஒருவர் மூலம் இந்தக் குழு பற்றி ஜான் தெரிந்துகொண்டார். இவர்களுடன் சேர்ந்து உதவ நினைத்தார்.
Serving Humanity என்கிற முயற்சியை ஆரம்பித்தார். ஏழு பேர் கொண்ட குழுவாக செயல்பட்டார்கள். பசியில் தவிக்கும் ஏழை மக்களுக்கு கிட்டத்தட்ட 40,000 உணவுப் பொட்டலங்கள் வரை கொடுத்து உதவியுள்ளார். இவரது சேவை 3,500 குடும்பங்களைச் சென்றடைந்துள்ளது.
தொடக்கம்
ஜான் சொந்தமாக என்ஜிஓ தொடங்க அவரது மைத்துனர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் உதவி செய்ய மனம் மட்டும் போதாதே, பணம் அவசியமல்லவா?
“என்னிடம் 350 ரூபாய் மட்டுமே இருந்தது. மற்றவர்களிடமிருந்து பணம் சேகரித்து 1,400 ரூபாய் திரட்டினோம்,” என்று ஜான் பகிர்ந்துகொண்டார்.
2020ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ஏழை மக்களுக்கு உணவளிப்பதற்காக சமையல் வேலையை ஆரம்பித்துள்ளார்கள். பழங்குடியின மக்கள் வாழும் காட்டுப்பகுதிகள் வரை சென்று உணவுப் பொட்டலங்களைக் கொடுத்துள்ளனர்.
அவ்வளவுதான்! சேகரித்த தொகையைக் கொண்டு உணவு தயாரித்துக் கொடுத்தாகிவிட்டது. பணம் தீர்ந்துவிட்டது.
”நாங்கள் ஃபேஸ்புக் மூலம் நன்கொடை கேட்டோம். என் அலுவலகத்தில் என்னுடைய சீனியர் அரிசி, பருப்பு போன்ற சில மளிகைப் பொருட்களைக் கொடுத்து உதவி செய்தார்,” என்று ஜான் நினைவுகூர்ந்தார்.
ஜான் நண்பர்களுடன் சேர்ந்து வேலையைத் தொடர்ந்தார். காய்கறி வாங்குவது, நறுக்குவது, சமைப்பது, பேக் செய்வது என ஒவ்வொருவரும் ஒரு வேலையில் மும்முரம் காட்டினார்கள்.
தினமும் 200-250 பேருக்கு உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தார்கள். இப்படியே மூன்று மாதங்கள் வரை தொடர்ந்தது. ‘Serving Humanity’ என்கிற பெயரில் சேவை செய்து வந்தாலும் இந்தப் பெயரை முறைப்படி இன்னும் பதிவு செய்யவில்லை.
உதவிகள்
ஜான் முன்பு வேலை செய்த Decimal Foundation மளிகைப் பொருட்கள், ஸ்நாக்ஸ் போன்றவற்றைக் கொடுத்துத் தொடர்ந்து அவரது முயற்சிக்கு ஆதரவளித்து வருகிறது.
“பழங்குடி மக்கள் உள்ளிட்ட பல எளியவர்களுக்கு நாங்கும் உதவுவதைப் பார்த்து துபாயைச் சேர்ந்த என் நண்பர் அவரது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதன் மூலமாகவும் எங்களுக்கு உதவி கிடைத்தது,” என்கிறார் ஜான்.
தேஜஸ் தக்கர் என்கிற பாலிவுட் கேஸ்டிங் இயக்குநர் ஜானின் சேவைகள் பற்றி கேள்விப்பட்டு இணைந்துகொண்டார்.
சுஷ்மிதா என்கிற பெண் தனது திருமண நாளை பந்தப் பகுதியில் சாலையில் வாழும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். Kellogs நிறுவனம் 10 லட்ச ரூபாய் மதிப்புடைய 3,000 பொட்டலங்களை ஏழை மக்களுக்காக நன்கொடை கொடுத்து உதவியது. Deloitte நிறுவனம் சமையல் பொருட்களைக் கொடுத்துள்ளது.
தாக்கம்
பந்தப் பகுதியைச் சேர்ந்த சரளா ஓஹா என்கிற 60 வயது மூதாட்டி,
”ஊரங்கு என் குடும்பத்தை மிகவும் கஷ்டமான நிலைக்குத் தள்ளியது. எனக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார். அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இவர்கள் கொடுத்த மளிகை தொகுப்பால் எங்களால் சாப்பிட முடிந்தது,” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த 68 வயது விமலா தேவி,
“இவர்கள் கொடுத்த மளிகைப் பொருட்களைக் கொண்டு சமைத்து சாப்பிட்டதால் என்னால் பணத்தை சேமிக்க முடிந்தது. அதைக் கொண்டு மருந்து வாங்கினோம்,” என்கிறார்.
“இப்போதும் மளிகைப் பொருட்கள் கிடைக்கும்போதெல்லாம் சென்று விநியோகித்து விட்டு வருகிறோம். சாலையில் வசித்து கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு ஒரு வேளை உணவாவது கொடுக்கவேண்டும். அதற்காகவே தொடர்ந்து உதவி கேட்டு வருகிறோம்,” என்கிறார் ஜான்.
மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு உணவைக் கொண்டு சேர்ப்பது கஷ்டமாக இருந்தது என்கிறார் ஜான்.
வருங்காலத் திட்டங்கள்
ஜான் தற்போது தினசரி செய்து வரும் உதவிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள விரும்புகிறார். குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கவும் பெரியவர்களுக்கு சிறு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் திறன் பயிற்சி அளிக்கவும் மையம் ஒன்றைத் திறக்க விரும்புகிறார்.
”என் சொந்த ஊர் திருநெல்வேலி. இங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மறுவாழ்வு மையம் திறக்க விரும்புகிறேன். நீரிழிவு நோயாளிகளுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்கும் எண்ணமும் இருக்கிறது,” என்கிறார் ஜான்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா