புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் தரப்படும் ‘சோழர் கால’ செங்கோல்: வரலாற்றுச் சிறப்பு என்ன?

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவின்போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியால் நிறுவப்படும் சோழர் காலத்து மாடல் செங்கோல் குறித்த வரலாற்றுப் பின்னணி.

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் தரப்படும் ‘சோழர் கால’ செங்கோல்: வரலாற்றுச் சிறப்பு என்ன?

Thursday May 25, 2023,

4 min Read

புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் மே 28-ல் வரலாறு மீண்டும் திரும்பவிருக்கிறது. இந்நாளில் நியாயமான, சமத்துவமான நிர்வாகத்தின் புனித அடையாளமாக விளங்கும் செங்கோலை பிரதமர் பெற்று, அதனைப் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவவிருக்கிறார்.

இதே செங்கோலை 1947 ஆகஸ்ட் 14 அன்று இரவு பல தலைவர்கள் முன்னிலையில் இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு தமது இல்லத்தில் பெற்றுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்த தகவல்கள்:

“சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் அதிகார மாற்றம் ஏற்பட்டது என்பது பற்றிய புரிதல் பெரும்பாலான மக்களிடம் இல்லை. இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடிய 1947 ஆகஸ்ட் 14 அன்றிரவு இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

அன்றைய இரவில் சுதந்திர தின விழாவிற்காக தனிப்பட்ட முறையில் வருகை தந்த தமிழ்நாட்டின் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து இந்த செங்கோலை ஜவஹர்லால் நேரு பெற்றுக்கொண்டார்.

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டதன் தருணத்தை இது குறிப்பால் உணர்த்தியது. செங்கோல் ஒப்படைக்கப்பட்டதன் அந்தத் தருணத்தை சுதந்திர தினமாக நாம் கொண்டாடுகிறோம். அமிர்த காலத்தின் தேசிய அடையாளமாக செங்கோலை ஏற்கும் முடிவை பிரதமர் மேற்கொண்டுள்ளார்.

sengol

பிரதமரிடம் ஆதீனங்களால் செங்கோல் வழங்கும் அதேபோன்ற நிகழ்வு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.

நேர்மை எனப் பொருள்படும் ’செம்மை’ என்ற தமிழ் வார்த்தையில் இருந்து ’செங்கோல்’ என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான தர்மம் மிக்க மடங்களைச் சேர்ந்த உயர்நிலை ஆதினங்களால் இது ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சியில் நியாயத்தைக் குறிக்கும் வகையில் கைகளால் செதுக்கப்பட்ட நந்தியின் உருவம் இடம்பெற்றுள்ளது. மிக முக்கியமாக, செங்கோலைப் பெறுவது என்பது நீதியோடும், நேர்மையோடும் ஆள்வதற்கான ஆணையாக இருக்கும். மக்களுக்குச் சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதனை ஒருபோதும் மறக்கலாகாது.

இந்த செங்கோல் 1947-ல் இருந்து மக்களவையில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதானமாகத் தெரியும் வகையில், பிரதமரால் நிறுவப்படும். நாட்டு மக்கள் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இது சிறப்புமிக்க தருணங்களில் வெளியே கொண்டுவரப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த செங்கோலை நிறுவுவதற்கு மிகவும் பொருத்தமான, புனிதமான இடம் நாடாளுமன்றமாகும்.

sengol

செங்கோல் நிறுவப்படுவது 1947 ஆகஸ்ட் 15-ன் உணர்வை மறக்க முடியாததாக மாற்றுகிறது. இது எல்லையற்ற நம்பிக்கையின் வாக்குறுதியாகவும், எல்லையற்ற சாத்தியங்களின் அடையாளமாகவும் இருப்பதோடு, வலுவான, வளம் மிக்க தேசத்தை கட்டமைப்பதற்கான தீர்மானமாகவும் உள்ளது. இது அமிர்த காலத்தின் அடையாளமாக இருக்கும். இந்தியா தனது சரியான இடத்தைப் பெறுகின்ற புகழ்மிக்க சகாப்தத்தின் சாட்சியமாகவும் இருக்கும்.

தமிழ்நாட்டு மடங்களின் பங்களிப்பை தமிழ்நாடு அரசு 2021-22-ன் இந்து சமய அறநிலையத் துறை கொள்கைக் குறிப்பில் பெருமிதத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் 24-ம் பத்தி அரசவையின் ஆலோசனைத் தளமாக மடங்களின் பங்களிப்பைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

”ஆதீனத் தலைவர்களின் கலந்தாலோசனையுடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புனிதமான சடங்கின்போது தங்களின் ஆசிகளைப் பொழிவதற்காக 20 ஆதீனங்களின் தலைவர்கள் இந்தப் புனிதமான விழாவில் பங்கேற்கவுள்ளனர். இதன் கட்டமைப்பில் தொடர்புடைய 96 ஆண்டு பழமையான ஸ்ரீ உம்முடி பங்காரு செட்டி, இந்தப் புனித விழாவில் பங்கேற்கிறார்,” என்று அமித் ஷா கூறினார்.

1947-ல் நடந்தது என்ன?

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகாரம் கைமாறும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ஜவஹர்லால் நேருவிடம் என்ன விழா நடத்த வேண்டும் அல்லது அதற்கு அடையாளமான ஒன்றை செயல்படுத்த என்ன செய்யவேண்டும் என மவுன்ட்பேட்டன் கேட்டார். அப்போது,

ராஜாஜியிடம் ஆலோசனையை நாடினார் நேரு. நம் நாட்டின் சரித்திரம் பண்பாட்டை ஆராய்ந்து பார்த்த ராஜாஜி, “சோழ மன்னர்கள் செய்ததைச் செய்யுங்கள்...” என்று நேருவிடம் யோசனை கூறினார்.
sengol

சோழர் காலத்தில் அதிகாரப் பரிமாற்றமானது சைவ உயர் குருக்களால் புனிதப்படுத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திடம் ‘இந்திய அதிகாரம் கைமாற நாம் இதையே செய்ய வேண்டும்’ என்று ராஜாஜி கேட்டுக்கொண்டார். 1947 ஆகஸ்டில் ஆதீனம், இந்தப் பணியை செய்ய ஒரு குழுவை டெல்லிக்கு அனுப்பினார்.

செங்கோல் ஏன்?

ஆகஸ்ட் 14, 1947 அன்று பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட இந்த செங்கோல் ஆதீனத்தால் பிரத்யேகமாக தயார் செய்ய ஆணையிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள நகைக் கடை அதிபர் உம்மிடி பங்காரு செட்டி, இதை கைவினைக் கலையால் வடிவமைத்தார். இந்த தலைசிறந்த படைப்பின் மேல் உள்ள அழகான நந்தி குறிப்பிடத்தக்கது.

சோழர்கள் இந்திய துணைக் கண்டத்தில் மிக நீண்ட காலமாக ஆட்சி செய்த வம்சங்களில் ஒன்றாகும். சேர, சோழ, பாண்டியர் என்ற மன்னர்கள் தமிழகத்தின் மூன்று மிக பெரிய மன்னர்கள் வம்சத்தில் ஒருவராக, 13-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து சோழர்கள் ஆட்சி செய்தனர். செங்கோலை ஓர் அரசர் தன்னுடைய வாரிசுக்கு அளிக்கும்போது அது அதிகார மாற்றத்தைக் குறித்தது. இந்த சக்திவாய்ந்த சின்னம், ஆகஸ்ட் 1947ல் இந்திய சுதந்திரத்தை குறிக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழ்ப் புலவர் திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் ‘கோளறு பதிகம்’ என்னும் பதிகத்தை எழுதிப் பாடியுள்ளார். இந்த பிரார்த்தனைப் பாடல் இடர்பாடுகளை நீக்க வல்லது என்பது நம்பிக்கை. ஆகஸ்ட் 14, 1947 அன்று ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் கைமாறியபோது ஆதீன ஓதுவார்கள் இந்தப் பாடலை பாடினர். அதிகார பரிமாற்றம் இவ்வாறு நடைபெற்றது.

செங்கோல் என்பது நெறி தவறாத ஆட்சிக்கான பெருமைமிகு சின்னம். அதிகாரப் பரிமாற்றத்தின் நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இயற்கையாகவே, அக்கால ஊடகங்களும் பின்னர் புத்தகங்களும் இந்த நிகழ்வைப் பற்றி ஆர்வத்துடன் செய்தி வெளியிட்டன. இது இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி ‘டைம்’ முக்கிய உலகப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது. இது குறித்த பதிவுகள் ஏராளமாக உள்ளது.

sengol

மனிதர்கள் அடையாளங்கள் மற்றும் குறியீட்டு முறை, சக்திவாய்ந்த காட்சி வெளிப்பாடுகள் மூலம் அறிந்துகொள்கிறார்கள். அவை காலப்போக்கில் எந்த காலகட்டத்துக்கும் பொருத்தமானதாக அதிக அர்த்தமுள்ளதாக மாறி நிலைத்திருக்கிறது.

மக்களும் நாடுகளும் சக்தி வாய்ந்த சின்னங்களை அறிந்துகொள்ள பல உதாரணங்கள் உள்ளன. சின்னங்கள் மக்கள் போற்றப்பட வேண்டிவை என்ற ஒரு சிறப்பு உணர்வை கொடுக்கின்றன. செங்கோல் என்பது உண்மையிலேயே இந்தியக் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாகும்.

ஒரு தெளிவு: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவின்போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிறுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோல் என்பது சோழர் காலத்து செங்கோல் அல்ல; சோழர் காலத்து செங்கோல் மாதிரி வடிவில் 1947-ல் உருவாக்கப்பட்டது ஆகும்.


Edited by Induja Raghunathan