‘ஒரு பில்லியன் பயனர்களுக்கு சேவை அளிப்பது சவாலானது’ – Sharechat இணை நிறுவனர் ஃபரீத் அஹ்சான்!
ஷேர்சாட் நிறுவனத்தின் சிஓஓ மற்றும் இணை நிறுவனர் ஃபரீத் அஹ்சான் யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2021 மாநாட்டில் ஷேர்சாட் இதுவரை கடந்து வந்த பாதை குறித்தும் புதிய வாய்ப்புகள் குறித்தும் யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷார்மாவிடம் பகிர்ந்துகொண்டார்.
ஷேர்சாட் நிறுவனத்தின் சிஓஓ மற்றும் இணை நிறுவனர் ஃபரீத் அஹ்சான். தன்னம்பிக்கை நிறைந்த இவர், யுவர்ஸ்டோரியின் முக்கிய நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் 2021 மாநாட்டில் யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மாவுடன் உரையாடினார்.
இந்த உரையாடலின் வாயிலாக ஷேர்சாட் இதுவரை கடந்து வந்த பாதை குறித்தும் புதிதாகக் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
சமூக வலைதளங்களில் உலகளவில் அடுத்து பிரபலமாகக்கூடிய அம்சம் இந்தியாவில் இருந்தே வெளிப்படும் என்று ஷேர்சாட் இணை நிறுவனர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பல ஸ்டார்ட் அப்கள் படைப்பாற்றலுடன் குறுகிய வீடியோக்களை உருவாக்கி வருவாய் ஈட்டி வருகின்றன. இந்த ஸ்டார்ட் அப்கள் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாக ஷேர்சாட் நிறுவனர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு, குறிப்பாகப் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு ஷேர்சாட் கடும் போராட்டங்களை சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்.
வளர்ச்சியை ஊக்குவித்த காரணிகள்
ஷேர்சாட் சரியான இடத்தில் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார் ஃபரீத். இந்தியாவில் 4ஜி புரட்சி காரணமாக அதிவேக இணைய இணைப்பும் டேட்டாவும் சாத்தியமானது. இதன் மூலம் ஷேர்சாட் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் இந்தியர்களையும் சென்றடைந்துள்ளது.
ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கத் தொடங்கியதால் திறன்மிக்க படைப்பாளிகள் பலரைச் சென்றடைந்துள்ளது. நாட்டின் தொலை தூரத்தில் இருப்பவர்களையும் எட்டிப்பிடித்துள்ளது.
ஷேர்சாட் வளர்ச்சியில் அடுத்து முக்கியப் பங்கு வகித்தது மூலதனம். வென்ச்சர் கேப்பிடல் மூலம் நேரடி அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் கொள்கைகள் மாற்றப்பட்டன. 2010ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய ஸ்டார்ட் அப் சூழலின்மீது வென்சர் கேப்பிடலிஸ்ட் நம்பிக்கை காட்டத் தொடங்கினர்.
இந்தியாவில் ஸ்டார்ட் அப் சூழல் முதிர்ச்சியடையத் தொடங்கியதும் நிறுவனர்கள் ஆலோசகர்களாக மாறினார்கள். முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வழிகாட்டினார்கள் என்று ஃபரீத் விவரித்தார்.
போட்டியின் முக்கியத்துவம்
டிக்டாக் ஏற்கெனவே இந்தியாவில் குறுகிய வீடியோக்களுக்கான சந்தையை ஓரளவிற்கு நிலைப்படுத்தியுள்ளது. இந்தப் பிரிவில் இருக்கும் சாத்தியக்கூறுகள் முதலீட்டாளர்களுக்கும் தெரிய வந்ததால் முதலீட்டாளார்களையும் ஈர்க்கமுடிந்தது. டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு அந்தப் பயனர்கள் Moj பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதுவும் சாதகமான அம்சமே.
“இந்தியாவில் குறுகிய வீடியோக்களுக்கான தேவை அதிகரித்திருப்பதை யூட்யூப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல தளங்களும் உணர்ந்துள்ளன,” என்கிறார் ஃபரீத்.
ஷேர்சாட் இந்தப் பகுதியில் ஆரம்பத்திலேயே முன்னோடியாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டும்போது சேவையளிக்கத் தயார்நிலையில் இருக்க விரும்புவதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
பில்லியன் பயனர்கள் – சவால்கள்
பில்லியன் பயனர்களுக்கு சேவையளிப்பது அத்தனை எளிதல்ல, சவால்கள் அதிகம் என்கிறார் ஃபரீத். இதில் குறிப்பாக சரியான தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம் என்கிறார். இதற்காக சரியான திறன்மிக்கவர்களை நியமிப்பதற்கான ஆயத்தப் பணிகளை ஷேர்சாட் மேற்கொண்டு வருகிறது.
இந்திய சந்தை குறித்த தகவல்கள், தற்போதைய பயனர்களின் தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்திய பயனர்களின் தேவைக்கேற்ப வீடியோ உள்ளடக்கம் உருவாக்கவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் திட்டமாக உள்ளது.
கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுடன் ஷேட்சாட் போட்டியிடுவதால் மூலதன கையிருப்பு அவசியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் சமூக வலைதள புரட்சி இன்னமும் ஆரம்பகட்டத்திலேயே இருப்பதாக ஃபரீத் தெரிவிக்கிறார். இந்தியாவில் வெவ்வேறு விருப்பங்களும் மொழிகளும் கொண்ட பயனர்களை சென்றடைவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதை சுட்டிக்காட்டினார்.
இதர செயல்பாடுகள்
Moj தளத்தைத் தொடர்ந்து மைக்ரோ கட்டணங்கள் சேவையிலும் கவனம் செலுத்த இருப்பதாக Mohalla Tech நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்பத் திறன்களுக்காக தொடங்கப்பட்ட ShareChat Labs பற்றியும் ஃபரீத் பகிர்ந்துகொண்டார். முதலில் ஆரம்பநிலையில் இருக்கும் பொறியாளார்களின் திறன்களை மெருகேற்றவேண்டும். இரண்டாவதாக சிலிக்கான் வேலி தயாரிப்புகளில் அனுபவமிக்க பொறியாளர்களுடன் ஒருங்கிணையவேண்டும். இவ்விரண்டுமே ஷேர்சாட் லேப்ஸ் செயல்பாடுகளின் நோக்கம் என்றார்.
முக்கிய மாற்றம்
ஷேர்சாட், வென்சர் கேப்பிடலிஸ்ட்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்கிற கருத்து பரவலாக இருந்தது. ஆனால் ஸ்டார்ட் அப் சூழல் முதிர்ச்சியடைந்துள்ளதால் இந்தப் போக்கு மாறியுள்ளது என்கிறார் ஃபரீத்.
“இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் இன்று 34 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியுள்ள நிலையில், இந்த வளர்ச்சி வெறும் அதிர்ஷ்டத்தால் சாத்தியப்படவில்லை என்பதை முதலீட்டாளார்கள் உணர்ந்துள்ளனர்,” என்கிறார்
பயணத்தில் கிடைத்த படிப்பினைகள்
ஷேர்சாட் நிறுவனத்துடன் சேர்ந்து தனிநபராக தானும் முன்னேறி இருப்பதாக ஃபரீத் தெரிவிக்கிறார். ஃபரீத் தன்னுடைய தொழில் பயணத்தில் கற்ற முக்கிய படிப்பினை குறித்து பகிர்ந்துகொண்டபோது,
”ஒரு தொழில்முனைவரால் அனைத்து பணிகளையும் தனியாகக் கையாளமுடியாது. திறன்மிக்க சரியான நபர்களைத் தேர்வு செய்து பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும்,” என்கிறார்.
அடுத்ததாக தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஸ்டார்ட் அப் முயற்சியின் ஆரம்பகட்டத்தில் பெரும்பாலானோர் தங்களது நண்பர்களையும் பரிச்சயமானவர்களையும் இணைத்துக்கொள்வதுண்டு. தொழில் முயற்சி அடுத்தடுத்த கட்டங்களாக வளர்ச்சியடையும் நிலையில் சிலர் வேலையில் இருந்து விலக நேரலாம்.
அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தனிப்பட்ட வாழ்க்கையையும் பணி வாழ்க்கையையும் தனித்தனியாகக் கையாளும் பக்குவம் வந்துவிட்டால் ஆரோக்கியான சூழல் உருவாகும் என்கிறார்.
நிறுவனத்தின் கலாச்சாரம்
நிறுவனம் தொடங்கப்பட்ட புதிதில் இணை நிறுவனர்கள், நட்புடன் பழகும் ஊழியர்கள் என அனைவரும் கடினமாக உழைப்பது, பார்ட்டி செல்வது என வழக்கமான கலாச்சாரத்தையே பின்பற்றியுள்ளனர்.
இருப்பினும் பெரியளவில் வளர்ச்சியடைகையில் இந்த அணுகுமுறை பலனளிக்காது. நிறுவனத்தின் நோக்கத்திற்குப் பொருத்தமான நடைமுறைகளையும் அணுகுமுறைகளையும் வகுத்து, அவை முறையாகப் பின்பற்றப்படுவதை நிறுவனர்கள் உறுதிசெய்யவேண்டும் என்கிறார் ஃபரீத். அதிலும் குறிப்பாக அலுவலகத்திலிருந்து மட்டுமல்லாமல் வீட்டிலிருந்தும் வேலை செய்யும் முறை அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் இது இன்றியமையாதது என்று வலியுறுத்துகிறார்.
உலகின் முன்னணி தொழில்நுட்பத் திறமைகளுடன் போட்டியிடுவதை நினைத்து ஷேர்சாட்டில் இணைந்திருப்பவர்கள் பெருமை கொள்ளவேண்டும் என்கிறார். ஊழியர்கள் மட்டுமல்லாது உள்ளடக்கம் உருவாக்குபவர்களுக்கும் இந்த உணர்வு சென்றடையவேண்டும் என்கிறார்.
வட்டார மொழியை விரும்பும் பயனர்கள்
ஷேர்சாட் நிறுவனர்களைப் பொருத்தவரை வட்டார மொழியில் சமூகத்துடன் ஒருங்கிணைய விரும்பும் பாரத பயனர்களும் ஆங்கில மொழியில் ஒருங்கிணைய விரும்பும் இந்தியப் பயனர்களும் வெவ்வேறு அல்ல.
”முன்பெல்லாம் வட்டார மொழியை விரும்பும் பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் விதமும் தேடும் விதமும் மாறுபட்டிருக்கும். ஆனால் இவர்கள் இணையத்தில் அதிக நேரம் செலவிட்டதைத் தொடர்ந்து இவர்களும் முன்னேறி இந்தியாவின் பெருநகரங்களில் இருக்கும் பயனர்களைப் போன்றே மாறிவிட்டனர்,” என்கிறார்.
ஷேர்சாட் ஒரு பில்லியன் பயனர்களுக்கு சேவையளிக்கும் வகையில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் உள்ளடக்கம் உருவாக்குபவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. வணிக ரீதியாக சிறப்பான டூல்களை உருவாக்கும் விதம், ரசிகர்களை ஈர்க்கும் விதம், தங்களது உள்ளடக்கங்களுக்கு சிறு தொகையைக் கட்டணமாகப் பெறுவது போன்றவற்றில் பயிற்சியளிக்கிறது.
ஆங்கில கட்டுரையாளர்: ஷைலேஷ் ஜா | தமிழில்: ஸ்ரீவித்யா