‘இழப்பதற்கு எதுவுமில்லை’ - தொழில் அனுபவம் பற்றி டாக்டர்.வேலுமணி
TechSparks 2021 நிகழ்ச்சியில் பேசிய இந்தியாவின் மிகப்பெரிய நோய் பரிசோதனை சங்கிலித்தொடர் நிறுவனமான தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கிய டாக்டர்.ஏ.வேலுமணி, நிறுவனத்தை விற்பனை செய்தது மற்றும் எதிர்கால திட்டம் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தைரோகேர் நிறுவனத்திற்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவின் மிகப்பெரிய நோய் பரிசோதனை மையங்களைக் கொண்டுள்ள நிறுவனமான தைரோகேர் அண்மையில், பார்ம் ஈஸி நிறுவனத்தால் 66.1 சதவீத பங்குகள், ரூ.4,546 கோடிக்கு கையகப்படுத்தப்பட்டது. இந்த தொகையில் ரூ.3,500 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பயன்படுத்தப்படும் என்று கையகப்படுத்தலின் போது நிறுவனர் டாக்டர்.வேலுமணி கூறியிருந்தார்.
“இந்தத் துறை உற்சாகம் அளிக்கக் கூடியதாக இருக்கும் போது, இதிலிருந்து வெளியேறுகிறேன். அடுத்த 20 ஆண்டுகளுக்கு சுகாதாரத் துறை துடிப்பானதாக இருக்கும் என்பதை கோவிட்-19 உணர்த்தி இருந்தாலும் நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். மேலும், இந்த வர்த்தகத்தை எனது பிள்ளைகளிடமும் ஒப்படைக்கவில்லை. என் நிறுவனத்தை கையகப்படுத்திய நிறுவனத்தில் இந்த பணத்தை போட்டுள்ளேன்,” என்று வேலுமணி கூறியிருந்தார்.
இந்நிலையில், டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில், பேசிய போது, நிதி நுட்பம் உள்ளிட்ட மற்ற துறைகளில் இருந்து இந்தத் துறை வேறுபட்டிருக்கவில்லை எனக் கூறினார். இன்று எல்லாமே தானியங்கிமயமாகி இருக்கிறது என்றார்.
கோவிட்-19 அச்சத்தை உண்டாக்கி, பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
“கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரத்துறை ஆண்டுக்கு 15% வளர்ச்சி அடைந்தது என்றால் அடுத்த 15 ஆண்டுகளில் ஆண்டுக்கு 30 சதவீதம் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன்,” என்றார்.
“சந்தையில் அதிகப் பங்கு கொண்டவர்கள் மேலும் வளர்ச்சி அடைவார்கள். துண்டு துண்டாக இருக்கும் பிரிவுகளுக்குப் பதிலாக, ஒருங்கிணைந்த ஒற்றை சுகாதார அமைப்பிற்கு இடம் இருக்கிறது. மற்ற நாடுகளை விட சுகாதாரத் துறையில் இந்தியா வேகமாக வளரும், என அவர் இதற்கு விளக்கம் அளித்தார்.
புதிய வேலைவாய்ப்புகள்
அடுத்தது என்ன எனும் கேள்விக்கு, வாய்ப்புகளை பரிசீலித்துக்கொண்டிருப்பதாக டாக்டர்.வேலுமணி கூறினார்.
“நான் சொந்த நிறுவனத்தை துவக்க மாட்டேன். ஆனால், ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை மற்றவர்கள் தொழில் துவங்க வழிகாட்டுவேன். கிரே காலர் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் நம்பிக்கை இருக்கிறது. இந்த பிரிவில் கவனம் செலுத்துவேன்,” என அவர் கூறினார்.
“குழப்பங்களில் இருந்து விடுபட்டு வலுவான கவனத்தை கொண்டிருங்கள். என்னால் ஏன் முடியாது எனும் எண்ணத்தை 300 தொழில் முனைவோரிடம் ஏற்படுத்த விரும்புகிறேன்,” என்றும் கூறினார்.
1996ல் துவங்கிய தைரோகேர் நிறுவனம் சீரான வளர்ச்சி கண்டது. மருத்துவத் துறை வர்த்தகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், தைரோகேர் நிறுவனம் ஃபார்ம்ஈஸி நிறுவனம் கீழ் நன்றாக செயல்படும் என நம்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த முடிவு மூன்று மணி நேரத்தில் எடுக்கப்பட்டது. எப்போதுமே, நீங்கள் விவாதிக்க வேண்டும் அல்லது முடிவு எடுக்க வேண்டும் என்பதில் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். விவாதித்தால், உங்களால் முடிவு எடுக்க முடியாது. நல்ல முடிவு என்று எதுவும் இல்லை. எனவே முடிவு எடுத்து அதை சரியானதாக மாற்றுங்கள்,” என்று டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் உரையாடிய போது கூறினார்.
இழப்பதற்கு எதுவுமில்லை
“நான் ஒரு விவசாயி மற்றும் விஞ்ஞானி. வர்த்தகத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் கீழ் மத்திய தர வகுப்பில் இருந்து வந்தேன். 15 ஆண்டுகள் நிலையான அரசு வேலையில் இருந்த பிறகு, செளகர்யமான மண்டலங்கள் ஆபத்தானவை என உணர்ந்த போது தைரோகேர் நிறுவனத்தை துவக்கினேன்,” என்று தனது தொழில் பயணம் பற்றி கூறுகிறார்.
வர்த்தகம் என்றால் ஏற்ற இறக்கம் இருக்கும் என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால், தைரோகேர் நிறுவனத்தில் எந்த இறக்கமும் இல்லை, இரண்டு ஏற்றங்களே இருந்தன என்கிறார்.
“பூஜ்ஜியத்தில் இருந்து துவங்கினேன். வாழ்க்கையில் வெற்றி என்பது delta = x1-x2 என சொல்லிக்கொள்வேன். என்னுடைய X1 பூஜ்ஜியமாக இருந்ததால் இழப்பதற்கு எதுவுமில்லை. என்னுடைய பயணத்தை பார்த்தால் ஏற்ற இறக்கம் இல்லாமல், சீராக இருக்கும். நான் எதுவும் கடன் வாங்கவில்லை. அதிக பார்ட்னர்களை கொண்டிருக்கவில்லை. சுகாதாரத் துறையில் மூன்று விதமான வர்த்தகர்கள் உள்ளனர். ஒருவர் பணம் சம்பாதிப்பவர், இன்னொருவர் அதிக பணம் சம்பாதிப்பவர் மற்றும் இன்னொருவர் மிக அதிகமாக பணம் சம்பாதிப்பவர்,” என்கிறார் வேலுமணி.
இழப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில், அஞ்சுவதற்கும் எதுவும் இருக்கவில்லை என்கிறார். தைரோகேர், சீரான வர்த்தகம் கொண்ட கடன் இல்லா நிறுவனமாக விளங்கியது.
“வர்த்தக மாதிரி நன்றாக இருந்தால் உங்களிடம் விற்பனை செய்வதற்கான மாதிரி தேவையில்லை. இது எளிமையானது. உற்சாகமானது,” என்கிறார்.
அவருடைய மறைந்த மனைவி மற்றும் அம்மா ஆகிய இரண்டு பெண்கள் அவரது பயணத்தில் துணை நின்றனர்.
“தைரோகேர் வெற்றிக்கு என் மனைவி முக்கியக் காரணம். என் அம்மாவும் மிகவும் ஆதரவாக இருந்தார். அவரிடம் இருந்து சிக்கனத்தை கற்றுக்கொண்டேன். ஆண்கள் வெற்றி பெற்றால் குடும்பம் செழிக்கும். பெண்கள் வெற்றி பெற்றால் சமூகம் செழிக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
ஆங்கிலத்தில்: சிந்து கஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்