டிசம்பர் மாத மின்வாகன விற்பனையில் முன்னிலை இடத்தில் பஜாஜ் ஆட்டோ!
வாஹன் இணையதள தகவல் படி, டிசம்பர் மாதத்தில், பஜாஜ் ஆட்டோ 24.93 சதவீத சந்தை பங்குடன் முன்னிலை வகிக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் 18.78 சதவீத சந்தை பங்கு கொண்டுள்ளது.
புத்தாண்டில் இந்திய மின்சக்தி இருசக்கர வாகன சந்தையில், முக்கிய மாற்றமாக, ஓலா எலெக்ட்ரிக்கை பின்னுக்குத்தள்ளி பஜாஜ் எலெக்ட்ரிக் முன்னிலை பெற்றுள்ளது.
'வாஹன்' (VAHAN) புள்ளிவிவரம் படி, டிசம்பர் மாதத்தில், பஜாஜ் ஆட்டோ 18,276 வாகனங்கள் விற்பனையோடு, 24.93 சதவீத சந்தை பங்கை பெற்றுள்ளது. இதே காலத்தில், ஓலா எலெக்ட்ரிக் 13,769 வாகனங்களை விற்பனை செய்து 18.78 சதவீத சந்தை பங்கை பெற்றுள்ளது.
நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நிறுவனங்கள் விற்பனையில் சரிவை சந்துள்ளன. நவம்பரில் வாகனங்கள் மொத்த விற்பனை, 1,19,654 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 73,316 ஆக குறைந்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் சந்தை பங்கு நவம்பரில் 24.7 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பரில் 18.78 சதவீதமாக குறைந்துள்ளது. நவம்பரில் 29,196 வாகனங்கள் விற்பனை ஆன நிலையில் டிசம்பரில் 13,769 ஆக குறைந்துள்ளது.
எனினும், ஆண்டு விற்பனையில் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ஆண்டுக்கான சந்தை பங்கு 35.5 சதவீதமாக உள்ளது. மார்ச் மற்றும் ஜூலையில் நல்ல விற்பனை உண்டானது.
இதனிடையே, டிவிஎஸ் மோட்டார் 17,212 வாகனங்கள் விற்பனையோடு, இரண்டாவது இடம் பிடித்தது. சந்தை பங்கு 23.48 சதவீதம் ஆகும். ஏத்தர் எனர்ஜி, டிசம்பரில் 10,421 வாகனங்கள் விற்பனையோடு, 14.2 சதவீத சந்தை பங்கு கொண்டுள்ளது.
பசுமை தொழில்நுட்பம் மீதான ஆர்வம் காரணமாக இந்திய மின்வாகனச் சந்தை தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், மின்வாகன சந்தை நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்த ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.
ஆங்கிலத்தில்: ஆபா வாரியர், தமிழில்: சைப்பர் சிம்மன்
Edited by Induja Raghunathan