'உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள்’ பட்டியலில் இடம்பெற்ற 82 வயது போராட்ட பாட்டி!
82 வயது பில்கிஸ் உட்பட ஐந்து இந்தியர்கள் டைம் நாளிதழின் சக்திவாய்ந்த 100 நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
82 வயது பில்கிஸ் டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கவனம் ஈர்த்தவர். இவர் டைம் நாளிதழின் ’உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு முன்பு அமைதியான முறையில் போராடிய பெண்களில் பில்கிஸ் ஒருவர்.
ரானா ஆயுப் என்கிற பத்திரிக்கையாளர் பில்கிஸை இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியில் போராட்டக்காரர்கள் காலை எட்டு மணி முதல் நள்ளிரவு வரை களத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பில்கிஸ் தனது இறுதி மூச்சு வரை களத்தில் இருந்து நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடுவேன் என்று முழக்கமிட்டார்.
“நான் முதலில் பில்கிஸை பார்த்தபோது கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். சுற்றி இளம் பெண்கள் பதாகைகள் ஏந்தி அமர்ந்திருந்தனர். புரட்சிகரமான வாக்கியங்கள் அதில் எழுதப்பட்டிருந்தன. பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் குரல்கள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வரும் மோடியின் ஆட்சியில், ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதியாக இவர் திகழ்கிறார்,” என்று ரானா குறிப்பிட்டுள்ளார்.
ஷாஹீன் பாக் போராட்டம் மாதக்கணக்கில் தொடர்ந்தது. மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற மற்ற நகரங்களிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன. பாலிவுட் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ஆகியோரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஷாஹீன் பாக் சென்றிருந்தனர்.
புக்கர் பரிசு வென்ற அருந்ததி ராயும் சிஏஏ-க்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தார்.
ஸ்வரா பாஸ்கர், தாப்சி பன்னு, தீபிகா படுகோன் போன்ற நடிகைகளும் இந்த அமைதி வழி போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
பில்கிஸ் மட்டுமல்லாது பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, பேராசிரியர் ரவீந்திர குப்தா ஆகியோரும் ‘உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.