ஃபிட்டாக ஆரோக்கியத்துடன் இருக்க வழிகாட்டும் ஷில்பா ஷெட்டி அறிமுகம் செய்துள்ள APP!
வொர்க் அவுட், ஊட்டச்சத்து என நாம் நம்மை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்துக்கொள்ள உதவும் புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறார் ஷில்பா ஷெட்டி.
நடிகை, முதலீட்டாளர், உடற்பயிற்சி நிபுணர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஷில்பா ஷெட்டி. ஒருவர் தனக்கு ஆர்வமுள்ள பகுதியில் ஈடுபட வயது ஒரு தடையல்ல என்று திடமாக நம்புகிறார்.
தற்போது தொழில்முனைவராக தன்னை உலகிற்கு வெளிப்படுத்தும் இவர் ’தி ஷில்பா ஷெட்டி செயலி’ (The Shilpa Shetty App) அறிமுகப்படுத்தியுள்ளார். முதலில் iOS-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி விரைவில் கூகுள் ப்ளேஸ்டோரில் அறிமுகமாக உள்ளது. மக்கள் தங்களுக்கு பிடித்தமான இலக்கை எளிதாகவும் தாங்கள் விரும்பிய வகையிலும் எட்ட உதவுவதே இந்த செயலியின் நோக்கமாகும்.
இந்த செயலி 15 திட்டங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 21 நாள் உடல் எடை குறைப்பு திட்டமும் உள்ளது. தினசரி யோகா பயிற்சி, தட்டையான வயிறு, பிரசவத்திற்கு பிறகான எடை குறைப்பு, தனிப்பட்ட பயனரின் தேவைக்கேற்ற திட்டங்கள், டயட் ப்ளான் என பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.
செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. iOS தளத்தில் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னெஸ் தொடர்பான செயலிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
”ஆரோக்கியத்திற்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன். இதை விழிப்புணர்வு மூலம் மக்களிடையே பரப்ப முடிந்தால் மிகப்பெரிய அளவில் சாதித்த உணர்வு எனக்குக் கிடைக்கும்,” என்று மும்பையில் இருந்து தொலைபேசி அழைப்பு மூலம் ஹெர்ஸ்டோரி உடன் தெரிவித்தார்.
ஆரோக்கியமான பயணம்
படிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவருக்கு ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் மீது இருந்த ஆர்வமே இந்த பயணத்திற்கு வழிவகுத்தது. “ஒரு பணியை எப்போதும் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் தாமதமாக செய்வது சிறந்தது என்று எனக்குள் கூறிக்கொண்டேன்,” என்றார்.
விரைவிலேயே அவர் யோகா டிவிடி அறிமுகம் செய்தார். பின்னர் Iosis அறிமுகம் செய்தார். ஷில்பா அதன் இணை உரிமையாளர். 2018-ம் ஆண்டு ஒரு ஸ்டார்ட் அப்பில் முதலீட்டு செய்தார். அத்துடன் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் தொடர்பான புத்தகம் ஒன்றையும் வெளியிட்டார். சமீபத்தில் இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
”இந்த வளர்ச்சி படிப்படியாக ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட தருணத்திலிருந்து வளர்ச்சி காணப்பட்டதாக சுட்டிக்காட்டமுடியாது,” என்றார் ஷில்பா ஷெட்டி.
இது ராக்கெட் விஞ்ஞானம் அல்ல...
ஒரு நடிகையாகவும் பிரபலமாகவும் மக்கள் கவனம் தொடர்ந்து இவர் மீது இருந்து வருவதால் இவர் பிரசவத்திற்குப் பிறகு எடை குறைத்த விதம், இவரது ஃபிட்னஸ் மற்றும் சரும பராமரிப்பு முறை போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டியதை ஷில்பா உணர்ந்தார்.
”பலருக்கு இதில் ஆர்வம் இருப்பினும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பது தெரியவில்லை. ஆகவே அந்த வழிமுறைகளை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதை உணர்ந்தேன். இது ராக்கெட் விஞ்ஞானம் இல்லை. ஆரோக்கியம் என்பது ஒருவருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசாகும்,” என்றார்.
ஷில்பா கேல் ஸ்மூத்தி, அவகாடோ போன்றவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வது மட்டுமே ஃபிட்னஸ் அல்ல என்று நம்புகிறார். உணவு தொடர்பான இவரது திட்டமிடலில் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் சமைக்கப்படும் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவே இடம்பெற்றுள்ளது.
ஷில்பா தனது டிவிடி-க்கள், புத்தகம், யூட்யூப் சானல், செயலி போன்றவற்றின் மூலம் மக்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்கிற தகவலைப் பரப்பி அவர்களுக்கு உதவ விரும்புகிறார்.
”நான் தனிப்பட்ட முறையில் என்னுடைய நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறேன். நடிகர்கள் உட்பட வெகு சிலரே தாங்கள் ஆதரவளிக்கும் விஷயத்திற்காக பணம் செலவிட முன்வருகின்றனர். எனவே நான் இவ்வாறு செய்வதில் பெருமைப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை இது ஆரோக்கியத்தின் மீதான முதலீடு,” என்றார்.
Digi Osmosis நிறுவனர் மனீஷ் குமார் செயலியை அறிமுகப்படுத்த ஷில்பாவுடன் இணைந்துள்ளார்.
ஸ்டார்ட் அப்
”நான் இதை ஸ்டார்ட் அப் வென்சராகத் துவங்கவில்லை,” என்கிறார் ஷில்பா. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவர் தனது யூட்யூப் சானலில் ரெசிபிக்களை இலவசமாக பதிவிடத் தொடங்கினார். அந்த சமயத்தில் அவர் தனது உடற்பயிற்சி வீடியோக்களை அதில் இணைக்க நினைத்தார். ஆனால் அதற்கான மதிப்பு நிர்ணயிக்கப்படாமல் போனால் அவர் எதிர்பார்த்தவாறு மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்தார்.
மேலும் அவற்றை செயலியில் இணைக்கவேண்டுமானால் உடற்பயிற்சி செய்யும் முறையில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தார். எனவே அவர் அனைத்து வீடியோக்களையும் மீண்டும் படம்பிடித்து உடற்பயிற்சி செய்யும் விதம் குறித்த கூடுதல் தகவல்களை பதிவு செய்தார்.
“உடற்பயிற்சியின் பின்னணியில் உள்ள அறிவியலைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். கூடுதலாக 200 மணி நேர உள்ளடக்கத்தை படம்பிடித்தேன். இதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. இவற்றை இணைத்த பிறகே ஒரு வென்ச்சராக உருவானது. நாங்கள் செயலியில் புதிய வீடியோக்களை இணைக்க உள்ளோம்,” என்றார்.
நேரத்தையும் பணத்தையும் செலவிட்டார்
ஷில்பாவின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. “இரண்டாண்டுகளுக்குப் பிறகு இதை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தினமும் பல்வேறு சிக்கல்களை சமாளிக்க வேண்டியுள்ளது. இரண்டே நாட்களில் நாங்கள் முன்னணியில் இருப்பதாக என்னுடைய வணிக பார்ட்னர் தெரிவித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை,” என்றார்.
வணிகம் மற்றும் வருவாய் அம்சங்கள் குறித்து ஷில்பா கூறும்போது,
“பிரசவத்திற்கு பிறகு எடை குறைக்க நீங்கள் விரும்பினால் உங்களுக்கு விரிவான தகவல்கள் கிடைக்கும். சுமார் 150 பக்கங்களில் என்ன சாப்பிடலாம், எதைக் குடிக்கலாம், எப்படிச் சாப்பிடவேண்டும், எதற்குச் சாப்பிடவேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்,” என்றார்.
எனினும் இத்தகைய அம்சங்களை அறிமுகப்படுத்த பணம் தேவைப்படுவதால் இரண்டாம் கட்டமாக தனித்தேவைக்கேற்றவாறு ஆலோசனை வழங்கும் முறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். எடை குறைப்பு மட்டுமே இந்த செயலியின் நோக்கம் அல்ல. மக்களுக்கு உணவு, ஊட்டச்சத்து, ஃபிட்னஸ் ஆகிவற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
”நீங்கள் ஒரு மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்கலாம் என்று நான் உத்தரவாதம் அளிக்கப்போவதில்லை. ஆனால் இந்தப் பயணத்தை நீங்கள் மேற்கொண்டால் உங்களிடமும் உங்கள் வாழ்க்கைமுறையிலும் மாற்றத்தைக் காணலாம். குறிப்பிட்ட வகையில் ஏன் சாப்பிடச் சொல்கிறோம் என்பதும் உங்களுக்குப் புரியும். இந்த பயணத்தின் வழியே உங்களுக்கு சிறப்பான புரிதல் ஏற்படும். அதன் பின்னர் உங்களது வாழ்க்கைமுறையை ஆரோக்கியமாக மாற்றிக்கொள்வீர்கள். தானாகவே உங்களது பிஎம்ஐ-க்கு ஏற்றவாறு உடல் எடை மாறிவிடும்,” என்றார்.
தனித்துவமான முயற்சி
ஷில்பா ஷெட்டி என்கிற பிராண்ட்தான் இந்த செயலியின் சிறப்பம்சம். யோகா மீது அவருக்குள்ள ஈடுபாடே செயலியை வேறுபடுத்திக் காட்டுகிறது.
“நான் என்னுடைய 43 வயதில் செயலியில் உள்ள அனைத்து யோகாசனங்களையும் செய்யமுடியும்போது மற்றவர்களால் ஏன் முடியாது,” என்றார்.
யோகாவைப் பொறுத்தவரை இந்தச் செயலியுடன் முன்னோடியாகத் திகழ விரும்புகிறார் ஷில்பா. ”உலகத் தரம் வாய்ந்த யோகா செயலியை நம் நாட்டில் இதுவரை யாரும் அறிமுகப்படுத்தவில்லை என்பதால் நான் இதில் முன்னோடியாக இருக்க விரும்புகிறேன்,” என்றார்.
ஸ்டார்ட் அப்களில் முதலீடு
2018-ம் ஆண்டு ஷில்பா ’Mamaearth’ என்கிற ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்தார். தாய், சேய் பராமரிப்புப் பொருட்கள் சார்ந்த இந்நிறுவனத்தை வருண், கஜல் தம்பதி நிறுவியுள்ளனர். ஷில்பா இந்த ஸ்டார்ட் அப்பின் பங்கு முதலீட்டாளர் ஆவார்.
”ஆர்வத்துடன் வணிக முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவர்கள் தங்களுக்கு நம்பிக்கை இருக்கும் பகுதியில் செயல்பட விரும்புகின்றனர். அவர்களுக்காக நான் பணத்தை கொடுக்க விரும்புகிறேன். அப்படித்தான் Mamaearth முயற்சியிலும் இணைந்துகொண்டேன்,” என்றார்.
”தற்சமயம் ஷில்பா ஷெட்டி செயலியில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்த விரும்புகிறேன். செயலியில் இன்னமும் அதிக திட்டங்களை பதிவேற்றம் செய்ய உள்ளோம். அதிக பணிகள் இருப்பதால் நேரம் தேவைப்படுகிறது,” என்றார்.
சிறந்த மற்றும் மோசமான நாட்கள்
மக்கள் கவனம் எப்போதும் இவர் மீது இருந்துகொண்டே இருக்கும். குறை சொல்லாத அளவிற்கு எப்போதும் இவர் கச்சிதமாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும். இதை சமாளிப்பது கடினம் என்று ஷில்பா ஒப்புக்கொள்கிறார். சில சமயம் தலைமுடியை ஒழுங்குபடுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் என்ன செய்வார்? இந்தக் கேள்விக்கு அவர் சிரித்தவாறே,“Iosis சென்று தலைமுடியை ஒழுங்குபடுத்திக் கொள்வேன்,” என்றார்.
ஷில்பா தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த சவால்கள் குறித்து கூறும்போது,
“என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் பல சர்ச்சைகளை கடந்து வந்துள்ளேன். தொழில்முறையாகவும் பல சவால்களை சந்தித்துள்ளேன். நாம் தொடர்ந்து போராடவேண்டும். உங்களை அழித்துவிடாத எதுவும் உங்களை வலுவாக்கும் என்பதை நான் திடமான நம்புகிறேன்,” என்றார்.
ஷில்பா தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில்முறை வாழ்க்கைக்கும் இடையே பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு பகுதியையும் சிறப்பாக கையாள்வதாகவும் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது இதற்குப் பெரிதும் உதவுவதாகவும் தெரிவிக்கிறார்.
”நான் தினமும் தியானம் செய்யும் 15-20 நிமிடங்கள் மட்டுமே அமைதியாக உணர்கிறேன். காலை வேளையிலோ இரவு நேரத்திலோ தொடர்ந்து இதைச் செய்து வருகிறேன்,” என்றார்.
அவரைத் தொடர்ந்து செயல்படவைக்கும் மற்றுமொரு விஷயம் நன்றியுணர்ச்சி. “நன்றியுணர்ச்சிதான் எனக்கான மேஜிக் மருந்து. நான் காலையில் எழுந்த உடன் ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளுக்காகவும் முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பேன். அதுவே நான் தொடர்ந்து சரியாக பயணிக்க என்னைத் தயார்படுத்துகிறது,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில்: ஸ்ரீவித்யா