தைராய்டு, பிசிஓடி, 100கிலோ உடல் எடை; பாடி ஃபிட் ஆகி ‘மிசஸ் எர்த்’அழகி ஆன ஊக்கமிகு கதை!
5 அடி 7அங்குல உயரத்திற்கு ஏற்ற 60கிலோ எடையில் உடலை ஃபிட்டாக வைத்து ‘மிசஸ் எர்த்' ‘மிசஸ் பாடி ஃபிட்’ என அழகுக்காக பல மகுடங்களை சூடிய தீக்ஷா சாப்ராவின் இரு ஆண்டுகளுக்கு முன்னதான எடை 100கிலோ.
ஆம், ஒன்பது வயது குழந்தையின் தாய், 2017ம் ஆண்டுக்கான Mrs Earth India 2017' போட்டியின் ரன்னர் அப், மிசஸ் பாடி ஃபிட் 2017, சோஷியல் மீடியா பிரபலம், உலகெங்கிலும் உள்ள 300க்கும் மேற்பட்ட கட்டுக்கோப்பான உடலமைப்பு கொண்ட ஆண், பெண்களது ஃபிட்னஸ் குரு, என பன்முகத்துடன் விளங்கும் தீக்ஷா சாப்ராவின் ஃபிட்னஸ் பயணம், வழக்கமான எடை இழப்பு பற்றிய மற்றொரு வியக்கத்தக்க கதையல்ல. கடினஉழைப்பு, பொறுமை, மற்றும் மனஉறுதியின் பயணம் அவருடைது!
பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த தீக்ஷா, டில்லியில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகியாக பணிபிரிந்து வந்துள்ளார். வீடு, வேலை என்று இரண்டிற்கும் இடையில் சுற்றியதுடன், அவரது 4 வயது குழந்தையையும் கவனித்து கொள்ளவேண்டும். இதற்கு இடையே உடற்பயிற்சி நேரம் என்ற ஒன்றை அவரால் ஒதுக்க முடியவில்லை. விளைவாய், அவருடைய எடை எக்குதப்பாய் எகிறிக் கொண்டிருந்துள்ளது.
“தொடக்கத்தில், மரபணு சார்ந்து எடை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். ஏன்னா, எங்க வீட்டு சைடு எல்லாருமே பருமனானவர்கள். அடிக்கடி என் கணவரும், ‘பரவாயில்லை. நீ ஒரு தாய். தாய் போல் தான் இருக்கிறாய்’ என்றுக் கூறி கேலி செய்வார்,”என்று பெட்டர் இந்தியாவிடம் கூறியுள்ளார் தீக்ஷா.
ஆரம்பத்தில், அவருடைய லைஃப்ஸ்டைலே உடல் பருமனக்கான காரணம் என்று நம்பிக் கொண்டிருந்தவர், மெல்ல ஒழுங்காக உணவு உட்கொள்ளாத போதும் உடலின் எடை கூடுவதை உணர்ந்தார். அச்சமயத்தில், காலேஜ் ரீ யூனியன் பார்டி நடந்துள்ளது. அந்நிகழ்வு முடிந்த இரவு தீக்ஷாவிற்கு தூக்கமற்று இருந்துள்ளது.
“என் நண்பர்களில் இரண்டு பேர் என்னை திகிலுற்று பார்த்து, ‘நாளுக்கு நாள் உன் எடை அதிகரித்து கொண்டே இருக்கிறது. உன்னை பார். நீ என்ன செய்யுற? காலேஜ் படிக்கும் போது நீ ஒரு விளையாட்டு வீராங்களை, என்சிசி கேண்டிடேட். என்னாச்சு உனக்கு?’ என்று கேட்டனர்,” என்றார். அச்சம்பவமே இன்றைய மாற்றத்திற்கான அச்சாணியாக அமைந்தது.
தீக்ஷா டாக்டரை ஆலோசிக்க சென்ற போது தான், அவருக்கு தைராய்டு மற்றும் பி.சி.ஓ.டி (பாலிசிஸ்டிக் கருப்பை நோய்) இருப்பது கண்டறியப்பட்டது.
அச்சமயத்தில், குடும்பத்தின் முழுமையான ஊன்றுகோலாக இருந்த அவரது மாமியார், கடைசி கட்ட மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்துள்ளார். “எனவே என் பிரச்சினைகளை அவருக்கும் மேலானதாய் என்னால் முன் வைக்க முடியவில்லை. இரண்டு வருடங்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார். அவருக்கு ஆதரவாக நான் வீட்டிலே இருந்தேன். அவருடைய உடல்நிலையும், 2014ம் ஆண்டு அவர் இறந்ததும், எங்கள் முழு குடும்பத்தாருக்கு ஒரு பெரிய உணர்ச்சி இழப்பு ஏற்பட்டது,” என்று பகிர்ந்தார் அவர்.
குடும்பத்தை கவனித்துக்கொள்ள அவருடைய வேலையையும் ராஜினாமா செய்துள்ளார். பெரும்பாலும், விரக்தியடைந்த நேரங்களில் உணவு உட்கொள்ளுதலையே மனஅழுத்தத்தை போக்கும் நிவாரணியாக்கி கொண்டார். தொடர்ந்து எல்லா நேரத்திலும் ஆரோக்கியமற்ற உணவு சாப்பிடுவதையும் பழக்கமாக்கிக் கொண்டுள்ளார். உடல்நலம் மோசமடைவதைப் பற்றி டாக்டர்களும் தொடர்ந்து அவரிடம் எச்சரிக்கை செய்து வந்தனர்.
அக்காலத்தில் நீண்ட தூரத்திலிருந்து வரும் உறவினர்கள் தீக்ஷாவை சந்திக்கும் போதெல்லாம், ‘ஏன் நீ அதிகம் எடை போடுகிறாய்? அதிகமாக சாப்பிடுகிறாயா?’ என்றெல்லாம் கூறி மேலும், விரக்தியை ஏற்படுத்தியுள்ளனர். இவையனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அவருடைய உடற்பயிற்சி பயணம் முதற்கட்டமாய் ‘வாக்கிங்’ உடன் தொடங்கியது.
“2கி.மீ தொடர்ந்து நடந்தாலே மூச்சுவாங்கிரும். ஆனாலும், தொடர்ந்த விடாப்பிடியாக நடந்தேன். இன்டர்நெட்டில் தேடி சில உடற்பயிற்சிகளையும் செய்துவந்தேன்.”
தன் கணவரிடம், டிரெட்மில் வாங்கிதரக்கூறி, பயிற்சியை தொடர்ந்தார். எதிர்பார்த்ததிற்கும் மேல், 7 மாதத்தில் 18கிலோ எடையினை குறைத்தார். ஆனாலும், தீக்ஷாவிற்கு மகிழ்ச்சியில்லை. ஏனெனில், உடல் எடை குறைக்க விரும்புவோர் செய்யும் அதே தவறுகளையே தீக்ஷாவும் செய்தார்.
அவருடைய எடை இழப்பில், சரியான உணவு முறைகளும், உடற்பயிற்சிகளும் செய்யவில்லை என்று ஒப்புக் கொள்ளும் அவர் தி இந்துவுக்கு அளித்த பேட்டியில்,
"கம்மியா சாப்பிட்டு அதிகம் கார்டியோ உடற்பயிற்சிகளை செய்தேன். முதல் ஆறுமாதங்களிலே 18கிலோ எடை குறைத்தேன். ஆனா, இடுப்பு மற்றும் கை பகுதிகளில் எடை குறைந்து தளர்வாக சுருங்கி தோல் தொங்கியது. எப்போதும் சோர்வாகவே வேறு இருந்தது. எல்லாத்துக்கும் நான் எடுத்து கொண்ட முறையற்ற உணவுகள் தான் காரணம்,” என்றுள்ளார்.
பின், சமச்சீர் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர், நியூட்ரிஷீயன் படிப்பையும் படித்துள்ளார். புரத தேவைக்காக அவருடைய டயட் மெனுவில் மீன் மற்றும் இறைச்சியை சேர்த்து வெஜிடேரியனிலிருந்து நான் வெஜ்டேரியனாகியுள்ளார்.
“கொஞ்சம் கொஞ்சமாக இறைச்சி சாப்பிட தொடங்கினேன். படிப்படியாக அளவை உயர்த்திக் கொண்டேன். வொர்க் அவுட் செய்யும் யாராக இருந்தாலும் அவர்களது புரோட்டீன் சத்துக்கான சிறந்தது இது,”என்கிறார்.
தொடர்ச்சியாய் ஜிம்மிலும் சேர்ந்துள்ளார். வெயிட் லிப்டீங் செய்து அவருடைய தசைகள் மற்றும் தோல்களை இறுக்கி மேலும் 12 கிலோ எடையை குறைத்துள்ளார்.
அவருடைய நீண்ட போராட்டமிக்க ஃபிட்னஸ் பயணத்திற்கு பரிசாகக் கிடைத்தது அவருடைய ஆரோக்கியமான உடல் மட்டுமில்லை. கடந்தாண்டு ’மிசஸ் எர்த் இந்தியா’ அழகி போட்டியிலும் பங்கு பெற்று ரன்னர்அப் பட்டத்தையும், ’மிசஸ் பாடி ஃபிட்’ பட்டத்தையும் பெற்றார். தீக்ஷா அவருடைய வேற லெவலிலான மாற்றத்தை உலகத்தாரும் அறிய விரும்பி இணையவெளியில் பகிரத்தொடங்கினார்.
அவருடைய எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன் புகைப்படங்களை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திட, நாளுக்கு நாள் ஃபாளோயர்களின் எண்ணிக்கையும் எகிறியது.
“சோஷியல் மீடியாக்களில் அதிகளவில் என்னை பின்தொடர்ந்தனர். என்னுடைய இந்த ஃபிட்னஸ் போராட்டத்தை அவர்களுடைய வாழ்க்கையிலும் தொடர்புப்படுத்தி பார்த்தனர். மேலும், அவர்களது நியூட்ரீஷியன் டயட்டிற்கும், ஃபிட்னஸ் டிரையினிங்கும் உதவுமாறு நிறைய பேர் வேண்டுகோள் விடுத்தனர்,” என்று தி இந்துவிடம் தெரிவித்துள்ளார் தீக்ஷா.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, தீக்ஷா சாப்ரா பிட்னஸ் கன்செல்டேஷன் ஒன்றையும் நிறுவி, பல நூறு பெண்களுக்கும், ஆண்களுக்கும் டிரையினிங் கொடுத்துவருகிறார். தவிர, நியூட்ரீஷியனிஸ்ட், மாடல், பிட்னஸ் டிரையினர், டெட் எக்ஸ் பேச்சாளர் என மிளிரும் அவர் ஸ்கூப் வூப்பிடம் கூறுகையில்,
“பிட்னஸ் என்பது உடல் பருமனை குறைத்தல் பற்றியது அல்ல, ஆரோக்கியமாக, அழகாய் உணர்ந்து நம்பிக்கையை அதிகரிப்பது. நம் ஊரில் கல்யாணமாகும் பெண்கள் திருமணத்துக்கு பிறகு, குடும்பம், குழந்தைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு, அவருடைய நலன் பற்றிய அக்கறையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும். ஆனால், நீங்களே மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இல்லாதபோது நீங்கள் எப்படி மற்றொருவரை கவனித்து கொள்ள முடியும்?
”வெற்று ஜாடியிலிருந்து எதையும் ஊற்ற முடியாது. பெண்கள் மீது திணிக்கப்படும் இந்த வெற்றுபுனைவுகளை நான் உடைக்க விரும்புகிறேன். இன்றைய பெண்கள் ஆரோக்கியமான ஒரு வாழ்வை முன்னெடுத்து செல்ல உதவ விரும்புகிறேன்,”என்றுள்ளார்.
படங்கள் உதவி : தீக்ஷா சாப்ரா இன்ஸ்டாகிராம் பக்கம்(@dikshamalik.malik)