சென்னை சுவரோவியங்களை டிஜிட்டல் சொத்தாக நீங்கள் வாங்கலாம் தெரியுமா?
`சிங்கார சென்னை’ திட்டத்தின்கீழ் சென்னை சாலைகளில் உள்ள சுவர்கள் வண்ணமயமான ஓவியங்களால் அழகுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் Jupiter Meta நிறுவனம் முதல் முறையாக சுவரோவியங்களை டிஜிட்டல் சொத்தாக வாங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இன்றைய பரபரப்பான உலகில் அனைவரும் ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். படிப்பவர்களுக்கு வீடு, பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி. வேலை பார்ப்பவர்களுக்கு வீடு, அலுவலகம். இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் புறப்படும் இடத்திலிருந்து செல்லவேண்டிய இடம் மட்டுமே நம் இலக்கு.
நாம் செல்லும் வழியில் பார்க்கும் எதையும் நின்று நிதானமாக ரசிக்க நமக்கு நேரம் கிடைப்பதில்லை.
நீங்கள் சிக்னலில் காத்திருக்கிறீர்கள். அழகான ஒரு சுவரோவியத்தைப் பார்க்கிறீர்கள். மெய்மறந்து ரசிக்கிறீர்கள். பின்னால் இருக்கும் வண்டியின் ஹாரன் சத்தம் உங்களை சுயநினைவிற்குக் கொண்டு வருகிறது. வேறு வழியின்றி ஓவியத்தைக் கடந்து சென்றுவிடுகிறீர்கள்.
இத்தனை ஆசையாக நீங்கள் பார்த்து ரசிக்கும் ஓவியத்தை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று சொன்னால் நம்புவீர்களா?
சுவர்களில் வண்ணமயமாக வரையப்படும் ஓவியங்களை டிஜிட்டல் வடிவில் சேமிக்கும் வசதியை வழங்குகிறது Jupiter Meta நிறுவனம். இந்நிறுவனம் சென்னை சாலையில் உள்ள சுவர்களின் ஓவியங்களுக்கு க்யூஆர் கோட் கொடுத்து டிஜிட்டல் சொத்தாக சேமிக்க உதவுகிறது.
'சிங்காரச் சென்னை’ திட்டத்தின்கீழ் சென்னை சாலைகளில் உள்ள சுவர்கள் வண்ணமயமான ஓவியங்களால் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன.
வெறும் சுவர்கள், சினிமா விளம்பரங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் என பார்த்து அலுத்துப்போன நம் கண்களுக்கு இந்த சுவரோவியங்கள் விருந்தளிக்கின்றன.
சென்னை அடையாறு பகுதியின் துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள சுவர்களில் 12 ஓவியங்கள் மிகவும் நேர்த்தியாக தீட்டப்பட்டுள்ளன. வருங்கால சென்னை எப்படியிருக்கும் என்கிற கற்பனையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
சுவரோவியங்களைப் பார்த்து ரசித்தால் மட்டும் போதாது. அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என நினைத்து இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது Jupiter Meta நிறுவனம்.
சென்னையில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கலையையும் படைப்பாளிகளையும் பிரபலப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
“நாங்கள் ’சென்னைவாசிகள்’ என்று பெருமைப்படுபவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட சென்னை நகரின் அழகைக் கொண்டாடுகிறது இந்தத் திட்டம். நேரடியாகக் கண்டு களிக்கக்கூடிய சுவரோவியங்களை டிஜிட்டல் சொத்தாகவும் மாற்ற விரும்புகிறோம்,” என்கிறார் Jupiter Meta சிஇஓ மானசா ரஞ்சன்.
தொழில்நுட்பம் கொண்டு ஸ்மார்ட் சாதனங்களை மட்டும்தான் உருவாக்க முடியுமா என்ன? வீடுகளிலும் அலுவலகங்களிலும் இருக்கும் பணிச்சுமையைக் குறைக்க மட்டும்தான் பயன்படுமா என்ன?
விவசாயம், நிதி, கல்வி என எத்தனையோ துறைகளை புதுமைப்படுத்தி அழகு பார்க்கும் தொழில்நுட்பம் தற்போது சுவரோவியங்களைப் பாதுகாக்கவும் புறப்பட்டு விட்டது.
ஆம்! முதல் முறையாக சுவரோவியங்களை NFT அதாவது டிஜிட்டல் சொத்தாக வாங்கும் வசதியை Jupiter Meta ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
Jupiter Meta சந்தைப்பகுதியில் இந்த என்.எஃப்.டி டிஜிட்டல் சொத்துகளை வாங்கிக்கொள்ளலாம். 'நம்ம சென்னை’ ஓவியங்கள் மக்களைக் கவர்ந்து வருகின்றன. சென்னை சென்ட்ரல், மரினா கடற்கரை போன்ற இடங்கள் மக்களுக்கு மிகவும் நெருக்கமானவையாக இருக்கின்றன.
சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் க்யூஆர் கோட் இணைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட ஓவியத்தின் டிஜிட்டல் வெர்ஷனைப் பார்க்க முடியும்.
அடுத்து ஓவியங்களின் பின்னணியில் இருப்பவர்களைப் பற்றியும் பார்த்துவிடுவோம். இந்த ஓவியங்களுக்கான ஐடியாவை உருவாக்கியது சென்னையைச் சேர்ந்த 108 Collective நிறுவனத்தின் கார்த்திக் எஸ்எஸ். ஆதித்யா சாவன் மற்றும் அவரது குழுவினர் ஸ்டைலிங் பணிகளில் பங்களித்திருக்கின்றனர். Hermon Arts என்கிற சைன்போர்ட் ஆர்டிஸ்ட் குழு உதவியுள்ளது.
“இத்திட்டம் சென்னை என்கிற நகருடன் மக்களுக்கு இருக்கும் உணர்வுப்பூர்வமான உறவை வெளிப்படுத்துகிறது. இந்த இணைப்பிற்கு பாரம்பரிய கலை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது,” என்கிறார் Hermon குழுவைச் சேர்ந்த சஞ்சீவ் நாதன்.
பிறகென்ன? சென்னை மக்களே! சுவரோவியங்கள் வாங்கத் தயாராகிவிட்டீர்கள்தானே?