தன் கிராம மக்களுக்காக தனி ஒரு மனுஷியாக 9 குளம் வெட்டிய பெண்மணி…
மனித இனம் நாகரீகம் என்ற சொல்லை முழுதாக அறிந்து கொண்ட இடம் நீர்நிலை பகுதியில் தான். ‘போதிய மழையின் அளவு அதிகரித்துள்ளது’ என்று வானிலை மையம் அறிவித்து இருந்தாலும், அதற்கு இணையான வெயில் தமிழக ஏரி, குளங்களை பதம் பார்த்து வருகிறது. அதன் விளைவு தண்ணீர் பஞ்சம். வெயில், மழை எதுவானாலும் அதன் உச்சத்தை உணருகிறோம். முதல் நாள் இரவு துவங்கி அலுவலகம் செல்லும் வரை தண்ணீருக்காக நேரத்தைச் செலவு செய்கின்றனர் சென்னை வாசிகள். ஆனால் சென்னைக்கு 30 கிலோமீட்டர் அருகில் ‘அதிகத்தூர்’ என்னும் கிராமம் தண்ணீர் நிறைவு கிராமமாக பூத்துக் குலுங்குகிறது. அது எப்படி?
சென்னைக்கும் திருவள்ளூர்க்கும் இடையே இருக்கும் கிராமம் ‘அதிகத்தூர்‘. இங்கு இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்களில் நீர் நிரம்பி வழிகிறது. பற்றாக்குறை என்ற சொல்லுக்கே இடம் இல்லை. இவ்வளவுக்கும் காரணம் ஒரு தனி மனுஷி. தன் கிராம மக்களுக்காக ஒன்பது குளங்கள் வெட்டியுள்ளார் திருமதி ‘சுமதி’.
பசுமையான கிராமம், அமைதியான ஜனங்கள் என விக்ரமன் பட ஓப்பனிங் காட்சி போல இருக்கிறது அந்த ஊர். மக்களோடு மக்களாகக் கலந்து இருந்த சுமதியை சந்தித்தேன்.
‘‘10 வருஷங்களுக்கு முன்பு இந்த ஊர் கடுமையான வறட்சியில் இருந்தது. குடி தண்ணிக்காக தினமும் திண்டாட்டம் தான். விவசாயம் செய்ய வழி இல்லை எல்லோரும் சென்னை ஆந்திரானு கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க...”என்றார் சுமதி.
விவசாயம் முழுசா அழிந்து கொண்டு போனது ‘தங்கம் போட்டா தங்கம் விளையுற பூமி அதிகத்தூர் கிராமம்' அதனால இந்த தண்ணீர் பஞ்சத்த என்னால தாங்கிக்கவே முடியல.
2006-ல் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. அது ஏழு குக்கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து. அங்க தலைவர் பதவிக்கு போட்டியிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. குளம் வெட்டும் பணி ஒரு பக்கம் இருந்தாலும் அதிகாரம் கையில் இருந்தா இன்னும் சிறப்பா செய்ய முடியும்னு ஊர் மக்கள் சொன்னாங்க அதுனால போட்டியிட்டி வெற்றி பெற்றேன்.
கிராமத்தை ஒட்டி கூவம் ஆறு இருந்தாலும் தண்ணீர் பற்றாக்குறை எப்போதும் இருக்கும். ஒவ்வொரு கோடைக்காலத்திலும் தமிழகம் முழுக்க எல்லா ஊர்லயும் தண்ணீர் பஞ்சம் இருந்துட்டு தான் இருக்கு. அடுத்த மழை பருவம் வந்ததும் மக்கள் மறந்துடுறாங்க.
மனிதனைத் தவிர மற்ற அனைத்து ஜீவ ராசிகளும் மழைக்காலத்துக்காக உணவைச் சேகரித்து வைக்கிறது. நாம உணவைச் சேகரிக்க தேவை இல்லை கோடை காலத் தேவைக்காக நீரை சேகரிச்சா போதும்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் எறும்புகள், பறவைகள் சேகரிக்கும் பழக்கத்தை நமக்கு சொல்லி தந்துகொண்டு தான் இருக்கு என்று தொடர்ந்து பேசிய சுமதி குளம் வெட்டிய பணியை விவரித்தார்.
‘‘ஆரம்பத்தில் கஷ்டங்கள் அதிகமாகவே இருந்தது. கிராம மக்களின் குடிநீர் ஆதாரத்துக்காகக் கிராமத்தை சுற்றி பல இடங்களில் போர் போட்டோம். பல ஆயிரம் அடி ஆழ் துளைகள் இறக்கியும் தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லா போர் வெல் திட்டமும் ஃபெயிலியர் தான் ஆனது. நீர் தட்டுப்பாட்டால் விவசாயமும் பாதிக்க ஆரம்பிச்சுது.”
கிராமப் புறங்களில் விவசாயம் தான் பிரதானம். அதில் பாதிப்பு வந்தா அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பிரச்சனை வரும்னு யோசிச்சப்பத்தான் ஊரை சுற்றி குளங்கள் வெட்டி நீரை சேமிக்கலாமான்னு முடிவு செய்தோம்.
அப்போ தான் ராஜஸ்தானில் உள்ள தண்ணீர் மனிதர் 'ராஜேந்தர் சிங்’ பற்றி கேள்விபட்டோம். தான் வாழ்கிற ‘டொளா' கிராமத்தில் நீர் மேலாண்மையில் சாதித்த மனிதர் அவர்,’ என்றார் சுமதி.
அவரைப்பற்றிய சிறு தொகுப்பை இங்கு காணலாம். யார் 'இந்த ராஜேந்திர சிங்'..?
தண்ணீர் பாதுகாப்பு குறித்த செயல்பாடுகளால் இந்தியாவின் தண்ணீர் மனிதன் என்றழைக்கப்படுபவர். தார் பாலைவனப் பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராமமொன்றில் தனது தண்ணீர் மேலாண்மை செயல்பாடுகளை 1975 ஆம் ஆண்டில் துவங்கினார்.
'தருண் பாரத் சங்' என்ற அமைப்பின் வாயிலாக இப்பணியைத் தொடங்கியவர், மழை நீர் சேகரிப்பு, நீர் வழித்தடங்களில் சிறு சிறு தடுப்பணைகள் கட்டுவது என தானே கண்டுபிடித்த எளிமையான தொழிநுட்ப யுத்திகளின் மூலமாக இன்று ராஜஸ்த்தானில் பல கிராமங்களை நீர் வளமிக்க பகுதியாக மாற்றிக் காட்டியுள்ளார்.
ராஜஸ்த்தானில் ஆரவல்லி என்ற மலைகளின் குறுக்கே சிறுசிறு தடுப்பணைகளும் 7 மீட்டர் உயரம் கொண்ட கான்கிரீட் அணையும் கட்டப்பட்டதன் விளைவாக அறுபதாண்டுகளாக வறண்டிருந்த ஆரவல்லி ஆற்றில் மீண்டும் நீரோட ஆரம்பித்தது..!
ராஜஸ்தானின் 11 மாவட்டங்களில் ஏறத்தாழ 4500 தடுப்பணைகள் இவரது முயற்சியால் கட்டப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய நீர் சேகரிப்பு கட்டுமானங்கள் மற்றும் நிலத்தடி நீரை மீளப்பெறுதல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த தண்ணீர் பஞ்சாயத்து என்ற ஆலோசனை வழங்கும் அமைப்பையும் நடத்தி வருகிறார்.
‘‘தண்ணீருக்கான நோபல் பரிசு என அறியப்படும் 'ஸ்டாக்ஹோம் விருது' மற்றும் ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் 'மகசசே விருது'களைப் பெற்றுள்ளார் ராஜேந்திர சிங்".
சுமதி கிராமத்தில் தொடங்கிய குளம் வெட்டும் பணி
தொடர்ந்து பேசிய சுமதி, "அவரோட ஊரில் எப்படி நீர் சேகரிப்பை கட்டமைத்து ஒரு சிறப்பான கிராமத்தை உருவாக்கி இருக்கார்னு பாத்துட்டு முறையாக நாமளும் செய்வோம்னு முடிவு எடுத்தேன். எங்க கிராமத்துல இருந்து ஏழு விவசாயிகளை கூட்டிகிட்டு போனேன். எங்கள்ல யாருக்கும் இந்தி, ஆங்கிலம் எதுவும் தெரியாது. பயணம் கொஞ்சம் கடினமா தான் இருந்தது. இருந்தாலும் நம்ம கிராம மக்களுக்காக எல்லாரும் ஒத்துழைச்சாங்க.
“பத்து நாள் அங்க தங்கி இருந்து தண்ணீர் மேலாண்மை செயல்பாடுகளை சார்ந்து அவரிடம் நிறைய கத்துகிட்டோம். அதைத் தாண்டி தண்ணீர் மனிதர் ராஜேந்தர் சிங், மக்களோட ஒத்துழைப்புல தடுப்பு அணைகள் அமைத்து கால்வாய்களை பல்வேறு கோணங்களில் வர மாதிரி வடிவமைச்சிருந்தாரு. அதைவிட கழிவு நீரை முறையா பிரித்து வேறு பகுதிக்கு அனுப்பி திட கழிவை உரமாக்கும் முயற்சியும் செய்து இருந்தார்.”
எல்லா செயலிலும் மக்களோட ஒத்துழைப்பு தேவைனு ஒவ்வொரு செயல் விளக்கத்தின் போதும் சொல்லிகிட்டே இருந்தார்.அந்த முறையை எங்க ஊர்ல செயல்படுத்தத் துவங்கினோம். அப்புறம் தான் தெரிந்தது அதே மாதிரி கட்டமைப்பை இங்க உருவாக்குறதுல சிக்கல் இருக்குனு.
ராஜஸ்தான்ல டொளா கிராமத்தில் வருஷத்தில் பாதி நாள் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வரும். அத்தோடு சமதளமான புவியியல் அமைப்பு அங்கு இருந்ததால் நீருக்கான பாதையை அமைத்து எல்லா பகுதிக்கும் அனுப்ப முடிந்தது. எங்க ஊர் மேடு பள்ளம் நிறைஞ்சது. மழை நீரை மட்டுமே நம்பி இருக்கும் ஊர். என்ன பண்ணலாம்னு யோசிச்சேன் மழை நீரை சேமிக்க ஒரே வழி ஏரி, குளம் அமைக்கிறது.
ஊரைச் சுற்றி இருக்கும் ஏரிகளை சீரமைத்தோம். ஏரி வழியாக போகும் கால்வாய்களை ஒழுங்குப்படுத்தி, கால்வாய்களுக்கு இடையில் தடுப்பணைகளை கட்டினோம். இது எல்லாத்தையும்விட கால்வாய்க்கு இடையில குளங்கள் வெட்டினோம்.
மேடாகிக் கிடந்த 6 குளங்களை சீரமைத்தோம். அத்தோட பல வருஷத்துக்கு முன்னாடி குளமா இருந்த 3 இடத்தை தேடிப் பிடிச்சோம். அது எல்லாமே ஆக்கிரமிப்புல விவசாய நிலமா இருந்தது. அந்த நிலத்தை பயன்படுத்துனவங்ககிட்ட விவரத்தை எடுத்து சொல்லி புது குளமாகவே வெட்ட ஆரம்பித்தோம்.
வெட்டிய 9 குளத்தையும் கால்வாய் வழியா ஒன்னு சேர்த்தோம். எப்படின்னா முதலில் குடிநீருக்கான போர்வெல் போட்ட பகுதி வழியாக கால்வாயை உருவாக்கி இணைத்தோம். அப்படி இணைக்கும் போது குடி நீருக்கான போர்வெல்லில் நிலத்தடி நீர்மட்டம் உயர துவங்கியது.
இப்போ எல்லா போர்வெல்லிலும் தண்ணீர் மட்டம் நல்லாவே உயர்ந்து இருக்கு. குடிநீர் பிரச்சனை தீர்ந்தது. இது எல்லாத்துக்கும் ஊர் மக்கள் ஒத்துழைப்பு தான் காரணம். துணையாக நின்றது மட்டும் தான் நான். மத்தது எல்லாம்...’’ என்று மக்களை கை காட்டுகிறார் சுமதி.
பொதுவாக சாதித்தவர்கள் எனக்கு உதவியாக கணவர், மனைவி இருந்தார் என்று சொல்லுவார்கள் அதை முற்றிலுமாக மறுக்கிறார் சுமதியின் கணவர் பன்னீர் செல்வம். ஏன் என்று அவரின் கணவரிடம் பேசினோம் ‘‘தீவிர பெரியார் கொள்கையை பின்பற்றுபவன் நான். கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பெண் பஞ்சாயத்து தலைவர்கள் வெறும் பெயரளவில் மட்டும் தான் இருப்பாங்க. அவங்களோட கணவர் தான் பெரும்பாலும் இயங்குவாங்க. அதே வகையில் என்னோட துணைவியார் இருக்கக் கூடாதுனு அவங்களையே தன்னிச்சையாக செயல்படனும்னு விட்டுடேன். பெண்கள் சுயமாக சிந்தித்து இயங்குவது தான் சரி. தவறான முடிவாக இருந்தால் கூட அவர்களை செயல்பட வைக்க வேண்டும்," என்கிறார்.
தொடர்ந்து பேசிய சுமதி,
‘‘தற்போது இருளர் இனமக்கள் வாழும் பகுதியில 3 குளம் வெட்டி வருகிறோம். 2000-த்திற்கு மேல் மரங்களை நட்டுள்ளோம். மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனியாக பிரித்து, அதை உரமாக மாற்றி வருகிறோம்,” என்றார்.
கடந்த ஆண்டு இந்தியளவில் சிறந்த தூய்மை கிராமமாக இவர்களின் ஊர் தேர்வாகி, டெல்லி சென்று அந்த விருதை வாங்கி வந்துள்ளார் கிராமத்தை நிர்வகிக்கும் தலைவி என்ற சொல்லாடலுக்கு மிகத்தகுதியாக திகழும் சுமதி.
கட்டுரையாளர்: வெற்றிடம்