தங்கைக்கு திருமணப் பரிசாக இறந்த தந்தையை கண்முன் நிறுத்திய அக்கா: தஞ்சை நெகிழ்ச்சி சம்பவம்!
குடும்பத்துக்கு தந்தையின் அன்பு எவ்வளவு இன்றியமையாதது!
தஞ்சாவூரில் அரங்கேறியுள்ள சம்பவம் காண்போரின் மனதை உருக்கும் வகையில் உள்ளது. உண்மையில் ஒரு குடும்பத்துக்கு தந்தையின் அன்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதை இந்த செய்தி நமக்கு விளக்குகிறது.
உண்மையில் தந்தை உடன் இல்லை என்றாலும் அவரது உருவத்துடன் இணைந்திருப்பதையே அந்தக் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக கருதுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் செல்வம் (61). தொழிலதிபர். இவரது மனைவி கலாவதி.
இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு செல்வம் இறந்து விட்டார். உயிருடன் இருந்தபோது, தனது 3 மகள்களில் 2 மகளுக்கு திருமணம் செய்துவிட்டார் செல்வம்.
இந்நிலையில், அவரது 3வது மகள் லட்சுமி பிராபாவுக்கு (25) திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்கான திருமணம் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. ஆனாலும் லட்சுமி பிரபா மனதில் உருத்தலும், வருத்தமும் இருந்துகொண்டுதான் இருந்தது. அது தனது திருமணத்தின்போது தந்தை இல்லையே என்ற வருத்தம் தான்.
அவரது மூத்த சகோதரி லண்டனில் மருத்துவராக உள்ளார். அவருக்கு லட்சுமியின் வருத்தம் தெரியவர, அப்பா இல்லாத குறையைப் போக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதன்படி,
மூத்த சகோதரி புவனேஸ்வரி, தனது கணவர் கார்த்திக் உதவியுடன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் சிலிக்கான் மற்றும் ரப்பரைக் கொண்டு, தனது தந்தை செல்வத்தின் முழு உருவச் சிலையை தத்ரூபமாக உருவாக்கினார்.
இதையடுத்து, பட்டுக்கோட்டையில் லட்சுமி பிரபாவின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. அப்போது, தனது தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த சகோதரி புவனேஸ்வரி தந்தை செல்வத்தின் முழுஉருவச் சிலையை புவனேஸ்வரி திருமண மேடையில் நிறுத்திவைத்தார்.
இதைக்கண்ட தங்கையும் மணமகளுமான லட்சுமி பிரபாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உண்மையில் தந்தையின் சிலையை பார்த்த லட்சுமி பிரபா கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர், அந்த சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். தாய் கலாவதி மற்றும் தந்தையின் சிலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். இதுதொடர்பாக புவனேஸ்வரி கூறும்போது,
‘‘எனது திருமணத்தை எங்களின் தந்தை சிறப்பாக நடத்தினார். ஆனால், எனது கடைசி தங்கையின் திருமணத்தின்போது அவர் இல்லை. இந்த வருத்தம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. குறிப்பாக தங்கை லட்சுமிக்கு.
”அவருக்கு அந்த குறை இருக்ககூடாது என்று யோசித்தேன். இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் ரூ.6 லட்சம் செலவில், தந்தையின் சிலையை உருவாக்கினோம். சிலை தத்ரூபமாக வர வேண்டும் என மெனக்கெட்டோம். . இந்த சிலையை கண்ட எனது தங்கை ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். தத்ரூபமான சிலையை பார்த்த உறவினர்கள் சில நிமிடம் கண்கலங்கினர்,’’ என்றார்.
தங்கைக்காக தந்தையின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து எடுத்து வந்த சகோதரியின் செயல், திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
படங்கள் மற்றும் தகவல் உதவி: பாலிமர் நியூஸ் | தொகுப்பு: மலையரசு