கர்ப்பிணிப் பெண்களின் ஆடை பிராண்ட் அறிமுகப்படுத்தி அசத்தும் சகோதரிகள்!
ஆஞ்சல் ஜாரா, ஆஷ்னா ஷா சகோதரிகள் நிறுவியுள்ள Chicmomz பிராண்ட் வழங்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் கரீனா கபூர் கான் போன்ற பிரபலங்களையும் கவர்ந்துள்ளது.
ஆஞ்சல் ஜாரா, ஆஷ்னா ஷா இருவரும் சகோதரிகள். இவர்களது குடும்பத்தினர் உத்திர பிரதேசத்தின் சகாரன்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாரம்பரியமாக தொழில்முனைவில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லியில் வசிக்கும் இந்தச் சகோதரிகள் சௌகரியமான, அதேசமயம் ஸ்டைலான ஆடைகளை, கர்ப்பிணிகளுக்கென பிரத்யேகமாக வடிவமைத்து Chicmomz என்கிற பிராண்டின்கீழ் அறிமுகம் செய்துள்ளார்கள்.
இந்த பிராண்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் இவர்களது முயற்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆம்! இந்த சகோதரிகள் தங்களது பிராண்ட் ஆடையை கரீனா கபூர் கானிடம் டெலிவர் செய்துள்ளார்கள்.
கரீனா கபூர் Chicmomz ஆடையை அணிந்துகொண்டதைப் பார்த்த இந்த சகோதரிகளுக்கு தாங்கள் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது.
இந்த பிராண்ட் விலை குறைந்த, அணிந்துகொள்ள வசதியான, ஸ்டைலான, நீடித்திருக்கும் ஆடைகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்குகிறது.
ஆஞ்சல், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தார். மும்பை ஐபிஎஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ முடித்தார். ஹெச்டிஎஃப்சி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களில் சர்வதேச வர்த்தகம் மற்றும் அந்நிய செலாவணி பிராடக்டுகளைக் கையாண்டுள்ளார்.
ஆஷ்னா கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பொறியியல் படித்தார். இங்கிலாந்து சென்று முதுகலைப் பட்டம் பயின்றார். பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியுள்ளார். என்டிடிவி, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த சில நிறுவனங்களுக்காக உள்ளடக்கம் எழுதியுள்ளார்.
வசதி மற்றும் ஸ்டைல்
“என் முதல் குழந்தை கருவுற்றிருந்தபோது அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். அப்போது என் கணவரின் டி-ஷர்டையும் குர்தாவையும் அணிந்து செல்வேன். மெட்டர்னிட்டி ஆடைகள் இருந்தன. ஆனால் அவை வழக்கமான ஆடைகளாகவே இருந்தன. அவற்றை அணிந்து செல்வது சௌகரியமாகவும் இல்லை. விலையும் அதிகம். நான் சிறப்பாக உணரவேண்டுமானால் சிறப்பான தோற்றம் அவசியம் இல்லையா? பெரிதாக இருந்த என் வயிற்றை நாம் மறைக்க விரும்பவில்லை,” என்கிறார் ஆஞ்சல்.
ஒரு பெண்ணைப் பெருமைப்படுத்தும் தயாரிப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று விரும்பிய ஆஞ்சல் இது குறித்து ஆஷ்னாவுடன் கலந்து பேசினார்.
இந்தப் பகுதியில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து குறைந்த விலையில், வசதியான, ஸ்டைலான, நிலைத்திருக்கக்கூடிய தயாரிப்பை உருவாக்குவது குறித்து நிறுவனர்கள் இருவரும் பேசினார்கள்.
ஒரு பெண் கருவுற்றிருப்பதை நோயாகப் பார்க்கக்கூடாது. இதுதொடர்பான மக்களின் கண்ணோட்டத்தை மாற்ற விரும்பினார்கள். எனவே அழகான அதேசமயம் ஸ்டைலான தயாரிப்பை உருவாக்கலாம் எனத் தீர்மானித்தார்கள்.
“வசதியாகவும் இருக்கவேண்டும். அதேசமயம் ஸ்டைலாகவும் இருக்கவேண்டும். அதற்கேற்ற துணியை நாங்கள் தேர்வு செய்தோம். ஃபேன்சியான, விலை குறைந்த ஆடையைத் தயாரிக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவே ஒவ்வொரு தயாரிப்பும் 2,000 ரூபாய்க்கு குறைவாகவே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை நீடித்திருக்கக்கூடியது என்பதால் பிரசவத்திற்கும் பிறகும் இதை அணிந்துகொள்ளலாம்,” என்று விவரித்தார்.
Chicmomz குழுவில் பணிபுரிவர்கள் அனைவருமே பெண்கள். இந்த பிராண்ட் டாப்ஸ், ஷார்ட் டிரஸ், மேக்ஸி போன்ற ஆடை வகைகளை வழங்குகிறது. பார்ட்டி போன்ற இடங்களுக்கும் இவற்றை அணிந்து செல்லலாம். இவை முறையாகப் பேக் செய்து வாடிக்கையாளர்களிடம் அனுப்பப்படுகிறது.
ஆஞ்சல் இந்த பிராண்டின் செயல்பாடுகள், நிதி, விற்பனை, லாஜிஸ்டிக்ஸ், மேலாண்மை ஆகியவற்றிற்கு பொறுப்பேற்றுள்ளார். ஆஷ்னா புத்தாக்க சிந்தனைகள், செய்தி வெளியீடு, பேச்சுவார்த்தை போன்றவற்றை கவனித்துக்கொள்கிறார்.
மெர்சண்டைசிங், ஸ்டைலிங், துணி வகைகளைத் தேர்வு செய்தல், தயாரிப்பிற்கு முந்தைய பணிகள் போன்றவற்றை இருவரும் இணைந்து மேற்கொள்கின்றனர்.
“நாங்கள் இருவரும் வெவ்வேறு விருப்பு வெறுப்பு கொண்டவர்கள். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வருவது இயல்பு. பல சமயங்களில் எங்கள் கருத்துக்கள் ஒத்துப்போவதில்லை. ஆஞ்சல் நிதானமாக செயல்படுபவர். எதையும் கணக்கிட்டு அதற்கேற்ப செயல்படுபவர். துணிந்து ரிஸ்க் எடுக்கும் குணம் எனக்கு உண்டு. இருந்தாலும் நாங்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொண்டு Chicmomz செயல்பாடுகளை சிறப்பாக நிர்வகிக்கிறோம்,” என்றார் ஆஷ்னா.
பிரசவிக்க இருக்கும் தாய்மார்கள், மாம்ப்ரூனர்கள், செல்வாக்குள்ளவர்கள், வலைப்பதிவாளர்கள், இல்லத்தரசிகள் என இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த பிராண்ட் சேவையளிக்கிறது.
2 லட்ச ரூபாய் முதலீட்டுடன் இந்த பிராண்டைத் தொடங்கிய இந்தச் சகோதரிகள் வணிகம் மூலம் கிடைக்கும் தொகையை மீண்டும் வணிகத்திலேயே முதலீடு செய்கின்றனர்.
சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டன
சமூக வலைதலங்களில் பிரசவம் மற்றும் தாய்மை தொடர்பான சிக்கல்களில் கவனம் செலுத்தப்பட்டது. இது மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பிராண்ட் பலரைச் சென்றடைந்துள்ளது.
“கொரோனா பெருந்தொற்று சமயத்தில் எங்கள் டிஜிட்டல் தளத்தை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டோம். சமூக வலைதளங்கள் முறையாகக் கையாளப்பட்டன. தொடர்ந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் மூலமாகவே பெரும்பாலும் வருவாய் ஈட்டப்படுகிறது. இரண்டு மாதங்களில் பிராண்ட் 60 சதவீத லாபம் பார்த்துள்ளது,” என்றார்.
மற்ற வணிகங்கள் போன்றே இந்த Chicmomz பிராண்டும் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பிராண்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டனர். ஆனால் கொரோனா காரணமாக சில மாதங்கள் தள்ளிப்போனது. லாக்டவுன் சமயத்தில் உற்பத்தி தடைபட்டது. சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் தயாரிப்புகளைத் தொடர்ந்து சந்தைப்படுத்தி வந்தனர்.
“நாங்கள் அதிகக் கவனத்துடன் நிதானமாக செயல்படவே விரும்புகிறோம். கோடைக் காலத்திற்கான, ஸ்டைலான மெட்டர்னிட்டி ஆடைகளை அறிமுகப்படுத்த உள்ளோம். குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்காகவே பிரத்யேகமாக செயல்படும் பிராண்டுகளுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் கிஃப்டிங் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் முழுமையான தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்புகிறோம்,” என்றார் ஆஞ்சல்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்னன் | தமிழில்: ஸ்ரீவித்யா