‘இப்போதிருக்கும் அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ - Udaan சுஜீத் குமார்!
யுவர்ஸ்டோரியின் முன்னணி தொழில்நுட்ப மாநாடான டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்வில், Udaan சாப்ட்வேர் இஞ்சினியரிங் பிரிவின் தலைவர் கவுசிக் முகர்ஜி பொறியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நிறுவனம் செயல்படும் விதம் பற்றி பகிர்ந்து கொண்டார்.
சுஜீத் குமார், அமோத் மாளவியா மற்றும் வைபவ் குப்தாவால், 2016 ம் ஆண்டில் துவங்கப்பட்ட Udaan சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் இ-காமர்ஸ் யூனிகார்னாக விளங்குகிறது.
நாட்டில் வர்த்தகப் பரிவர்த்தனை சூழலை மாற்றியமைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. ரீடைலர்கள், உற்பத்தியாளர்கள், மொத்த விற்பமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களை ஒரே மேடையில் கொண்டு வரும் வகையிலும் செயல்படுகிறது.
யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2021 தொழில்நுட்ப மாநாடு, எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலான திறமையாளர்களை பொறியியல் திறமை மூலம் எப்படி உருவாக்கலாம் என Udaan நிறுவனம் விவாதிப்பதற்கு ஏற்ற மேடையாக அமைந்தது.
Udaan நிறுவனத்தில் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் எப்படி உதவும் எனக் கேட்கப்பட்ட போது, நிறுவன சாப்ட்வேர் இஞ்சினியரிங் பிரிவின் தலைவர் கவுசிக் முகர்ஜி, மென்பொருள் பொறியியலில், குறிப்பிட்ட சேவைகளை உருவாக்குவது மற்றும் உருவாக்கிய பிறகு அந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சூழலில் வெளியிடுவது என இரண்டு முக்கிய அம்சங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
பொதுவாக மென்பொருள் பொறியியல் உருவாக்கத்தில் மனிதர்கள் தலையிட வேண்டிய நிலை அதிகம் இருந்ததது தற்போது மாறி வருகிறது. தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக தானியங்கி தலையீட்டை மேற்கொள்ள முடிகிறது.
“தொழில்நுட்பம் பற்றி சிந்திக்கும் போது, எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது, மென்பொருள் பொறியியலில் அதன் மொத்த ஆயுள் காலத்தில் மனித தலையீட்டை குறைப்பது எப்படி என்று யோசிக்கிறோம்,” என்கிறார் கவுசிக்.
மேலும், தொழில்நுட்பக் கோணத்தில் இருந்து, எதிர்காலத்தில் உண்டாகக் கூடிய தேவையை நிறைவேற்றுவதில் ஒரு படி முன்னதாக இருப்பது எப்படி என்றும் நிறுவனம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
“எப்போதும் எங்கேனும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் துடிப்பான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே தேவைகளுக்கு ஏற்ப வளரும் அமைப்புகளை உருவாக்குவது முக்கியம். இதன் காரணமாக, மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய எதையும் மனிதத் தலையீடுகள் இல்லாமல் தானாக நிர்வகிக்கப்படும் வகையில் வடிவமைத்து வருகின்றனர்.
பெருந்தொற்று காலத்திற்கு முன்பாகவே, பொறியியலில் எந்த அம்சங்கள் தொலைதூர தன்மையை முதலில் கொண்டிருக்க வேண்டும் என்பதில் நிறுவனம் உறுதியாக இருந்ததாகவும் கவுசிக் கூறினார். இன்று கூட்டு முயற்சிக்கான எண்ணற்ற சாதனங்கள் இருப்பதால், எல்லோரும் எல்லா நேரத்திலும் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிறுவனம் நம்புவதாகவும் கூறினார்.
ஒரு சில பிரிவுகளில், வெளி சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லாமல், சரியான பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு எனும் அமைப்பை நிறுவனம் திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை செயல்படுத்துவதில் நிறுவனம் பணியாளர்களிடம் இருந்து சவால்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்டவர், இந்த சவால்களை வாய்ப்புகளாக மாற்றிக்கொண்டதாக கூறினார்.
“கோவிட் தொற்றுக்கு முன்னதாகவே நாங்கள் மேற்கொண்ட சில முயற்சிகள் குறித்தி மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
நிறுவனத்தில் புதுமையாக்கம் மற்றும் தீர்வுகள் பற்றி குறிப்பிட்டவர், பல நிறுவனங்களில் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறியும் வழியாக பொறியியல் பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
ஆனால், Udaan நிறுவனம் களத்தில் உள்ள நிஜ பிரச்சனைகளை பொறியாளர்கள் எதிர்கொள்ள வைத்து அதற்கான தீர்வுகள் உருவாக வழி செய்கிறது. இது பொறுப்பேற்பு மற்றும் உரிமை அம்சத்தை உண்டாக்குகிறது என்று குறிப்பிட்டார். அந்த வகையில், ஏற்கனவே தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளை மையமாகக் கொண்டு நிறுவன புதுமையாக்கம் அமைகிறது.
வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளை பொருத்தவரை நிறுவனம் முழு தொகுப்பை கொண்டிருப்பதாகவும் கவுசிக் தெரிவித்தார். சேவைகள் பிரிவில் மட்டும் அல்லாமல் மூலதன பிரிவிலும் நிறைய புதுமையாக்கம் நிகழ்ந்து வருகிறது.
“பெரும்பாலான சூழல் முழுவதும், ஏற்கனவே தீர்வுகள் உள்ள நிலையில், இவை எல்லாம் வாடிக்கையாளர்களுக்கு சீராக அமைய என்ன செய்ய வேண்டும் எனும் அடுத்த கட்டம் குறித்து யோசிக்கிறோம் என்றார்.
தனிநபர்கள் வளர்ச்சி பற்றி குறிப்பிட்ட கவுசிக், மனிதர்கள் இயல்பாகவே ஆர்வம் மிகுதியானவர்கள் என்பதால் நிறுவனத்தில் எந்த செயற்கை சுவர்களும் இல்லை என்றார்.
ஊழியர் ஒருவர் குறிப்பிட்ட பிரச்சனையில் ஆர்வம் கொண்டிருந்தால், அதற்கான தீர்வை உண்டாக்க ஊக்குவிக்கப்படுகின்றனர் என்றார்.
“ஒரு சூழலாக Udaan நிறுவனம் தேவை என்றால் ஒரு பிரச்சனையின் அடி ஆழம் வரை செல்வதற்கான ஆழம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை அலசி ஆராய்வதற்கான பரப்பையும் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். வளர்ச்சி என்பது பலருக்கு பலவிதமாக அமைவதால் நிறுவனம் ஒவ்வொருவரும் வளர்வதற்கான வாய்ப்புகளை அளிக்கிறது,” என்றார்.
தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டிருக்கிறது என்று முடிவாக தெரிவித்த கவுசிக், போட்டியான சூழலில் சாதகமான நிலையை அளிக்கும் வகையில் தங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற பிரச்சனைகளை இளம் தொழில்முனைவோர் தேர்வு செய்ய வேண்டும் என கவுசிக் தெரிவித்தார்.
“இப்போது இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்,” என்றார்.
ஆங்கிலத்தில்: சூரியதபா சக்ரவர்த்தி | தமிழில்: சைபர் சிம்மன்