Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ப்ளூகாலர் பணியாளர்களை காலத்துக்கு ஏற்ப திறன் கொண்டவர்களாக்கும் ‘ஸ்கில்வெரி’ நிறுவனம்!

இந்தியாவில் ஐடிஐ, டிப்ளமோ படிப்பை முடிக்கும் லட்சகணக்காணவர்களை முதல் நாளில் இருந்தே வேலையில் அமர்த்த முடியாது. அவர்களுக்கு பணிக்கு ஏற்ற திறன் மேம்பாட்டை அளிக்க, சிமுலேசன் முறையில் அவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கிறது இந்த சென்னை நிறுவனம்.

ப்ளூகாலர் பணியாளர்களை காலத்துக்கு ஏற்ப திறன் கொண்டவர்களாக்கும் ‘ஸ்கில்வெரி’ நிறுவனம்!

Thursday June 06, 2024 , 3 min Read

திறன் மேம்பாடு என்பது அனைத்துத் துறைகளுக்கும் பொதுவானது. ஆனால், திறன் மேம்பாடு என்பது நவீன தொழில்நுட்பத்துக்கு மட்டுமே தேவை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

ஆனால், புளுகாலர் பணியாளர்களுக்கும் திறன்மேம்பாடு என்பது அவசியமானது என்று விளக்குகிறார் ‘ஸ்கில்வெரி’ (Skillveri) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சபரிநாத் நாயர்.

சில வாரங்களுக்கு முன்பு அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்கில்வெரி நிறுவனத்துக்கான தேவை, சந்தை, வருமானம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினோம்.

புளூகாலர் பணியாளர்களுக்கு திறன்மேம்பாடு தேவையில்லை என்று புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், அவர்களுக்கும் திறன்மேம்பாடு தேவை, என்கிறார்.

labour_marketplace

சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி மெட்ரோ மற்றும் விமான நிலையம் அமைக்கும் கட்டுமான பணியில் பெரும்பாலானவர்களாக யார் இருந்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? இந்தியாவில் இல்லாத மனிதவளமா என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அந்த பெரிய முக்கியமான திட்டங்களில் பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவில் இருந்தும் பெரு நாட்டில் இருந்தும் வந்தவர்கள். இது பல பேருக்கு தெரியாது.

”மற்ற நாடுகளில் இருந்து கட்டுமான பணியாளர்கள் வருகிறார்கள் என்றால் நம் நாட்டில் புளுகாலர் பணியாளர்களில் திறன் மிக்கவர்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ளலாம். இந்த இடைவெளியை போக்குவதற்கு நானும் கண்ணன் லஷ்மிநாராயணும் இணைந்து தொடங்கியதுதான் ‘ஸ்கில்வெரி’ நிறுவனம்.

இந்தியாவில் ஐடிஐ மற்றும் டிப்ளமோ படிப்பை ஆண்டுக்கு லட்சகணக்காணவர்கள் படித்து வெளியேறுகிறார்கள். ஆனால், அவர்களை முதல் நாளில் இருந்தே வேலையில் அமர்த்த முடியாது. ஆனால், அமெரிக்காவில் இதுபோன்ற படிப்புகளை முடிக்கும் சுமார் 50 சதவீத நபர்களை முதல் நாளில் இருந்தே பணியமர்த்த முடியும். அதற்கு ஏற்ற திறன்களுடன் பணியாளர்கள் இருக்கிறார்கள். புளுகாலர் பிரிவில் பணியாளர்களின் திறனை சிமுலேஷன் மூலம் உயர்த்துவதுதான் எங்களது திட்டம்.

2013-ம் ஆண்டு ஸ்கில்வெரி தொடங்கினோம். இதற்கு முன்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இதுபோன்ற சேவை தேவைபடுகிறதா என்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கியமான ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து புராடக்டை உருவாக்கினேன்.

உதாரணத்துக்கு வெல்டிங் பற்றி படிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இதை பணியாளர்களுக்கு கற்றுக்கொடுக்காமல் நேரடியாக வேலைக்கு அனுப்பும் பட்சத்தில் ஏராளமான வெல்டிங் ராட்கள் வீணாகும். இதுதவிர, மின்சாரம், உற்பத்தி பொருட்கள் நேரம் என அனைத்துமே வீணாகும்.

”ஆனால், சிமுலேஷன் மூலம் பயிற்சி கொடுக்கும்போது எங்கு தவறு நடக்கிறது. எப்போது சரியாகும் என்பதை கணக்கிட்டு துல்லியமாக பயிற்சி அளிக்கலாம். மேம்பாடும் அடைய முடியும். மேலும், பயிற்சியில் முழுமையான தேர்ச்சி அடையும்பட்சத்தில் வேலை கொடுத்தால் போதும். சேர்ந்த முதல் நாளில் இருந்து அவரால் சிறப்பாக செயல்பட முடியும்,” என சபரிநாதன் கூறினார்.

அந்த சிமுலேட்டரை நான் பயன்படுத்தி பார்க்க முடியுமா என சபரியிடம் கேட்டேன். உடனடியாக அதற்கும் ஏற்பாடு செய்தார்.

வெல்டிங் மூலமாக இரண்டு புள்ளிகளை இணைப்பதுதான் டாஸ்க். அதை செய்தவுடன் உடனடியாக ரிப்போர்ட் கிடைத்துவிடும். எங்கு தவறு செய்தோம். எந்த இடத்தில் அதிக நேரம் அல்லது தவறு செய்தோம் எனும் சார்ட் கிடைத்துவிடுகிறது. தொடர்ந்து மூன்று நான்கு முறை நான் செய்துபார்த்தபோதே முதல் முறை செய்த வெல்டிங்கும் நான்காவது முறை செய்த வெல்டிங்கிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை உணர முடிந்தது. எந்த விதமான மூலம்பொருட்களும் வீணாகவில்லை. அதேபோல, தயாரிப்பிலும் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.

Skillveri Sabarinathan

சிமுலேட்டரை பயன்படுத்திய பிறகு அவருடனான உரையாடலை  மீண்டும் தொடங்கினேன். சந்தையில் வரவேற்பு எப்படி இருக்கிறது எனும் கேள்விக்கு, இந்தியாவை விட அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் அதிக தேவை இருக்கிறது, என்றார்.

”மற்ற நாடுகளில் சாஸ் மாடலில் நாங்கள் செயல்படுகிறோம். எங்கள் செயலியை நாங்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதி வழங்குவோம். அவர்கள் சந்தையில் உள்ள விஆர் சாதனத்தை பயன்படுத்தி பயிற்சி வழங்குவார்கள். அப்போது தொடர்ச்சியான வருமானம் இருக்கும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை எங்கள் சாப்ட்வேர் பொறுத்திய சாதனத்தை ஒரு முறை விற்பனை செய்கிறோம். இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்திருக்கிறோம்,” என்றார்.

ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா, ஹூண்டாய், பெர்ஜர், அசோக் லேலாண்ட், மாருதி, ரயில்வே உள்ளிட்ட பல முக்கியமான இந்திய நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். தவிர இந்தியாவில் உள்ள 70க்கும் மேலான ஐடிஐ கல்வி நிலையங்களும் எங்களுடைய புராடக்ட் இருக்கிறது.

மேலும், அமெரிக்காவில் உள்ள 50க்கு மேற்பட்ட பள்ளிகளில் எங்களுடைய புராடக்ட் இருக்கிறது. தவிர அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முக்கியமான நிறுவனங்களிலும் எங்களுடைய புராடக்ட் இருக்கிறது, என்றார் சபரிநாதன்.

அடுத்தகட்டமாக பெயிண்டிங் பயிற்சியை அறிமுகப்படுத்தி, 18 சர்வதேச மொழிகளில் பயிற்சி அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

நிதி நிலைமை

விளையாட்டாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் 2019-ம் ஆண்டே லாபமீட்டும் நிலைமைக்கு வந்துவிட்டோம். அப்போது விரிவாக்க பணிகளுக்கு நிதி திரட்ட திட்டமிட்டிருந்த சூழலில் லாபத்தில் இருக்கும் நிறுவனத்துக்கு ஏன் நிதி? லாபத்தில் இருக்கும் நிறுவனம் வளர்ச்சியில் கவனம் செலுத்தாது என்று கூட சில முதலீட்டாளர்கள் நகைச்சுவையாக கூறினார்கள்.

ஆனால், டெல் அறக்கட்டளை, அங்கூர் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் எங்களிடம் முதலீடு செய்திருக்கின்றன. நடப்பு நிதி ஆண்டில் ரூ.10 கோடி வருமானம் எனும் இலக்கை அடைய திட்டமிட்டிருக்கிறோம், என சபரி தெரிவித்தார்.

யாரும் பெரிய கவனம் செலுத்தாத புளூகாலர் வேலைக்கும் திறன் அவசியம் என மெனக்கெடுவது பாராட்டுக்குரியது.