'தூங்கினால் பரிசு' - 100 நாட்கள்; 9 மணி நேரம் தூக்கம்: 10 லட்சம் வெல்ல மீண்டும் வாய்ப்பு!
தூங்கு மூஞ்சிகள் எனச் செல்லமாக அழைக்கப்படும், கும்பகர்ணன்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்லீப்பிங் இண்டர்ன்ஷிப் 3வது சீசனை அறிவித்து விட்டது வேக்ஃபிட் நிறுவனம். இந்தப் போட்டியில் 100 நாட்கள், தினமும் 9 மணி நேரம் சரியாகத் தூங்கி எழுபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திர மயமான வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கு பெரும் கனவாக இருப்பது நல்ல தூக்கம்தான். படுத்தவுடன் தூங்கி விடுபவர்களைப் பார்த்தால் எல்லோருக்குமே பொறாமையாகத்தான் இருக்கும். தூக்கத்திற்காக என்ன விலை கொடுக்கவும் மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.
எனவே மார்க்கெட்டிலும் நல்ல தூக்கத்தைத் தரும் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கென பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஆய்வுகளில் ஒன்றுதான் பிரபல மெத்தை நிறுவனமான வேக்ஃபிட் நடத்தும் தூங்கும் ஆய்வு.
பெங்களூரைச் சேர்ந்த இந்த மெத்தை நிறுவனம் ‘Wakefit' கடந்த இரண்டு ஆண்டுகளாக, தூக்கப் பிரியர்களுக்கென வித்தியாசமான 'ஸ்லீப்பிங் இண்டர்ன்ஷிப்' (Sleeping internship) என்ற போட்டி ஒன்றை நடத்தி வருகிறது.
கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் பல்வேறு மன அழுத்தங்களைச் சந்தித்தனர். அப்போது பெரிதும் பாதிக்கப்பட்டது அவர்களது தூக்கம்தான். பலரும் நாள்கணக்கில் தூக்கம் வராமல் தவித்தனர். அதனால்தான் தூக்கத்தின் மகத்துவத்தை போற்றும் வகையில் இந்த இண்டர்ன்ஷிப் ப்ரோகிராமை வேக்ஃபிட் ஆரம்பித்தது.
ஏறக்குறைய பிக்பாஸ் போட்டி மாதிரி, இது 100 நாள் தூங்கும் போட்டி ஆகும். கடந்த 2020ம் ஆண்டு இதன் முதல் சீசன் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு இரண்டாம் சீசன் நடந்தது. முதல் மற்றும் இரண்டாம் சீசன்களுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் சீசனுக்குரிய போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது வேக்ஃபிட்.
இதில் பங்கேற்க விரும்புவர்களிடம் இரண்டு தகுதிகளை மட்டுமே எதிர்பார்க்கிறது வேக்ஃபிட். அதில் முதலாவது ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடுத்தது,
'கைப்புள்ள இன்னும் ஏண்டா முழிச்சுட்டு இருக்க.. தூங்கு..' என வடிவேலு ரேஞ்சுக்கு படுத்த 10 - 20 நிமிடங்களுக்குள் தூங்குபவராக இருக்க வேண்டும்.
இதுதவிர, தூக்கம் மற்றும் தூக்கத்தை வரவழைக்கும் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தேவலை என்கிறார்கள். மேலும், சுற்றுப்புறத்தைப் பற்றிக் கவலைப்படாமல், எப்படியான சத்தம் மற்றும் வெளிச்சத்தில் படுத்தாலும் தூக்கம் வரும் நபராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகுதிகளைப் பெற்றவராக இருந்து, போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வாகி விட்டால், அடுத்த 100 நாட்களுக்கு அவர்கள் செய்ய வேண்டியது,
தினமும் நன்றாகத் தூங்குவது மட்டும்தான். அதாவது, இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தினமும் 9 மணி நேரம் தூங்கி எழ வேண்டும். இதுதான் போட்டியாளர்கள் செய்ய வேண்டிய ஒரே முக்கியமான வேலை.
பரிசு மட்டுமின்றி தினமும் எந்தவித இடையூறும் இல்லாமல் தூங்குபவர்கள் ஒவ்வொருவருக்கும் சம்பளமும் வழங்கப்படும். 100 நாட்களும் நிம்மதியாக தூங்கி எழுந்து, இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 10 லட்சம் பரிசுப்பணமும், சாம்பியன் என்ற பட்டமும் தரப்படும்.
தங்குவதற்கு நல்ல இடம், ஆரோக்கியமான சாப்பாடு, தூங்குவதற்கு சிறப்பான வசதி என அனைத்தையும் Wakefit செய்து தருவதால், இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த சீசனுக்கு மட்டும் சுமார் 5.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ஸ்லீப் இண்டர்ன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 15 பேர் இறுதிப் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டு, போட்டியில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களையும் வேக்ஃபிட் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு வெற்றியாளரின் புரொபைல் படங்களுமே தூங்கி வழிந்து, பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வயது வித்தியாசம் எதுவும் இல்லை என்பதால், அறுபது வயதான முதியவர்கள் முதல், 20 வயதான இளைஞர்கள் வரை இதில் கலந்து கொண்டனர்.