‘அவள் அப்படித்தான்’ - சினிமாவின் நாயகியாக மட்டுமல்ல நிஜத்திலும் ‘சாதி மதமற்ற சிநேகா’ அப்படித்தான்!
இந்தியாவிலேயே முதன்முறையாக ’சாதி மதம் இல்லை’ என்ற சான்றிதழை பல ஆண்டுகாலம் போராடி பெற்ற வழக்கறிஞர் சநேகா. தற்போது 'அவள் அப்படித்தான் -2' படத்தின் மூலமாக திரைப்பட நடிகையாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
“பெண்கள் வேலைக்குப் போற இடத்துல முதலாளிக்கு அடிமையாவும், வீட்டுக்கு வந்த பிறகு கணவனுக்கும் புகுந்த வீட்டுக்கும் அடிமையாவும் இருக்கறதை' இரட்டை அடிமை முறை’-ன்னு பெரியார் சொல்றார். இது எப்போ சரியாகும்ன்னா மனிதர்கள் எல்லாருமே ஜனநாயக உரிமைகளுக்கு உட்பட்ட சமமானவர்கள் - ஆண் பெண் வேறுபாடற்றவர்கள் அப்படீங்கிற சித்தாந்தம் வரும்போதுதான் மாறும்...“ என்கிறார் சிநேகா.
பல ஆண்டுகள் போராடி 'சாதி மதம் அற்றவள்' என்ற சான்று வாங்கிய முதல் இந்தியர் சிநேகா பார்த்திபராஜா. அதனாலேயே, அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் ’அவள் அப்படித்தான் -2’ படத்தின் தலைப்பு பிரபலம் ஆனது என்று சொல்லலாம். சமூகம், அரசியல் சார்ந்து பல தளங்களில் இயங்கிவருகிறார் சிநேகா.
படிப்பு, தொழில், குடும்பம்...
நான் பி.ஏ., பி.எல்., எம்.எல்., சென்னை சட்டக் கல்லூரியில் தான் படிச்சேன். எம் ஏ சோஷியாலஜி படிச்சிருக்கேன். திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துல 17 வருஷமா வழக்கறிஞரா ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கேன். ஸ்கூல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு நிறைய அரசியல் & சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திகிட்டு இருக்கேன். என் பெற்றோரும் வழக்கறிஞர்கள்.
'எந்த சாதி மதமும் சம்மதம் இல்லை' அப்படிங்கறதுக்காக எனக்கு சினேகா-ன்னும் என்னோட தங்கைகளுக்கு மும்தாஜ் ஜெனிஃபர்-ன்னும் பேரு வச்சாங்க. வாழ்க்கை முழுக்க நாங்க எந்த சாதி மதப் பண்டிகைகளையும் கொண்டாடினது இல்ல. எங்களை பள்ளிக்கூடத்துல சேர்க்கும் போதே ஜாதி மதம் இல்லைன்னு சொல்லிதான் சேர்த்தாங்க. எங்களோட திருமணமும் புரட்சிகர திருமணம் தான். என்னுடைய மூன்று மகள்களுக்கும் நானும் அப்படித்தான் பெயர்களை வச்சிருக்கேன்கிறதோட சாதி மதம் இல்லைன்னு சொல்லித்தான் பள்ளிக்கூடத்துல சேர்த்தேன்.
'சாதி மதம் அற்றவள்' என்ற சான்று வாங்கியது...
இந்தியாவுல அரசு சான்றிதழ்கள்ல சாதி சேர்த்து கொடுக்கப்படறதை உடைக்கிற விஷயமா இருக்கணும்கிறதுக்காகவும், மனுஷன் பொறக்கும் போதே சாதி சேர்ந்து வரலைங்கிறதை பதிய வைக்கணுகிறதுக்காகவும் சாதி மதம் இல்லை அப்படிங்கிற சான்றிதழை நான் வாங்க முடிவு பண்ணேன். அதுக்காக 2010 லிருந்து 2019 வரைக்கும் கிட்டத்தட்ட 10 வருஷம் நான் போராடி அதை வாங்கினேன். அதனாலேயே ’சாதி மதம் அற்றவள்’ என்ற சான்று வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றேன்.
நாடக நடிகையானது எப்படி?
பள்ளி, கல்லூரி காலங்களிலேயே நாடகங்கள்ல நடிக்கிறது எனக்கு ரொம்பப் புடிச்சமான விஷயம். நானே நாடகங்களை எழுதி இயக்கி நடிச்சிருக்கேன். திருமணத்துக்கு அப்புறம் பார்த்தீங்கன்னா, தமிழ் பேராசிரியரான என் கணவர் முனைவர். பார்த்திபராஜாவும் ஒரு நாடகவியலாளர். அவர் வேலை பார்க்கிற திருப்பத்தூர் கல்லூரியில 'மாற்று நாடக இயக்கம்'-னு ஒண்ணை வச்சு அதன் மூலமா நிறைய நவீன நாடகங்களை நடத்துவார்.
நாடகம் தொடர்பான 20 புத்தகங்கள் உள்பட 40 புத்தகங்களை அவர் எழுதி இருக்கார். அவரோட கல்லூரி சார்பா ஒவ்வொரு வருஷமும் நூறு மாணவர்களுக்கு 11 நாட்கள் உண்டு உறைவிட நாடகப் பயிற்சி அளிச்சுகிட்டு வர்றாங்க. அப்புறம் நாலு நாள் நாடக விழா நடக்கும். அதுல இந்தியா முழுசும் உள்ள மிகப்பெரிய ஆளுமைகளோட நாடகங்களையும் போடுவாங்க. ஒவ்வொரு ஆண்டும் அந்த நாடக விழாவில் என்னோட கணவரோட நாடகமும் நிச்சயமா இருக்கும். அந்த நாடகத்த வருஷம் பூரா இருபதுக்கும் மேற்பட்ட இடங்கள்ல நாங்க போடுவோம், அந்த நாடகத்தில் நானும் நடிப்பேன்.
திரைப்பட நடிகையானது...
ஃபிரான்ஸ்ல உள்ள அரியநாயகம் ஐயா என்னோட நாடகங்களை தொடர்ந்து பார்த்துகிட்டு வர்றவர். 'அவள் அப்படித்தான்-2' படத்தோட இயக்குனர் ரா.மு.சிதம்பரம், இந்தப் படத்துக்கு கதாநாயகி தேவைன்னு தேடினப்போ அரியநாயகம் ஐயாதான் என்னை அவருக்கு பரிந்துரைச்சிருக்கார். அதுக்கப்புறம் இயக்குனர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததால படத்துல நடிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டேன்.
பள்ளிச் சிறார்களுக்கு விழிப்புணர்வு
’எஜுகேஷன் டூ லவ்’ அதாவது, காதலைப் பற்றிய கல்வியைக் கொடுத்தல் அப்படீன்ற மோட்டோவோட ஒரு தீம் வச்சிருக்கோம். என்னோட கல்லூரி நாட்கள்ல ஆரம்பிச்சு இப்போ 20 வருஷத்தைத் தாண்டி நாங்க ஒரு டீமா அந்த வொர்க்கைப் பண்றோம். அந்த டீமுக்கு என் அப்பா அம்மாதான் ஹெட்.
அவங்க என்ன பண்ணுவாங்கன்னா, ஸ்கூல்ஸ்ல ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ சில்ரன்-க்கு அவங்களோட அடலச்ண்ட் ஏஜ்ல என்னென்ன மாதிரியான சிக்கல்கள் வரும் அந்த சிக்கல்களுக்குக் காரணம் என்ன? அந்த சிக்கல்களை எப்படி எதிர்கொள்றது? அந்த சிக்கல் வராம எப்படி பார்த்துக்கறது? உடலளவுலயும், மனதளவுலயும், சமூக அளவுலயும் அவங்க எப்படி தங்களை தற்காத்துக்கறது? அப்படீங்கிற விஷயத்தை குழந்தைங்களுக்கு ஒரு ஹோல் டே செமினாரா பண்ணுவோம். அந்த செமினார் முடிவுல ஒரு மணி நேரம் ’கேள்வி நேரம்’-னு வைப்போம். அவங்களோட பேர் எழுதாம வெறும் கேள்வியை மட்டும் எழுதிப் போடச் சொல்லி, அதுக்கு காமனாவே பதில் சொல்லுவோம்.
அதுல இதுவரைக்கும் நாம கேள்வியே படாத, எதிர் பார்க்காத பல கேள்விகளை அந்தக் குழந்தைங்க கேட்டிருக்காங்க. ரொம்ப ரொம்ப வித்யாசமான கேள்விகள்லேர்ந்து ’இதுகூட தெரியாதா?’ அப்படீங்கிற சாதாரண கேள்வி வரைக்கும் அவ்ளோ விஷயங்களை அந்தக் குழந்தைங்க மனசு விட்டுப் பேசியிருக்காங்க.
20 வருஷத்துக்கு முன்னாடி; ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ -வுக்கு ஆரம்பிச்ச நாங்க, இப்போ ஏழெட்டு வருஷமா ஆறாவது ஏழாவது குழந்தைங்களுக்கே இந்த வகுப்புகளை எடுக்க ஆரம்பிச்சிட்டோம். இதுவரைக்கும் சுமார் 500 பள்ளிகள்ல இந்த விஷயத்தைப் பண்ணியிருக்கோம், பல ஆயிரக்கணக்கான குழந்தைங்க இதனால பலன் அடைஞ்சிருக்காங்க.
பெண்களுக்கு விழிப்புணர்வு
அரசு மருத்துவமனையில விமன் ப்ரொடெக்ஷனுக்கான செல்லில் நான் எக்ஸ்டேர்னல் மெம்பரா இருக்கேன். வொர்கிங் வுமனுக்கு செக்ஷுவல் அப்யூஸ்லேருந்து அவங்களை ப்ரொடெக்ட் பண்ணிக்கறதுக்கும், ப்ரொடக்ஷன் பத்தின லாஸ் பத்தியும் அவேர்னஸ் கொடுக்கறோம். அவங்களுக்கு உள்ள வொர்க் ஸ்ட்ரெஸ்லேர்ந்தும் வெளியில வர்றதுக்கு சைகலாஜிக்கல் கவுன்சிலிங் கொடுக்கறோம்.
அதேபோல, கல்லூரிப் பெண்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தரப்புப் பெண்களுக்கும் அவங்கவங்களுக்குத் தேவையான அட்வைஸ் அண்டு அவேர்னஸ் கொடுக்கறோம். பெண்களுக்கான மேஜர் ஆக்ட்டே சுமார் 50 இருக்கு. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துல பெண் சிசு கருக்கலைப்பு, பாலியல் திருமணங்கள் எல்லாம் அதிகமா நடக்கும். அவற்றுக்கு எதிராக நாம அவங்ககிட்ட பேச வேண்டியிருக்கும், அதேபோல, வரதட்சணை, குடும்ப வன்முறை இதெல்லாத்துக்கும் எதிரான சட்டங்கள் போக்ஸோ ஆக்ட் பத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தறோம்.
அரசியல் விழிப்புணர்வு
’சாதி மதமற்ற முதல் இந்தியர்’ அப்படீங்கிற அடிப்படையில சாதி ஒழிப்புக்கான நிறைய பிரசாரங்களும், சாதி வன்முறைக்கு எதிராக களமாடுதலையும் தொடர்ந்து பண்ணிகிட்டிருக்கோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதிகளோ வன்முறைகளோ நடக்கும்போது அந்த ஸ்பாட்ல நாம என்ன செய்ய முடியுமோ அந்தப் பணிகளையும் நாங்க தொடர்ந்து செய்யறோம்.
சாதி, மத ஒழிப்புக்கு எதிரான ஒரு பிரசாரத்தை செய்வதும் என் செயல்பாட்டின் ஒரு பகுதி. பொலிட்டிக்கல் ரெஸ்பான்சிபிளிட்டியா நான் இதை என் கையில் எடுத்திருக்கேன். அதையெல்லாம் வெறும் பேச்சாகவோ, உரையாகவோ இல்லாம என் கணவருடன் சேர்ந்து விழிப்புணர்வு நாடகங்களாகவும் கொடுக்கறோம்.
பெண்களுக்கான அறிவுரை...
பெண்களுக்கு அடிப்படையான மூன்று விஷயங்களை நான் சொல்றேன்...
1. பெண்கள் முதலில் தாங்கள் யார் அதாவது, 2000 வருஷத்துக்கு முன்னாடி பெண்கள் எப்படி இருந்தாங்க, அப்புறம் எப்படி நிலைமை மாறுச்சி, இப்போ எப்படி இருக்காங்க என்ற என்ற வரலாற்றை அறியணும்.
2. அதுல தாங்கள் எந்த இடத்துல இருக்காங்க என்ற செல்ஃப் ரியலைசேஷன். இங்க செல்ஃப்-ங்கிறது இன்டீஜுவல் கிடையாது. ஒவ்வொரு இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப இருக்குற பெண்களோட நிலைமையை உணர்றது.
3. தன்னோட அடிப்படை ஜனநாயக உரிமை என்ன-ங்கிறதையும் அது யாரால மறுக்கப்படுதுங்கிற நாலெட்ஜையும் அவங்க பெறணும். அது இருந்தா செஃல்ப் ரெஸ்பெக்ட்டுக்காக அவங்க வாய்ஸ் அவுட் பண்ணுவாங்க. அவங்க பையனையும் பொண்ணையும் ஒழுங்கா வளர்ப்பாங்க. அவங்களை ஒழுங்கா வளக்கணும்னா முதல்ல இவங்க எஜுகேட் ஆகணும், என்கிறார் சிநேகா.