இவ்வளவு தான் நாம் மருத்துவர்களுக்கு செலுத்தும் மரியாதையா?
கொரோனா சமயத்தில் பணியாற்றும் மருத்துவர்களைப் பாராட்டி கைகளை தட்டி, வாட்ஸ் அப் ஸ்டேடஸ், வாழ்த்துக்கள் என எல்லாம் செய்து முடித்துவிட்டோம். இத்துடன் கடமை முடிந்துவிட்டது என்று மக்கள் எண்ணி விட்டார்கள் போல...
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் பாராமல் தங்களுடைய குடும்பத்தினரையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தில் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கடமையை செய்து வருகின்றனர். கொரோனா நோய் பாதித்தவரின் அருகில் குடும்பத்தினரே செல்ல அஞ்சும் நிலையில் மருத்துவர்கள் தினந்தோறும் அவர்கள் அருகில் சென்று தொடர் பரிசோதனைகள் செய்து நோய் வாய்ப்பட்டவரை காப்பாற்றும் உன்னத பணியை செய்து வருகின்றனர்.
எமெர்ஜென்சி நிலையில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களைப் பாராட்டும் விதமாகக் கைகளை தட்டி ஆதரவு, வாட்ஸ் அப் ஸ்டேடஸ், சமூக ஊடகங்களில் வாழ்த்துக்கள் என எல்லாம் செய்து முடித்துவிட்டோம். இத்துடன் கடமை முடிந்துவிட்டது என்று மக்கள் எண்ணி விட்டார்கள் போல...
கொரோனா இப்போது தான் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் பணியாற்றுபவர்களான மருத்துவர்கள், காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
மக்கள் மூலமாக கொரோனா நோய் தொற்று பெற்ற சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான 55 வயதான, நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் சைமன் ஹெர்குலஸ் 15 நாள் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார். உயிரிழந்த மருத்துவரின் மகளும் கொரோனா நோய் தொற்றுக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தகையச் சூழலில் தான் மருத்துவமனை சக மருத்துவர்களே ஒன்று கூடி உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம்செய்ய முடிவெடுத்தனர். நேற்று இரவு கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம் பகுதிக்கு அவரின் உடலை ஆம்புலன்சில் எடுத்துச் சென்றுள்ளனர். இந்தத் தகவலறிந்து அந்தப் பகுதியில் திடீரென திரண்ட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவரின் உடலை அந்தப் பகுதியில் அடக்கம்செய்யக் கூடாது என்று சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மருத்துவரின் உடலை அடக்கம் செய்தால் அந்தப் பகுதியில் கொரோனா அதிகம் பரவும் என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 பேர் ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கியுள்ளனர், இந்த வன்முறைச் சம்பவத்தில் உடலை எடுத்துச் சென்ற மருத்துவர்கள் உள்பட 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து டாக்டர் சைமன் உடலை மயானத்திற்குக் கொண்டு சென்றவர்களில் ஒருவரான மருத்துவர் பாக்யராஜ் கண்ணீருடன் பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் வீடியோவில் கூறியுள்ளதாவது,
“உயிரிழந்த டாக்டர் சைமன் மிகச்சிறந்த மருத்துவர் என பெயர் பெற்றவர், மக்களுக்காகப் பணியாற்றப் போய் தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் நினைத்திருந்தால் வீட்டிலேயே இருந்திருக்கலாம், அப்படி இருந்திருந்தால் அவருக்கு இந்த நோயும் வந்திருக்காது, உயிரிழந்திருக்கவும் மாட்டார்.
ஆனால் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் அவரின் உடலை நல்ல முறையில் அடக்கம் செய்யக் கூட மக்கள் விடவில்லை என்பதை நினைக்கும் போது மருத்துவர்கள் நாங்கள் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம் என்பது தெரிகிறது.
மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்துகிறீர்கள் அது மட்டும் போதாது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். ஊடகங்கள் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
எங்களின் சிறந்த தலைவரை, மருத்துவரை நாங்கள் இழந்து நிற்கிறோம், மக்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் அவரின் உடலை ஆம்புலன்சில் விட்டு விட்டு ஓடி வந்தோம். இறந்த மனிதருக்கான மரியாதை கிடைக்கவில்லை, அவரின் ஆன்மா எப்படி சாந்தியடையும். கடைசியில் 2 மருத்துவர்கள் மட்டும் சென்று டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்து விட்டு வந்தனர் என்று கண்களில் நீர் வடிய தெரிவித்திருக்கிறார்...” பாக்யராஜ்.
கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே வரும் காலகட்டத்தில் மருத்துவர்கள் பணிசெய்யாமல் போனால் மக்களின் நிலை என்னவாவது. அவர்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களுக்காக கொடிய எமனான கொரானோவை எதிர்த்து துணிச்சலாக நிற்கின்றனர் மருத்துவர்கள்.
அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்தி இருக்கிறது. இறந்தவரின் உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவும் என்ற அறியாமையை அகற்ற வேண்டிய நேரமிது. மரித்துப் போகிறவர்களுக்கு உரிய மரியாதையைத் தந்து மனிதநேயத்தை போற்ற வேண்டும்.
கொரோனா வைரஸ் மனித உடலில் மட்டுமே உயிர் வாழும், இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் பரவியதாக உலகில் எங்குமே இதுவரை பதிவாகவில்லை. கொரோனோ வைரஸ் பாதித்தவர் தும்மும்போதோ, இருமும் போதோ வெளியாகும் நீர்துகல்கள் மூலமே வைரஸ் பரவுகிறது. உயிரிழந்தவர்கள் தும்மவோ, இருமவோ அல்லது மூச்சுவிடவோ போவதில்லை. இந்த 3 வழிகளின்றி வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை.
இறந்தவரின் உடலைத் தொட்டால் மட்டுமே வைரஸ் பரவும் அப்படி இருக்கையில் மக்களுக்காக சேவையாற்றிய மருத்துவருக்கு அவமரியாதை செலுத்தியது தமிழ் நாகரிகத்திற்கு தலைகுனிவான செயல் என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையானது மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இறந்தவரின் உடலை எவ்வாறு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி பிளாஸ்டிக் பையில் பாதுகாப்பான முறையில் சுற்றி எடுத்துச் சென்று அடக்கம்செய்ய வேண்டும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவரின் முகம் கூட வெளியில் தெரியாதபடி முழுவதும் மூடித்தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட வேண்டும். இந்த எல்லா விதிகளின் படியே தான் டாக்டர் சைமனின் உடலும் அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஆனால் அறியாமை காரணமாக மக்கள் செய்த கலவரம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கான உரிய மரியாதையைச் செலுத்துவோம், அச்சப்படாமல் பதற்றப்படாமல் கொரோனா நோய் பரவலை தடுத்து மருத்துவர்களுக்குத் துணை நிற்போம்.