Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஏழை மக்களுக்கு உணவும் உதவிகளும் செய்யும் ‘Don’t Waste Food’ மல்லேஸ்வர் ராவ்!

ஏழ்மை நிலையில் வளர்ந்த ஆந்திராவைச் சேர்ந்த மல்லேஸ்வர் ராவ் `டோண்ட் வேஸ்ட் ஃபுட்’ என்கிற என்ஜிஓ தொடங்கி ஏழை மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவி வருகிறார்.

ஏழை மக்களுக்கு உணவும் உதவிகளும் செய்யும் ‘Don’t Waste Food’ மல்லேஸ்வர் ராவ்!

Monday June 07, 2021 , 4 min Read

பசியின் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். அந்த வேதனையை அனுபவித்த மல்லேஸ்வர் என்ஜிஓ ஒன்றைத் தொடங்கி மக்களின் பசியைப் போக்கி வருகிறார்.

மல்லேஸ்வர் ராவ் ஆந்திராவின் ராஜமுந்திரி பகுதியில் பிறந்தவர். விவசாயப் பின்னணி கொண்ட குடும்பம். இவர்கள் நாக்பூருக்கு மாற்றலானார்கள்.


அங்கு இவரது தாத்தாவின் நிலத்தில் வேலை செய்தார்கள். நிலம் செழிப்பாக இருந்தபோது வருமானம் இருந்தது. ஆனால் 1998-ம் ஆண்டு மழை காரணமாக நிலத்தில் விளைச்சல் இல்லை. வருமானமும் இல்லை. கடன் அதிகரித்தது. சொத்தை விற்று கடனை அடைத்தார்கள்.


பின்னர், தெலுங்கானாவின் நிஜாமாபாத் பகுதிக்கு மல்லேஸ்வர் குடும்பத்தினர் மாற்றலானார்கள். மல்லேஸ்வரின் பெற்றோர் தினக்கூலிகளாக வேலை செய்தார்கள்.

1
”சம்பளம் இல்லாத நாட்களில் சாப்பாடும் இருக்காது. கொஞ்சமாக இருக்கும் சாப்பாட்டை எனக்கும் என் சகோதரருக்கும் கொடுத்துவிட்டு அம்மா, அப்பா இருவரும் தண்ணீர் குடித்து வயிற்றை நிறைத்துக்கொள்வார்கள்,” என்கிறார் மல்லேஸ்வர்.

இப்படி கஷ்டமான சூழலில் வளர்ந்த மல்லேஸ்வரர், ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரி பகுதிகளில் உணவின்றித் தவிப்பவர்களின் பசியைப் போக்க 'டோன்ட் வேஸ்ட் ஃபுட்’ (Don’t Waste Food) என்கிற என்ஜிஓ தொடங்கி நடத்தி வருகிறார்.


கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் நாடு சிக்கித்தவித்து வரும் சூழலில் இந்த என்ஜிஓ மூலம் ஆக்சிஜன் சிலிண்டர், அத்தியாவசியப் பொருட்கள், உணவு போன்றவற்றையும் தேவைப்படுவோருக்கு வழங்கி உதவி வருகிறார்.

2

ஆரம்ப நாட்கள்

மல்லேஸ்வரின் பெற்றோர் தினக்கூலிகளாக வேலை செய்தார்கள். குடும்பச் செலவுகளை நிர்வகிக்க அவர்கள் வருமானம் போதவில்லை. மல்லேஸ்வருக்கு எட்டு வயதிருக்கும்போது அவரும் அவருடைய சகோதரரும் உணவகம் ஒன்றில் வேலை செய்தார்கள். தினமும் 5-10 ரூபாய் சம்பாதித்தார்கள்.


சகக் குழந்தைகள் சாலையில் விளையாடுவதைப் பார்த்ததும் இவர்களுக்கும் விளையாடவேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. வேலையைப் பாதியில் விட்டுவிட்டு விளையாடப் போய்விட்டார்கள். உணவக உரிமையாளர் வேலையை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்.


அந்த வழியாக சென்ற ஒருவர் இதைக் கவனித்தார். அவர் மல்லேஸ்வரிடமும் அவரது சகோதரரிடமும் பேசியுள்ளார். அவர் மூலமாக மல்லேஸ்வரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வந்து சேர்ந்தது.

”அவர் சம்ஸ்கார் ஆசிரமம் வித்யாலயம் ஆசிரியர். எங்களுடன் வீடு வரை வந்த அவர் என் அப்பா அம்மாவிடம் பேசினார். என்னைப் பள்ளியில் சேர்த்தார்,” என்று நினைவுகூர்ந்தார்.

ஹேமலதா லவனம் என்கிற சமூக சீர்திருத்தவாதி நிறுவிய பள்ளி அது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள் படித்து வந்தனர். இங்கு படிப்பு மட்டுமின்றி தோட்ட வேலை, எழுதுதல், ஓவியம் வரைதல், சமையல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

மல்லேஸ்வர் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பள்ளியின் நிறுவனர் மறைந்த காரணத்தால் பள்ளி மூடப்பட்டது.

3

மல்லேஸ்வரின் படிப்பு தற்காலிகமாகத் தடைபட்டது. தினக்கூலியாக வேலை செய்ய ஆரம்பித்தார். நண்பர் ஒருவர் நேச்சுரோபதி ஆசிரமத்தில் வேலை வாங்கிக் கொடுத்தார்.

இங்கு வரும் நோயாளிகளின் குடும்பத்தினர் புத்தகம் கொடுத்து உதவியுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தார்.

என்ஜிஓ தொடக்கப்புள்ளி

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.

”2012-ம் ஆண்டு சித்தார்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்தேன். ஆய்வகத்திற்குத் தேவையான பொருட்களை என்னால் வாங்க முடியவில்லை. என்னை வெளியில் அனுப்பிவிட்டார்கள்,” என்றார்.

விரைவில் வெயிட்டர் வேலை கிடைத்தது. இந்த வேலை செய்து சம்பாதித்து வகுப்பிற்குத் தேவையானப் பொருட்களை வாங்கியுள்ளார்.


ஒருமுறை ஒரு விழாவிற்காக உணவு பரிமாற சென்றிருந்தார். அங்கு வந்திருந்த விருந்தினர்கள், வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகும் அதிகளவில் உணவு மீதமிருந்ததைக் கண்டார்.

”பசியின் கொடுமையை நான் அனுபவித்திருக்கிறேன். எனவே உணவை வீணாக்க மனமில்லை. பசியில் வாடுபவர்களுக்கு விநியோகிக்கத் தீர்மானித்தேன். அவற்றை பேக் செய்து அருகிலுள்ள பகுதிகளுக்குச் சென்று விநியோகித்தேன்,” என்கிறார்.

இந்த முயற்சிதான் என்ஜிஓ தொடங்குவதற்கான ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. 2012-ம் ஆண்டு நண்பர் சக்ரதர் கௌத் உடன் இணைந்து Don’t Waste Food என்கிற என்ஜிஓ தொடங்கினார். 2021-ம் ஆண்டு லாப நோக்கமற்ற நிறுவனமாக இது பதிவு செய்யப்பட்டது.

Don’t Waste Food செயல்பாடுகள்

மல்லேஸ்வர் உணவகங்கள், ஹாஸ்டல், திருமணங்கள் மற்றும் இதர விழாக்கள் போன்ற இடங்களில் இருந்து உணவை சேகரித்து விநியோகிக்கிறார். தினமும் 500 முதல் 2000 உணவுப்பொட்டலங்களை விநியோகித்து வருகிறார்.


மல்லேஸ்வர் மட்டுமே ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் வார இறுதி நாட்களில் ஐடி நிறுவன ஊழியர்கள் தன்னார்வலர்களாக இணைந்துகொண்டனர்.


இவர்கள் அனைவரும் குழுவாக ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். சாலையில் ஆதரவின்றி இருப்போருக்கு மட்டுமின்றி அரசு மருத்துவமனை நோயாளிகள், பொது இடங்களில் வசிப்பவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என பலருக்கும் உதவி வருகிறார்கள்.

“குழந்தைகள் பசியால் வாடக்கூடாது. குழந்தைத் தொழிலாளர் முறை  கொடுமையானது. இரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன். இந்த நிலை எந்தக் குழந்தைக்கும் வரக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு பொம்மை, துணி போன்றவற்றைக் கொடுப்பதுடன் என்னால் முடிந்த அளவிற்கு அடிப்படை கல்வியும் வழங்குகிறேன்,” என்கிறார்.

குழந்தைகள் மனதில் பள்ளி குறித்தும் ஆசிரியர்கள் குறித்தும் இருக்கும் பயத்தையும் போக்குகிறார்.


மல்லேஸ்வர் குழுவினர் உணவை அவ்வப்போதே விநியோகித்துவிடுகிறார்கள். முதலில் குழுவினர் சாப்பிட்டுப் பார்த்து உறுதிசெய்த பின்னரே மற்றவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று சூழலில் அதிகளவில் மக்களுக்கு உதவ விரும்பினார். மல்லேஸ்வர் சமூக வலைதளங்களில் நிதி திரட்டுவது குறித்து பதிவிட்டார். மிலாப் கூட்டுநிதி தளம் மூலம் நிதி திரட்டினார்.


என்கே டிராவல்ஸ் நிறுவனம் இவரது சேவையைக் கண்டு உணவு விநியோகிக்க 25 வாகனங்களைக் கொடுத்து உதவியுள்ளது.

பலதரப்பட்ட உதவிகள்

பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் நகராட்சி பணியாளர்களுக்கு மோர், மதிய உணவு ஆகியவற்றை விநியோகம் செய்தார்.

சாலைகளில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்க நிதி திரட்டினார். இதன் மூலம் தினமும் 20,000 பேருக்கு இவரால் உணவளிக்க முடிந்தது.

4

மேலும், இந்தக் குழுவினர் உணவை 4000 பொட்டலங்களாகப் பேக் செய்து நாய்களின் பசியைப் போக்கியுள்ளனர்.

“மக்கள் பாதி உணவை சாப்பிட்டு மீதியிருப்பதைத் தூக்கியெறிந்தார். இதைப் பார்த்ததும் வேதனையாக இருந்தது. அதன் பின்னரே சமைக்கப்படாத மளிகைப் பொருட்களை வழங்கத் தீர்மானித்தேன்,” என்கிறார்.

பெயர் வெளியிடாத ஒருவர் 20,000 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் மூலம் 70,000 குடும்பங்கள் பலனடைந்தன.


மல்லேஸ்வர் குழுவினர் உணவு மட்டுமல்லாது பழங்கள், செருப்பு, மாஸ்க், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவற்றையும் ஏழை மக்களுக்கு கொடுத்து உதவியுள்ளனர். இதுதவிர கொரோனா பரவல் முதல் அலையில் இக்குழுவினர் கிட்டத்தட்ட 180 உடல்கள் அடக்கம் செய்யப்பட உதவியுள்ளனர்.

அங்கீகாரம்

மல்லேஸ்வரின் முயற்சிகளை பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கீ பாத்’ உரையில் இவரது சேவையை சுட்டிக்காட்டியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியிடமிருந்து ‘கோவிட் வாரியர் விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வென்றுள்ளார்.

5
“ஏழை மக்கள் புதிதாக ஒரு நகருக்கு வரும்போது எங்கள் தன்னார்வலர்களைத் தொடர்பு கொண்டு இலவசமாக உணவு பெற உதவும் வகையில் ஆப் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் தன்னார்வலர்கள் அருகிலுள்ள உணவகங்களில் இருந்தோ நன்கொடை வழங்க விரும்புபவர்களிடமிருந்து உணவை சேகரித்துத் தேவையானவர்களுக்குக் கொடுப்பார்கள்,” என்று வருங்கால திட்டம் குறித்து விவரித்தார்.

ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யு | தமிழில்: ஸ்ரீவித்யா