ஏழை மக்களுக்கு இலவசமாக செயற்கை கைகள் உருவாக்கும் இளைஞர்!
பிரசாந்த கடே நிறுவியுள்ள Inali Foundation சென்சார் தொழில்நுட்பம் கொண்ட செயற்கை கைகளை உருவாக்கி ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்குகிறார்.
வாழ்க்கை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பாதையில் இட்டுச் செல்கிறது. சிலர் அவர்களாகவே விரும்பி ஆர்வத்துடன் ஒரு துறையைத் தேர்வு செய்வதுண்டு. மேலும் சிலரை அவர்களது சூழல் ஒரு குறிப்பிட்ட பிரிவை நோக்கி இட்டுச் செல்கிறது. இன்னும் சிலருக்கு திடீரென்று அதுவரை சிந்தித்திராத ஒரு பிரிவு அமைந்துவிடுகிறது.
இவர்களுக்கு சில குறிப்பிட்ட பிரச்சனையைக் கையிலெடுத்து தீர்வினை நாம் உருவாக்கியே தீரவேண்டும் என்கிற வைராக்கியம் பிறந்துவிடும். இந்த உந்துதல் காரணமாக அந்தத் தீர்வை உருவாக்கிவிடுகிறார்கள்.
இந்த கடைசி பிரிவைச் சேர்ந்தவர்தான் பிரசாந்த் கடே. 2014ம் ஆண்டு யாராவது இவரிடம் சென்று “நீங்கள் எத்தனையோ பேரின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு சேர்க்க போகிறீர்கள். பாராட்டுக்கள்,” என்று யாராவது சொல்லியிருந்தால் அவர் என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் சிரித்திருப்பார்.
ஆனால் இது உண்மைதான். பிரசாந்த் கடே Inali Foundation நிறுவனர். இந்த நிறுவனத்தின் மூலம் பிரசாந்த் 3,500-க்கும் மேற்பட்டோருக்கு செயற்கை கைகள் வழங்கியுள்ளார்.
தொடக்கம்
பிரசாந்த் நன்றாக படிக்கவேண்டும் என்பதே அவரது அப்பாவின் விருப்பம். அவரது தாத்தாவின் ஆலோசனையின்படி மகாராஷ்டிராவில் பொறியல் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் மூன்றாம் ஆண்டிலேயே பொறியியல் படிப்பை கைவிட்டார்.
”என்னுடைய எதிர்பார்ப்பு இங்கு பூர்த்தியாகவில்லை. படிப்பின் மூலம் புதுமையான சிந்தனைகள் ஊக்குவிக்கப்படவில்லை. மதிப்பெண், கிரேடு, வேலை போன்ற அம்சங்களை நோக்கியே கற்றுக்கொடுக்கப்பட்டது. என்னுடைய இலக்கு இதுவல்ல என்று தோன்றியது. என்னுடைய ஆர்வம் வேறு என்பது புலப்பட்டது,” என்கிறார்.
படிப்பை இடைநிறுத்தம் செய்த கடே வேலை தேடி புனே சென்றார். ஃபேப் லேப்ஸில் ரோபோடிக்ஸ் பின்னணி கொண்ட நபர்களை தேடி வந்தனர். அங்கு இவருக்குப் பணி கிடைத்தது. 5,000 ரூபாய் சம்பளம்.
லேபில் பணி செய்வது அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. ஆர்வம் இல்லாத விஷயம் எளிதாக இருந்தாலும் பிடிக்காது. ஆர்வம் அதிகம் இருக்கும்போது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அதில் மென்மேலும் கற்றறிந்து ஆழமாக புரிந்துகொள்ளவேண்டும் என்றே தோன்றும். பிரசாந்த் கடே இதைத்தான் செய்தார்.
“இங்கு வேலை செய்தபோது மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் Fab Academy என்கிற ஆறு மாத கோர்ஸ்-ல் சேர்ந்தேன்,” என்கிறார்.
இந்த கோர்ஸ் நிறைவு செய்வதன் ஒரு பகுதியாக ஒரு பிராஜெக்ட் செய்ய வேண்டியிருந்தது. அப்போதுதான் நிக்கோலஸ் ஹச்சட் என்பவர் குறித்து கேள்விப்பட்டார். இந்த நபருக்கு வலது கை இல்லை. இவர் தனக்காகவே ஒரு பயோனிக் கைகள் உருவாக்கியிருப்பது குறித்து பிரசாந்த் கடே தெரிந்துகொண்டார். இதுவே பிரசாந்தின் பிராஜெக்டிற்கு உந்துதலாக இருந்துள்ளது.
திருப்புமுனை
புனேவில் கைகள் இல்லாமல் பிறந்த ஒரு குழந்தையை பிரசாந்த் சந்திக்க நேர்ந்தது. இந்தக் குழுந்தைக்கு செயற்கை கை பொருத்துவது குறித்து ஆராயத் தொடங்கினார்.
“ஒரு பெண் குழந்தை மாற்றுத்திறனாளியாக இருந்தால் அந்தக் குழந்தையை நம் சமூகம் பார்க்கும் கோணமே வேறு. இப்படிப்பட்ட குழந்தைக்கு திருமணமே நடக்காது என்பதே மக்களின் பொதுவான கவலையாக இருக்கும். நான் பார்த்த குழந்தைக்கு செயற்கை கை பொருத்தி உதவ விரும்பினேன்,” என்கிறார் பிரசாந்த்.
பிரசாந்த் பல மருத்துவமனைகளை அணுகினார். ஒரு செயற்கை கைக்கு 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பது தெரியவந்தது. இதைக் கேட்டதும் பிரசாந்த் அதிர்ந்து போனார்.
அந்தச் சிறுமி வளர்ந்துகொண்டே இருக்கும் சூழலில் அவ்வப்போது கைகளின் அளவையும் அதற்கேற்ப மாற்றியாகவேண்டும். இவ்வளவு பெரிய தொகையை சிறுமியின் பெற்றோரால் எப்படி செலவு செய்யமுடியும்?
இது இந்தச் சிறுமியின் நிலை மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 5 லட்சம் பேர் கைகளையும் கால்களையும் இழக்க நேரிடுவதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் 40 ஆயிரம் பேர் இந்தியர்கள். இவர்களில் 85 சதவீதத்தினரில் நிலை இதுதான். இவ்வளவு பெரிய தொகையை செலவிட முடியாமல் உண்மையான கையறு நிலையில் இவர்கள் தவிப்பது பிரசாந்திற்கு வருத்தமளித்தது.
இதற்குத் தீர்வு காண்பதையே இலக்காக நிர்ணயித்தார். மீண்டும் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். இவரது அப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகனுக்கு வேலை கிடைத்து சம்பாதிக்கவேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. மீண்டும் வேறொரு கோர்ஸில் சேர்த்தார்.
மீண்டும் அதே பிரச்சனை. வேறொரு இலக்கை மனதளவில் நிர்ணயித்துவிட்ட பிரசாந்தால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை. 250-க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கும் வகுப்பறையில் ஒருவர் மட்டும் இல்லாமல் போனால் தெரியவா போகிறது என்று எண்ணியவர் செயற்கை கைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட ஹாஸ்டல் அறையில் தஞ்சம் புகுந்தார். கூட்டுநிதி தளம் மூலம் நிதி திரட்டி வேலையை ஆரம்பித்தார்.
கனவு நனவானது…
பிரசாந்தின் முயற்சிக்கு உதவ ஒரு என்ஜிஓ முன்வந்தது. அவர்களின் கோரிக்கைப்படி ஒரு முன்வடிவத்தை உருவாக்கி சமர்ப்பித்தார். அதற்கான செலவையும் என்ஜிஓ ஏற்றுக்கொண்டது.
பிரசாந்தின் முயற்சி அடுத்த கட்டத்தை எட்டியதும் நிதி ஆதரவு கிடைத்ததும் தெரிந்தும்கூட படிப்பை மீண்டும் இடைநிறுத்தம் செய்தது அவரது அப்பாவிற்குப் பிடிக்கவில்லை. வேறு வழியின்று மகனின் போக்கில் விட்டுவிட்டார்.
ஜெய்ப்பூரில் அறை எடுத்து தினமும் 10 கி.மீட்டர் நடந்து என்ஜிஓ சென்றார். 20,000 ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை பல்வேறு முன்வடிவங்களை உருவாக்கினார். ஆனால் என்ஜிஓ-வின் பட்ஜெட் 7,000 ரூபாயாக இருந்தது.
”என்னிடம் அறை வாடகை தவிர இரண்டு வேளை உணவிற்குக்கூட பணம் இல்லாமல் போனது,” என்கிறார்.
இந்தச் சூழலில் செயற்கை கை தயாரிப்பில் புதுமையான பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்தார். ஹாட் வாட்டர் பேக் கொண்டு சிலிக்கான் கிரிப் கொண்ட விரல்நுனிகள், விரல்களின் அசைவிற்கு ஜேசிபி பொம்மை லிவர், தசைகள் போல் செயல்பட பேட்மிண்டன் ராக்கெட் என தினமும் பயன்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்டு செயற்கை கை உருவாக்கினார். இதற்கான செலவு வெறும் 75 டாலர் மட்டுமே.
இந்த தயாரிப்பு குறித்த வீடியோவை யூட்யூபில் பதிவிட்டார் பிரசாந்த். இதைக் கண்ட அமெரிக்க பேராசிரியர் ஒருவர் பிரசாந்தை ஒரு கருத்தரங்கில் பங்கேற்று இந்தத் தயாரிப்பு குறித்து பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
”என்னுடைய பிரசெண்டேஷன் முடிந்த பிறகு பலர் உதவ முன்வந்தனர். பண உதவி தேவைப்படாது என்பதால் இதிலுள்ள மற்ற பிரச்சனைகளை விவரித்தேன். மறுநாளே அந்த கருத்தரங்களில் பங்கேற்றவர்கள் என்னை சந்தித்து 10 இயந்திரங்களை கொடுத்து உதவினார்கள்,” என்கிறார் கடே.
இந்த இயந்திரங்களுடன் இந்தியா திரும்பிய பிரசாந்த் கடே 2015-ல் Inali Foundation தொடங்கினார். 2018-ம் ஆண்டு இதைப் பதிவு செய்தார்.
Inali Foundation
பிரசாந்த் கடே நிபுணத்துடம் பெற்ற குழுவின் உதவியுடன் பல்வேறு டிசைன்களை உருவாக்கினார். முதல் வடிவமைப்பில் தண்ணீர் குடிப்பதற்கும் எழுதுவதற்கும் உதவும் வகையில் கையை மூடித் திறக்க பட்டன் பயன்படுத்தப்பட்டது.
இரண்டாவது வகையில் கையில் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். இது மூளையில் இருந்து சிக்னலைக் கண்டறியும் திறன் கொண்டது. அதற்கேற்ப கையில் பொருத்தப்பட்ட மோட்டார் அசையும்.
மூன்றாவது வகை சைகை சார்ந்தது. இதை Inali உருவாக்கவில்லை என்றாலும் எளிமைப்படுத்தி அதன் சென்சார்கள் கொண்டு விலை குறைய உதவியது. இந்த சென்சார் கணுக்காலில் இணைக்கப்பட்டிருக்கும். ரிசீவர் கையில் இணைக்கப்பட்டிருக்கும்.
ஃப்ரென்ச் நாட்டைச் சேர்ந்த சாஃப்ட்வேர் நிறுவனமான Dassault Systems தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது.
”இந்த செயற்கை கைகளுக்கு 2.5 ஆண்டுகள் உத்தரவாதம் வழங்குகிறோம். ஏதேனும் பிரச்சனை இருந்தால் சரிசெய்து கொடுத்துவிடுவோம். இந்தக் கையை முறையாக பராமரிக்கும் விதத்தையும் கற்றுக்கொடுக்கிறோம்,” என்கிறார்.
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்
இவரது முயற்சி பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு சேர்த்துள்ளது. Inali இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் உதவியுடன் இலவசமாக செயற்கை கை, கால்களை வழங்கியுள்ளது.
“2018-ம் ஆண்டு ‘ஆரோஹன் சோஷியல் இன்னொவேஷன் விருது’க்கு பதிவு செய்து முதல் பரிசும் வென்றோம்,” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுப்பிடும்போது,
”நாங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் எங்கள் முயற்சிக்கு ஆதரவளிப்பதாக சுதா மூர்த்தி தெரிவித்தது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது,” என்கிறார்.
இன்ஃபோசிஸ் தவிர SFR Foundation, NASSCOM போன்ற நிறுவனங்களும் Inali Foundation முயற்சிக்கு ஆதரவளிக்கிறது. இதுதவிர கார்ப்பரேட் நிறுவனங்களும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் ஆதரவளிக்கின்றன.
2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி கவுன் பனேகா க்ரோர்பதியின் மிஷன் கர்மவீர் எபிசோடில் பிரசாந்த் கடேவின் முயற்சி அங்கீகரிக்கப்பட்டது. இதில் சோனு சூட் உடன் இவர் இடம்பெற்றார். இந்த அறிமுகத்திற்குப் பிறகு செயற்கை கைகள் தேவைப்படுவோரை பிரசாந்திடம் அனுப்புகிறார் சோனு சூட்.
”அடுத்த பத்தாண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப் போலவே சுயமாக செயல்பட உதவவேண்டும் என்பதே Inali Foundation நோக்கம். ஒரு நபரின் வாழ்க்கையை நீங்கள் மேம்படுத்தினால், நீங்கள் உங்களுக்கு அறியாமல் பலரின் வாழ்க்கையை பாதுகாக்கிறீர்கள் என்று பொருள். தொழில்நுட்பம் பிரம்மாண்ட வளர்ச்சியடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஒருவர்கூட மாற்றுத்திறனாளியாக தவிக்கக்கூடாது,” என்கிறார் பிரசாந்த கடே.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா