5 ரூபாய்க்கு விதவித உணவு: ஏழை மக்கள் உரிய மரியாதையுடன் வாழ உதவும் 60 வயது சமூக சேவகர்!
நொய்டாவில் வசிக்கும் சமூக சேவகர் அனூப் கண்ணா ஏழை மக்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அடிப்படை தேவைகள் உரிய மரியாதையும் கிடைக்கவேண்டும் என்பதற்காக இவற்றை மிகக்குறைந்த விலையில் வழங்கி வருகிறார்.
நொய்டாவின் செக்டார் 29 பகுதி. இங்குள்ள ஒரு ஸ்டோருக்கு வெளியில் தினமும் கிட்டத்தட்ட 500 பேர் நீண்ட வரிசையில் நிற்பதைப் பார்க்கமுடியும். இவர்கள் 5 ரூபாய்க்கு முழு உணவை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு வரிசையில் நிற்கின்றனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு சமூகப் பின்னணி கொண்டவர்கள்.
இவர்களுக்கு ‘பாட்டியின் சமையலறை’ என்கிற பொருள் கொண்ட ‘தாதி கி ரசோய்’ என்கிற முயற்சியின் மூலம் தரமான உணவை மிகக்குறைந்த விலைக்கு வழங்குகிறார் அனூப் கண்ணா. இவருக்கு வயது 62. சமூக சேவகர். ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, மருந்து ஆகியவை உரிய மரியாதையுடன் கிடைக்கவேண்டியது அவர்களது உரிமை என்பதே இவரது திடமான கருத்து.
"மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர சிறிய முன்னெடுப்புகள் அவசியம் என்கிற எளிய கொள்கையைப் பின்பற்றுகிறேன். கல்வி, விளையாட்டு, பொதுமக்களின் நலன் என சக மனிதர்களுக்கு உதவ என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்,” என்று அனூப் தெரிவிக்கிறார்.
விளையாட்டில் ஆர்வம்
அனூப் கண்ணா உத்திரப்பிரதேசத்தின் மொராதாபாத் என்கிற சிறிய நகரில் பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் விளையாட்டில் அதீதி ஆர்வம் இருந்தது. இளைஞர்கள் கராத்தே, பேட்மிண்டன், தடகளம் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்கிறார். நொய்டாவில் விளையாட்டு தொடர்பான பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
1984-ம் ஆண்டு முதல் அனூப் நொய்டாவில் இடண்டு மருந்தகங்கள் நடத்தி வருகிறார். சமூக மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார் இந்தத் தொழிலதிபர்.
“என்னுடைய அப்பா சுதந்திர போராட்டத்தில் பங்களித்துள்ளார். மகாத்மா காந்தி, மொகமத் அலி ஜில்லா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் பணியாற்றியுள்ளார். சமூக நலனில் நான் பங்களிக்க இவர் எனக்கு தொடர்ந்து உந்துதலளிக்கிறார்,” என்றார் அனூப்.
தாதி கி ரசோய்
“எந்த ஒரு மனிதனுக்கும் உணவு, உடை, மருந்து ஆகியவை அடிப்படைத் தேவைகள். ஏழை மக்களுக்கு இந்த மூன்றும் உரிய மரியாதையுடன் கிடைக்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்,” என்கிறார் அனூப்.
இதை செயல்படுத்தும் விதமாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி`தாதி கி ரசோய்’ முயற்சியைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் மக்களுக்கு வெறும் 5 ரூபாயில் உணவு வழங்குகிறார்.
இந்த உணவு நெய் கொண்டு சமைக்கப்படுகிறது. பருப்பு அரிசி, கொண்டை கடலை, காய்கறிகள் என வெவ்வேறு உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. உணவு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கிறார் அனூப். சமையலறையை இவர் அடிக்கடி சென்று பார்வையிடுகிறார். மேலும் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுவதை கண்காணிக்க 4 சிசிடிவி கேமராக்கள் சமையலறையில் பொருத்தப்பட்டுள்ளன.
உணவு பொட்டலத்துடன் பிஸ்கெட், ஜூஸ் பேக்கட், சிலசமயம் ரசகுல்லா போன்ற இனிப்பு வகைகளும் பரிமாறப்படுகின்றன. ஸ்டாலுக்கு கிடைக்கும் உதவியின் அடிப்படையில் கூடுதல் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஒரு உணவுப் பொருள் வெறும் 5 ரூபாய் என்கிற விலையிலேயே வழங்கப்படுகிறது.
தினக்கூலிகள், மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போன்றோருக்கு சேவையளிக்கும் வகையில் நொய்டாவில் இரண்டு ஸ்டால்கள் செயல்பட்டு வருகின்றன.
சேவை நோக்குடன் இந்த முயற்சியைச் செய்து வரும் அனூப் ஏழைகளுக்கு இந்த உதவியை இலவசமாகவே செய்யலாமே என்கிற கேள்வியும் நம் மனதில் எழாமல் இல்லை.
இதற்கு பதிலளிக்கும் விதமாக,
“ஏழை மக்களுக்கு உரிய மரியாதை வழங்கவேண்டும். அவர்களை பிச்சைக்காரர்கள் போன்று நடத்தக்கூடாது. இதற்காகவே உணவை இலவசமாக வழங்காமல் மிகக்குறைந்த தொகையாக 5 ரூபாய் விலையில் வழங்குகிறேன்,” என்கிறார் அனூப்.
அடுத்து நம் மனதில் எழும் கேள்வி இதற்கான செலவை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதே. வெளிநாடுகளில் வசிக்கும் இவரது இரண்டு குழந்தைகள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
ஆடைகள்
’தாதி கி ரசோய்’ மூலம் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் அனூப் ‘சத்பாவனா ஸ்டோர்’ மூலம் ஏழை மக்களுக்கு 10 ரூபாய் என்கிற விலையில் ஆடைகளை வழங்குகிறார்.
“ஆடைகள், புத்தகங்கள் போன்ற எத்தனையோ பொருட்களை நாம் தூக்கியெறிந்துவிடுகிறோம். இவை மற்றவர்களுக்குப் பயன்படும். ஏழை மக்கள் இந்த ஸ்டோருக்கு வந்து பெற்றுச் செல்லலாம். என்னுடைய முயற்சியைக் கண்டு பலரும் முன்வந்து இதற்கு ஆதரவளித்துள்ளனர்,” என்கிறார் அனூப்.
அதேபோல் மக்கள் ஸ்பெஷல் ஆடை வகைகளை இரவல் பெற்றுக்கொள்ளலாம். அந்த ஆடைகளுக்கான கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதிலாக திருப்பிக் கொடுக்கும்போது டிரைகிளீன் செய்து கொடுத்துவிட்டால் போதும்.
ஆரம்பத்தில் அனூப் தானே முழுமையாகப் பொறுப்பேற்று அனைத்து பணிகளையும் நிர்வகித்து வந்தார். தற்போது இரண்டு முயற்சிகளுக்கும் ஆட்களை நியமித்துள்ளார். லாப நோக்கமற்ற செயல்பாடுகளாக இருப்பினும் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் கொடுத்துவிடுகிறார் அனூப்.
சூரஜ் குமார் சில காலமாகவே அனூப்பிடம் பணிபுரிந்து வருகிறார். அவர் கூறும்போது,
”தாதி கி ரசோய் பணிகளிலும் மருந்து கடை பணிகளிலும் அவர் இல்லாத நேரங்களில் பெரும்பாலான பணிகளை நான் மேற்கொள்கிறேன். அவரைப் போன்ற சேவை உள்ளம் கொண்டவருடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார்.
அனூப்பின் முயற்சிகளை குடியரசுத் தலைவரின் செயலாளர் சஞ்சய் கோத்தாரி பாராட்டினார். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சமூக சீர்திருத்தம்
25 ஆண்டுகளுக்கும் மேலாக அனூப் பல்வேறு சமூக இயக்கங்கள் மூலம் மக்களுக்கு உதவி வருகிறார். சிறந்த கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளுடன் இந்தியாவை மேம்படுத்தவேண்டும் என்பதே இவரது விருப்பம். இத்தகைய முயற்சிகளை நொய்டாவில் தொடங்கி மெல்ல விரிவாக்கம் செய்ய விரும்புகிறார்.
சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்ட அனூப் கல்வி சார்ந்த முன்னெடுப்புகளும் எடுத்து வருகிறார். நொய்டாவில் பள்ளி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
“தனியார் பள்ளிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து எங்கள் பேனரின் கீழ் மிகப்பெரிய போராட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இது நாடு முழுவதும் பரவியுள்ளது. சாலைகளில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தி சட்ட ரீதியாகவும் சந்தித்தோம்,” என்றார்.
நலிந்த குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதிலும் அனூப் பங்களித்து வருகிறார். அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றிற்கும் ஆதரவளிக்கிறார்.
புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் புகையிலைக்கு எதிரான பிரச்சாரங்களையும் அவர் தொடங்கியுள்ளார். பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரச்சாரங்களையும் ஆற்றல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த No Fuel Day என்கிற முயற்சியையும் தொடங்கினார்.
அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான அறப்போராட்டத்தில் அனூப் தீவிரமாக பங்களித்தார். நொய்டாவில் இயக்கத்திற்கு ஆதரவாக 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தனது மருந்து கடையில் வாக்காளர்கள் அனைவருக்கும் சலுகைகள் வழங்கியுள்ளார்.
“சமீபத்தில் பிரதமரின் மலிவு விலை மருந்து திட்டத்தில் இணைந்துள்ளேன். மக்களுக்கு தரமான மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக முதல் ’பிரதான் மந்திரி ஜன் அவுஷாதி’ மருந்தகத்தை நொய்டாவில் திறந்துள்ளேன்,” என்றார்.
கோவிட்-19 சவால் மற்றும் வருங்காலத் திட்டம்
கொரோனா பெருந்தொற்று`தாதி கி ரசோய்’ உட்பட பல உணவகங்களை பாதித்துள்ளது. அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ள விற்பனையாளர்கள், தினக்கூலிகள், கட்டுமானப் பணியாளர்கள் போன்றோரின் நிலையைக் கண்டு இக்குழுவினர் உதவி செய்யத் தீர்மானித்தனர்.
“பருப்பு, கோதுமை, அரிசி அடங்கிய பேக்கெட்டுகளை சாலையில் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ஏழை மக்களுக்கும் விநியோகித்தோம். உதவி தேவைப்படுவோர்களுக்கு அவர்களுக்கு இருப்பிடங்களே சென்றும் உதவியுள்ளோம்,” என்றார் அனூப்.
இளைஞர்கள் சமூக நலனில் பங்களிப்பதற்கு அனூப் ஊக்குவிக்கிறார். அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மக்களின் பரிந்துரைகளை இணைக்க ஆலோசகர்களை நியமிக்கிறார்.
மிகப்பெரிய மாற்றம் ஒவ்வொன்றையும் சிறிய முன்னெடுப்புகள் சாத்தியப்படுத்தும் என்று குறிப்பிடும் அனூப் நிறைவுக் கருத்தாக,
“சாலையில் இருக்கும் ஏழை ஒருவருக்கு உணவளிக்கலாம். உங்களுக்கு பொருத்தமாக இல்லாத ஆடைகளை தேவையிருப்போருக்கு கொடுக்கலாம். வெறும் வார்த்தைகளைக் காட்டிலும் ஒரு சிறிய செயல் சிறந்தது,” என்று குறிப்பிடுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா