இந்த நிஜ ‘சூரர்’ கேப்டன் கோபிநாத் பற்றி தெரிந்து கொண்டு போற்றுவோம் வாருங்கள்...

- +0
- +0
சூரரைப் போற்று... தீபாவளியையொட்டி ரிலீசாகியுள்ள சூர்யாவின் படம்.
சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல், மே மாதவாக்கிலேயே ரிலீசாகி இருக்க வேண்டியது. கொரோனா பிரச்சினையால் தாமதமாகி தற்போது ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் பட வேலைகள் ஆரம்பமான போதே படம் மீதான எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து விட்டது. அதற்கு முக்கியக் காரணம், சூரரைப் போற்று நாயகன் மாறா கதாபாத்திரம், நிஜத்தில் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் நிஜ வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது என்பது தான்.
யார் இந்த கேப்டன் கோபிநாத்..?
நிச்சயம் 90 மற்றும் 2000ம் ஆண்டுகளில் பெரியவர்களாக இருந்த இந்தியர்களுக்கு இந்தப் பெயர் நன்கு அறிமுகமானது தான். ஆனால் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ்க்கு இப்போது தான் அவரைப் பற்றிய தேடுதல் அதிகமாகியுள்ளது.
அவரது வாழ்க்கையைத் தழுவி படமாக எடுக்கும் வகையில் அப்படி என்ன சாதித்தார் கோபிநாத்? இதோ விரிவாகப் பார்க்கலாம்!

செல்வந்தர்களுக்கு விமானப் பயணம் என்பது பெரிய விசயம் அல்ல. ஆனால் ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்து விட வேண்டும் என்பது தான் வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றாக இருக்கும். அந்தளவிற்கு இப்போதும் விமானப் பயணம் என்பது எல்லோருக்கும் கைக்கெட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. இப்போதும் விமானம் வானில் பறப்பதைப் பார்ப்பதே குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்கள் பலருக்கும் சந்தோசமான விசயம் தான்.
அப்படி விமானத்தைப் பார்த்து ஏங்கியவர்கள் பலருக்கு, பட்ஜெட் விமானப் பயணம் என்ற தனது குறைந்த விலை விமானக் கட்டணங்களால் வானத்தை வசப்பட வைத்தவர் தான் இந்த ஜி.ஆர்.கோபிநாத்.
ஜி.ஆர்.கோபிநாத் என்ற பெயரின் முழு விரிவாக்கம் கொருர் ராமசாமி கோபிநாத் ஆகும். கர்நாடகா மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் உள்ள கொருர் கிராமத்தில் 1951ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி பிறந்தவர் தான் கோபிநாத். நடுத்தர கிராமத்தில் எட்டுக் குழந்தைகள் உள்ள வீட்டில் இரண்டாவதாகப் பிறந்தவர். தந்தை ஆசிரியராக இருந்தபோதும், பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் நேரடியாக 5ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். பின்பு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பிஜாப்பூரின் சைனிக் பள்ளியில் சேர்ந்தார்.
சிறுவயது முதலே ராணுவத்தில் சேர்வது தான் கோபிநாத்தின் லட்சியமாக இருந்தது. இதனால் ஐஎம்ஏவில் படிப்பை முடித்ததும் ராணுவத்தில் சேர்ந்தார். தனது கடின உழைப்பால் கேப்டனாக உயர்ந்தார். 1971ல் நடந்த வங்கப் போரில் கலந்து கொண்டார். எட்டு ஆண்டுகள் ராணுவப் பணிக்குப் பின் தனது 28 வயதில் விருப்ப ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் சுயமாக தொழில் தொடங்க முடிவு செய்தார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் விற்பனை, கோழிப்பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு, மோட்டார் சைக்கிள் டீலர், உடுப்பி ஹோட்டல் ஓனர், பங்கு தரகர், விவசாய நீர் பாசன சாதனங்களை விற்பது எனப் பலத் தொழில்களில் ஈடுபட்டார்.
ஒவ்வொரு தொழிலும் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டார். சில காலம் அரசியலிலும் கூட ஆர்வம் ஏற்பட தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி தான் கிடைத்தது. மனம் தளரவில்லை கோபிநாத். அடுத்தடுத்த முயற்சிகளில் இன்னமும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.
இப்படியாக வாழ்க்கைப் போய்க் கொண்டிருந்த போது தான், இந்தியர்கள் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே விமானப் பயணம் சாத்தியமாகிறது என்ற அதிர்ச்சி உண்மை கோபிநாத்திற்கு தெரிய வந்தது. அப்படியென்றால் மீதமுள்ள இந்தியர்களுக்கு அது ஏன் சாத்தியப்படவில்லை என அவர் யோசித்தார்.
அப்போது தான் அதிகப்படியான கட்டணத்தால் தான் அனைவருக்கும் விமானப் பயணம் சாத்தியமாகவில்லை என்பதை அவர் தெரிந்து கொண்டார். எனவே குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்க வேண்டும் என்ற கனவுத் திட்டத்தை கையில் எடுத்தார்.

முதலில் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார். ஆனால் கையில் தேவையான முதலீடு இல்லை. அரசின் ஒவ்வொரு துறைகளிடமும் அனுமதி வாங்கும் சவாலாகவே இருந்தது. சாமர்த்தியமாக திட்டமிட்ட கோபிநாத், முழுமையான அனுமதி கிடைப்பதற்கு முன்பாகவே, நிறுவனத்தின் துவக்கவிழாவை அறிவித்தார். இதனால் அந்தக் கெடுவுக்குள் அவருக்கு அனுமதி தரும்படி ஆனது.
1997ல் தனது ராணுவ நண்பர் சாமுவேல் என்பவருடன் சேர்ந்து ஒரே ஒரு ஹெலிகாப்டருடன் தனது டெக்கான் ஏவியேஷன் எனும் நிறுவனத்தைத் துவக்கினார். பிறகு படிப்படியாக ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சில விபத்துகள் நடந்தபோதும், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடுவதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக வளர்ந்தது டெக்கான். பெரிய விஜபிக்கள் கோபிநாத்தின் வாடிக்கையாளர்கள் ஆனார்கள்.
இந்தக் காலகட்டத்தில் தான் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவையை வழங்குவதற்கான முயற்சியாக ஏர் டெக்கானை துவங்க முடிவு செய்தார் கோபிநாத்.விமானத் தொழிலைப் பொருத்தவரை செலவிற்கு தகுந்த அளவு வருமானம் இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஆழம் தெரியாமல் காலை விட்டு, கையைச் சுட்டுக் கொண்டவர்கள் ஏராளம். ஆனாலும் அந்தத் தொழிலில் துணிந்து இறங்கினார் கோபிநாத்.
மற்ற விமான நிறுவனங்களுக்குப் போட்டியாக பெரிய நகரங்களுக்கு விமானத்தை இயக்காமல், சிறிய நகரங்கள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். தன் வியாபாரத்தை குலு மணாலி, தரம் சாலா, பெல்லாரி, ஜபல்பூர், ராஜமுந்திரி, விஜயவாடா போன்ற இந்தியாவின் டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்கள் பக்கம் கொண்டு சென்றார். அந்த காலத்தில், இந்த நகரங்களுக்கு எல்லாம் விமான சேவையே கிடையாது.
ஏர் டெக்கன் மிகப்பிரபலமாகக் காரணமாக இருந்தது ‘ ஒரு ரூபாய் கட்டண விமானப் பயணம்’. இந்த அதிரடி அறிவிப்பால், எதெல்லாம் பிற விமான நிறுவனங்களுக்கு செலவாக இருந்ததோ, அதையெல்லாம் ஏர் டெக்கானுக்கு வருமானம் தரும் விஷயமாக மாற்றி யோசித்தார் கோபிநாத்.

FSC விமான சேவைகளுக்குப் பதிலாக, LCC விமான சேவையை கையில் எடுத்தார். அதாவது Full Service Carrier என்றால் விமானத்திலேயே பொழுது போக்கு, உணவு, மது பானங்கள் போன்ற பல வசதிகளைச் செய்து தருவார்கள். LCC என்றால் இந்த வசதிகள் எல்லாம் இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். கோபிநாத் இந்த இரண்டாவது ரக விமானங்களை களம் இறக்கினார். இன்று ஒட்டு மொத்த இந்தியாவின் விமானச் சேவைகளைப் பார்த்தால் சுமார் 65 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் கோபிநாத்தின் ஐடியாவில் இந்தியாவுக்குள் வந்த LCC விமானங்கள் தான்.
ஆனால், துவக்க நாளில் முதல் விமானமே எஞ்சினில் தீப்பிடித்து சர்ச்சையில் சிக்கியது. ஊடகங்களில் ஏர் டெக்கான் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வரத் தொடங்கின. ஆனபோதும் தொடர் முயற்சிகள், கடுமையான திட்டமிடல் காரணமாக, இந்தியாவின் மிகக் குறைந்த கட்டணமுள்ள ஏர்லைனாக கோபிநாத், தனது ஏர் டெக்கானை வெற்றிகரமாக மாற்றினார்.
2003ல் டெக்கான் ஏவியேஷன் LCC விமானங்களை களம் இறக்கி காசு பார்க்கத் தொடங்கியது. அடுத்த 3 - 4 ஆண்டு காலத்தில், இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸை தூக்கிச் சாப்பிட்டது.
அந்த நேரத்தில் இந்தியாவில் சுமார் 67 நகரங்களுக்கு, தன் விமானங்களை இயக்கிக் கொண்டு இருந்தது ஏர் டெக்கன். இதனால் ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ போன்ற விமான சேவை நிறுவனங்களும் அதே LCC ஃபார்முலாவை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். இன்று வரை கோபிநாத்தின் அந்த வெற்றி சூத்திரம் தான் விமானத்துறையில் வெற்றிக்கான தாரகமந்திரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர் டெக்கானுக்கு ஒரு ரூபாய் டிக்கெட் யுக்தியால் புதிய வாடிக்கையாளர்கள் உருவானார்கள். ஆனால் விளம்பரம் கிடைத்த அளவிற்கு வருமானம் கிடைக்கவில்லை. எனவே, புதிய முதலீடுகளுக்கு முன்னுரிமை கொடுத்தார். அப்போது தான், 2007ம் ஆண்டு விஜய் மல்லையா ஏர் டெக்கானுக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் முதலீட்டாளராக நுழைந்தவர், காலப்போக்கில் ஏர் டெக்கானின் முழுக் கட்டுப்பாட்டையும் தன் வசம் கொண்டு வந்தார். இதனால் தன் பங்குகளை விற்று விட்டு, ஏர் டெக்கானில் இருந்து வெளியேறினார் கோபிநாத். ஏர் டெக்கானின் பெயரும் மாற்றப்பட்டது.
ஏர் டெக்கானில் இருந்து வெளியேறிய போதும், விமானத் தொழிலை முற்றிலுமாக விட கோபிநாத் விரும்பவில்லை. ஒரு தொழிலில் வெற்றி கிடைத்தால் அதிலேயே தேங்கி விடுபவரல்ல அவர். மேலும் தனது தொழிலை விரிவுப் படுத்த திட்டமிட்டார். எனவே, இந்தியாவில் சரக்குப் போக்குவரத்தில் இருக்கும் சிரமங்கள், வாய்ப்புகளை மனதில்கொண்டு பெரிய சரக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டார் அவர்.
டெக்கன் ஏவியேஷனை விற்று வந்த பணத்தில் டெக்கன் 360 என ஒரு சரக்கு விமான சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனமும் நிதி நிலை மோசமாகி நொடிந்து போனது. அதன் பிறகு டெக்கன் ஷட்டில் என்கிற பெயரில் குஜராத்தின் அஹமதாபாத், சூரத், ஜாம்நகர், பாவ்நகர் கந்த்லா போன்ற நகரங்களுக்கு சார்ட்டர் விமானம் இயக்கினார். அந்த வியாபாரமும் நஷ்டமானது.
ஆனாலும் தோல்விகளால் துவண்டு விடுபவரல்லவே கேப்டன் கோபிநாத். மீண்டும் 2017ம் ஆண்டு, மத்திய அரசின் இந்திய நகரங்களை, விமான வழித் தடங்கள் வழியாக இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் 34 வழித் தடங்களில் விமானங்களை இயக்க அனுமதி பெற்றார். இந்த முறை ஏர் டெக்கன் என்கிற பெயரில் செயல்படத் துவங்கி இருக்கிறார்.

தன் வாழ்க்கையை, 2010ம் ஆண்டு ’Simply fly' ‘சிம்ப்ளி ஃபிளை’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக எழுதியிருக்கிறார் கோபிநாத். அதன் ஒவ்வொரு அத்தியாயங்களுமே, தன்னம்பிக்கை எனும் மையினால் உருவாக்கப்பட்டிருப்பதை படிப்பவர்களால் நிச்சயம் உணர முடியும். சிம்ப்ளி பிளை புத்தகத்தை படமாக்க பலரும் முயற்சி செய்தார்கள். கடைசியில் அது சூர்யா, சுதா கொங்கராவுக்குத்தான் வசமானது.
தன் சுயசரிதையின் இறுதியில், ஆல்ஃப்ரட் டென்னிஸனின் கவிதையை மேற்கோள் காட்டி தன்னைப் பற்றிச் சொல்லி இருக்கிறார் கோபிநாத். அதில்,
"பயணத்தில் இருந்து நான் ஓய்வுபெற முடியாது, வாழ்க்கையை கடைசி சொட்டுவரை பருகுவேன், தேடல்.. தாகம்.. கண்டடைதல்... விட்டுக் கொடுக்காமை, அதுவே நான். என் பயணம் முடிவுறாது," என்கிறார் கோபிநாத்.
புத்தகத்தில் மட்டுமல்ல, தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ‘என் பயணம் முடிவுறாது..’ என்பதை அழுத்தமாகச் சொல்லி வருகிறார்.
கோடீஸ்வரர்கள் அல்லது பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே புழங்கும், விமானச் சேவை வியாபாரத்தில், ஒரு குக்கிராமத்தில் பிறந்து, சரியான பண வசதியோ, வேறு எந்த அதிகாரப் பின்புலமோ இல்லாமல் தனக்கான தடத்தைப் பதித்தவர் கோபிநாத்.

சிம்பிள் ஃபிளை புத்தகத்தைத் தழுவி தான் சூரரைப் போற்று படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சூரரைப் போற்று என தலைப்பு வைத்தது ஏன் என இயக்குநர் சுதா அளித்துள்ள விளக்கத்தில்,
“பாரதியாரின் அச்சம் தவிர் கவிதைப்படி சூரன் என்றால் அறிவாளி, கற்றுத் தேர்ந்தவன் எனப் பொருள். அதன்படி பார்த்தால் இப்படத்திற்கு சூரரை போற்று டைட்டில் பொருத்தமாக தோன்றியது. மேலும் பலம் வாய்ந்த போட்டிகள் நிறைந்த துறையில் நுழைந்து, தனெக்கென தனி இடம்பிடித்து , தொழில்துறையில் சூரசம்ஹாரம் நிகழ்த்தியவரின் கதை என்பதாலும் இந்த டைட்டிலை வைக்க முடிவு செய்யப்பட்டது,” எனத் தெரிவித்துள்ளார்.
படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் அப்படியே கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்தவை அல்ல. ஆங்காங்கே சில சினிமாத்தனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும் ‘வானம் யார் வீட்டு அப்பன் சொத்தும் இல்லை’ என்பதை கோபிநாத் ஸ்டைலில் உரக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
சூரரைப் போற்றுவோம்...
- தமிழ்-திரைப்படம்
- Soorarai Pottru
- சூரரைப் போற்று
- amazon prime
- ஜி.ஆர்.கோபிநாத்
- ஏர் டெக்கான்
- SooraraiPottru
- சூர்யா நடிகர்
- Actor Surya
- Captain Gopinath
- +0
- +0