சமந்தா, விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு; பேஷன் பிராண்ட்கள் நிறுவிய தென்னிந்திய நட்சத்திரங்கள்!
நடிகை சமந்தா அண்மையில் சாகி எனும் பெயரில் சொந்த பேஷன் பிராண்டை அறிமுகம் செய்துள்ளார். அவருக்கும் முன்பு பிரபல தென்னிந்திய நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ள ப்ராண்ட்கள் ஒரு தொகுப்பு!
ஆடைகள் தேர்வில் அசத்தும் நடிகை சமந்த்தா அண்மையில் ‘சாகி’ (SAAKI) எனும் பெயரில் சொந்த பேஷன் பிராண்டை அறிமுகம் செய்துள்ளார். இந்த பிராண்ட் தான் யார் என்பதன் பிரதிபலிப்பாக அமைவதாக அவர் கூறியுள்ளார். தனது பேஷன் அனுபவத்தையும் அவர் உற்சாகமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
"சாகி என்னுடைய கனவு, பல மாதங்களாக என் மனதில் உருவான குழந்தை… பேஷன் மீதான எனது நேசம் மற்றும் எனது பயணத்தின் பிரதிபலிப்பு இது. நான் நடிப்புத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே, பேஷன்மிக்க மனிதர்கள் மற்றும் பத்திரிகைகளில் பார்க்கும் ஸ்டைல்களால் கவரப்பட்டேன். கல்லூரியில் படித்த காலத்தில், டிசைனர் ஆடைகளை வாங்க வசதியில்லாத நிலை எனக்கு நினைவில் உள்ளது. நடிக்கத்துவங்கிய பிறகு, திறமை வாய்ந்த பேஷன் கலைஞர்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகள் கழித்து என்னுடைய முத்திரை பதித்த ஆடைகளை அணிய முடிகிறது. இது உணர்வு மயமான பயணம். நீங்கள் என் மீது காட்டிய அன்பால் இந்த அளவு வந்திருக்கிறேன். இந்த மகிழ்ச்சியை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நட்பை உருவாக்குவதற்கான, என் வாழ்வை பகிர்வதற்கான, உங்களுக்கான பிரத்யேக தருணங்கள் உருவாக்கித்தருவதற்கும், எல்லாரும் இதுபோன்ற ஸ்டைலான ஆடைகளை மலிவான விலையில் வாங்கிட வாய்ப்பாகவும் சாகி அமையும்,” என்று சமந்தா இண்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோன், சோனம் கபூர், ஜான் ஆப்ரகாம், பிபாஷா பாசு போன்ற பல பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களுக்கான சொந்த பேஷன் பிராண்ட் வைத்துள்ள நிலையில், இந்த போக்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் மத்தியிலும் அறிமுகம் ஆகத்துவங்கியுள்ளது.
பேஷன் துறையில் நுழைந்துள்ள தென்னிந்திய நட்சத்திரங்கள் பட்டியல் வருமாறு:
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ‘தி ஹம்பில் கோ’:
ஆண்களுக்கான இந்த பிராண்ட், ஸ்வெட்ஷர்ட்ஸ், டீஷர்ட், பேண்ட் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. நேர்த்தியான ஸ்டைலுக்காக அறியப்படும் மகேஷ்பாபு,
”The Humbl Co பிராண்ட், என்னுடைய தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பாக அமைகிறது. இதன் மூலம், என்னுடைய ரசிகர்களுடனான பிணைப்பை வலுவாக்கிக் கொண்டு, அவர்கள் உண்மையாகவும், பணிவாகவும் வாழ ஊக்கம் அளிக்கிறேன்,” என்று மகேஷ் பாபு கூறியுள்ளார்.
காஜல் அகர்வால் மற்றும் நிஷா அகர்வாலின் Marsala:
இந்த சகோதரிகள் பிரிமியம் நகை பிராண்டை, தொழில்முனைவோர் சுப்ரியாவுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளனர். காதணிகள், மோதிரங்கள், கைக்காப்புகள் உள்ளிட்டவற்றை இந்த பிராண்ட் கொண்டுள்ளது.
அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவின் ‘RowdyWear':
அர்ஜுன் ரெட்டி இமேஜை அடிப்படையாகக் கொண்டு, விஜய் தேவர்கொண்டா இந்த பிராண்டை அறிமுகம் செய்தார். இதன் வீச்சை அதிகமாக்குவதற்காக ஆன்லைன் போர்டலான மிந்த்ராவுடன் இணைவதாகவும் அவர் பிப்ரவரி மாதம் அறிவித்தார்.
"இது சாமான்ய இளைஞனின் பேஷனுக்கானது. ரசிகர்கள் இதை மனதார வரவேற்றுள்ளனர். இதே போல ரெளடி வியர் காலணிகள், ஸ்லேட், பெல்ட் போன்றவற்றையும் அறிமுகம் செய்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
கெஜிஎப் நட்சத்திரம் யாஷ்-ன் ’Villain' :
அண்மையில் பியர்டோ பிராண்டுடன் இணைந்து ’Villain' எனும் வாழ்வியல் பிராண்டை அறிமுகம் செய்துள்ளார் யாஷ். வாசனை திரவியம், டி-ஷர்ட்கள் உள்ளிட்டவை இதில் உள்ளன. ராக்கி எனும் நெகட்டிவ் நாயகன் பாத்திரத்தில் கவர்ந்த யாஷ், 100 கையெழுத்திட்ட பொருட்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்.
காவ்யா மாதவனின் Laksyah:
Laksyah கலெக்ஷனில் புடவைகள், சல்வார்கள், அனார்கலிகள் உள்ளன. காவ்யா மற்றும் மம்தா மோகந்தாஸ் போன்ற பிரபலங்கள் அணிந்த ஆடைகளும் இந்த ப்ராண்டின் கீழ் விற்பனைக்கு உள்ளன.
தகவல் உதவி; இன்ஸ்டாகிராம் மற்றும் தி நியூஸ் மினிட்