இந்தியாவிற்கு வருகை தரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு என்ன தெரியுமா?
அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரமப் மற்றும் அவரின் மனைவிக்கு ஸ்பெஷலான குஜராத்தி உணவு வகைகள் தயாராகி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அவர் முதலில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையம் சென்று அதிபர் ட்ரம்பை வரவேற்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வருகையை ஒட்டு அவரை வரவேற்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மைதானத்திற்கு ட்ரம்ப் செல்ல உள்ளார். அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் உரையாற்ற உள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப், மெலினா ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ஃபார்சூன் லேண்ட்மார்க் ஹோட்டலில் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த உணவகத்தின் தலைமை சமையல் நிபுணர் சுரேஷ் கண்ணா சிறப்பு விருந்தினர்களுக்காக தயார் செய்யப்பட உள்ள உணவுப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
“அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலினா ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட உள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் குஜராத்தி உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. இதில் கமன், ஸ்பெஷல் குஜராத்தி இஞ்சி டீ, சோள சமோசா, ஐஸ் டீ, கிரீன் டீ, தானிய பிஸ்கெட்டுகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். இவற்றை துறை சார்ந்த அதிகாரிகள் அங்கீகரித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ட்ரம்பிற்கும் அவரது மனைவி மெலினா ட்ரம்பிற்கும் கமன் மிகவும் பிடிக்கும் என்பதால் ஸ்பெஷலாக தயார் செய்யப்படுகிறது. உணவு வகைகள் அனைத்தும் அதிகாரிகள் சரி பார்த்து சோதனை செய்த பின்னரே விருந்தினர்களுக்குப் பரிமாறப்படும்.