நறுமணச் செடிகளுடன் நுழைவாயில்; சப்தம் எழுப்பும் தாழ்வாரம் - பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளி!
பள்ளியின் நுழைவாயிலை அடைய பல நறுமணச்செடிகள் அதன் மணத்தினை பரப்பி உதவுகின்றன. ஸ்பெஷலான உயர அகலங்களுடன் அமைக்கப்பட்ட தாழ்வாரங்கள் எழுப்பும் எதிரொலி மாணவர்களை வழிநடத்துகிறது... இவ்வாறு பள்ளிக் கட்டிடத்தின் ஒவ்வொரு அங்கமும் பார்வையற்ற மாணவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையற்ற 12ம் வகுப்பு மாணவி அஞ்சலி, தினமும் தனது விடுதியில் இருந்து பார்வையற்றோர் பள்ளிக்கு சாலையின் குறுக்கே நடந்து செல்கிறார். ஆனால், அவருக்கு துணையாக வாக்கிங் ஸ்டிக்கோ இல்லை பிறரது உதவியோ தேவையில்லை. வழக்கமான மனிதர்களை போல் வெகு சுலபமாக அவரது பள்ளிக்கு நடந்து செல்கிறார். ஏனெனில், அஞ்சலி பள்ளியின் நுழைவாயிலை அடைய பல நறுமணச்செடிகள் அதன் மணத்தினை பரப்பி உதவுகின்றன.
ஸ்பெஷலான உயர அகலங்களுடன் அமைக்கப்பட்ட தாழ்வாரங்கள் எழுப்பும் எதிரொலி அஞ்சலியை வழிநடத்துகிறது. கரடுமுரடான பள்ளியின் வெளிப்புறச்சுவருக்கு மாறாக வகுப்பறையின் மென்மையான மற்றும் வழுவழுப்பான உட்புறச்சுவர், அஞ்சலி தொட்டு பார்த்து வகுப்பறைக்குள் நுழைய உதவுகிறது.... இவ்வாறு பள்ளிக் கட்டிடத்தின் ஒவ்வொரு அங்கமும் பார்வையற்ற மாணவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் காந்திநகரில் அமைந்துள்ள இந்தப் பள்ளியை, கட்டிடக்கலை நிறுவனமான
-ன் நிறுவனர் ஆனந்த் சோனேச்சாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒலி, மணம், மற்றும் தொடுதல் உதவியுடன் குழந்தைகள் கட்டிடத்தை சுற்றி வரும் வகையில் வடிவமைத்து, மாற்றத்தை விதைத்துள்ளார்.எங்கிருந்து தொடங்கியது இவை யாவும்?
2016ம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்தில் ஒரு திட்டத்தில் ஆனந்த் பணிபுரிந்த போது, பள்ளியின் கட்டிடத்தை மறுவடிவமைப்பு செய்வது குறித்து பள்ளியின் தலைவர் வீரேன் ஜோஷி அவரை அணுகினார். அது பார்வையற்றோர் சேவை சங்கத்திற்காக வழங்கப்பட்ட ஒரு செயலிழந்த ஆரம்பப் பள்ளியாகும். தரைத் தளத்தில் விடுதியும், முதல் தளத்தில் வகுப்பறைகளும் கொண்ட 2 மாடி கட்டிடம் மோசமான நிலையில் இருந்துள்ளது.
"முன்னதாக விடுதியின் ஒரு அறையிலே சுமார் 20 மாணவர்கள் ஒன்றாக தங்கியிருந்தனர். 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வெறும் 6 வகுப்பறைகள் மட்டுமே இருந்ததால், ஒரே அறையில் ஒரே நேரத்தில், இரண்டு வகுப்புகள் நடத்தபட வேண்டிய நிலை இருந்தது. அதனால், மாணவர்களுக்கு நிறைய இடையூறுகளை உருவாக்கியது."
இப்பகுதியை சுற்றியுள்ள தொலைதூர கிராமங்கள் மற்றும் நகரங்களை சேர்ந்த குழந்தைகள் இப்பள்ளியில் இலவசமாக கல்வி கற்கின்றனர். அதனால், அவர்களது நலன் கருதி படிப்பதற்கு அதிக இடம், வசதி மற்றும் சாதகமான சூழலை வழங்க நாங்கள் விரும்பினோம். பார்வையற்ற மாணவர்களுக்கு உதவும் வகையிலான பல்உணர்ச்சிக் கூறுகளைக் கொண்ட புதிய பள்ளியை நிறுவுவதுடன், தற்போதுள்ள கட்டிடத்தை விடுதி வசதியாக மாற்றவும் முடிவு எடுக்கப்பட்டது, என்று கூறினார் பார்வையற்ற குழந்தைகளுக்கான பள்ளியின் முதல்வர் ஜெந்திபாய் படேல்.
புதுமையான வடிவமைப்பின் செயல்முறை...
பார்வையற்ற மாணவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்காக ஆனந்த், மாணவர்களுடன் நேரத்தைச் செலவிட தொடங்கினார். மும்பையில் உள்ள பார்வையற்றோருக்கான விக்டோரியா நினைவுப் பள்ளி போன்ற பார்வையற்ற குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட பள்ளிகளுக்கு அவர் பயணம் செய்தார்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளியில் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வத் தொண்டு செய்துள்ள அவர், பார்வையற்ற குழந்தைகளுக்கான பள்ளியின் வடிவமைப்பில் அவர்களின் உதவியையும் நாடினார். கட்டிடத்திற்கான வரைப்படத்தை உருவாக்கும் போது, அவரது வடிவமைப்பு மாணவர்களுக்கு உகந்த வகையில் உள்ளதா என்பதை வரைப்பட உருவாக்கலின் போதே அறிந்து கொள்ள முடிவு செய்தார்.
அதற்காக தொட்டுணரக்கூடிய வரைபடத்தில் வகுப்பறை, தாழ்வாரம், முற்றம் என ஒவ்வொரு பகுதியையும் பிரெய்லியில் குறித்தார். வடிவமைப்பில் பணிபுரியும் போது, அவர் அட்டை மாதிரிகளை உருவாக்கினார். ஆனால், கட்டிடத்தின் உட்புறம் மற்றும் பிற விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள அம்முறை உதவாது என்பதை உணர்ந்தார். எனவே, அவர் விரிவான தொட்டுணரக்கூடிய வரைபடங்களை உருவாக்க ஒரு 3டி அச்சுப்பொறியைப் பயன்படுத்தினார்.
அதே போல், சுவர் பூச்சில் வித்தியாசம் காட்டி தொட்டுணர்ந்து மாணவர்கள் அடையாளம் கண்டுக்கொள்ளமுடியும் என்ற அவரது யோசனை சரியானது தானா என்பதையும் முன்பே பரிசோதனை செய்து கொண்டார். அதன்படி, வெவ்வேறு பூச்சுகளை மாணவர்களிடம் காட்டி பரிசோதித்துள்ளார். இன்னும் பல பரிசோதனைகளை வடிவமைப்பு கட்டத்திலே சரிசெய்த பின்னே, கட்டுமானப் பணிக்கு துவக்கியுள்ளார்.
ஒலி, சத்தம், தொடுதல் மூலம் இடத்தை உணர்தல்...
சுவர்களை தொட்டுக் கொண்டே நடக்கையில், அத்தொடுதலிலே இடத்தை அறியும்வண்ணம், சுவர்களுக்கு வெவ்வேறு பூச்சுகள் மூலம் இடத்தினை அடையாளம் காட்டியுள்ளார். அவ்வாறு, பள்ளியில் 5 வெவ்வேறு சுவர் பூச்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வகுப்பறையின் உட்புறச் சுவற்றில் மென்மையாகவும், வெளிப்புறம் சொறசொறப்பாக இருக்கும்படி சுவர் பூச்சு செய்துள்ளனர். அதே சமயம், ஒட்டுமொத்த கட்டிடத்தின் வெளிப்புற மேற்பரப்பும் திட்டு திட்டான மணல் சுவர்பூச்சு பூசப்பட்டுள்ளது.
வகுப்பறைகளுக்குள் தரைத்தளமானது கடினமான கோட்டா கல்லையும் பயன்படுத்தியும், மற்ற இடங்களில் மென்மையான கோட்டா கல்லும் போடப்பட்டுள்ளது. அதே போல், வகுப்பறைகளுக்கு செல்லும் வழியான தாழ்வாரங்கள் வெவ்வேறு உயரம் மற்றும் அகலம் கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, தாழ்வாரத்தின் நுழைவுப்பகுதி உயரமாகவும், 3.66 மீட்டர் அகலத்தைக் கொண்டுள்ளது, இது படிப்படியாக குறைந்து 2.26 மீட்டர் அகலமாகக் குறைகிறது. இந்த இடைவெளிகளில் உருவாகும் எதிரொலிக்கு ஏற்ப ஒலிகளும் சத்தங்களும் மாறுகின்றன. இது, குழந்தைகள் தாழ்வாரங்களில் செவிவழியாக நடந்து செல்ல உதவுகிறது.
"கதவுகள், பர்னிச்சர்கள் மற்றும் சுவிட்ச்போர்டுகளுக்கு வெவ்வேறு வண்ணங்களை பயன்படுத்தி வேறுப்படுத்தியுள்ளோம். குறைந்த பார்வைதிறன் கொண்ட மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும். உதாரணமாக, அனைத்து வகுப்பறை கதவுகளுக்கும் நீல நிறத்தையும், நுழைவு வாயிலுக்கு மஞ்சள் நிறத்தையும், சுவிட்ச்போர்டுகளுக்கு கருப்பு நிறத்தையும், மரச்சாமான்களுக்கு மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தையும் பயன்படுத்தியுள்ளோம். இந்த நிறங்கள் அனைத்தும் பள்ளியின் வெள்ளைச் சுவர்களுக்கு முரணாக இருப்பதால், பல விஷயங்களைக் கண்டறிய மாணவர்களுக்கு உதவுகின்றன," என்று கூறினார்.
கட்டிடத்தினுள் நேரடியாக வீசும் சூரிய ஒளிக் கதிர்கள் குறைந்த பார்வை கொண்ட மாணவர்களுக்கு கண்ணை கூசும் என்பதால், ஸ்கைலைட்கள் எனப்படும் கட்டிடத்தின் கூரைப்பகுதியில் ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடியை அமைத்தும் மற்றும் திறப்புகளையும் வடிவமைத்துள்ளார்.
அடுத்ததாக, மாணவர்கள் இயல்பாக பள்ளியில் வலம்வர, நுகர்தல் மூலம் என்னமாதிரியான வசதியை கொண்டு வரமுடியும் என்று சிந்தித்த அவர், சக இயற்கைக் கட்டிடக் கலைஞரான லோகேந்திர பலசாரியாவின் உதவியும் 37 வகையான 1,000க்கும் மேற்பட்ட தாவரங்களை பள்ளிவளாகம் முழுவதும் நட்டுவைத்துள்ளனர்.
இந்த நறுமணச் செடிகள் குழந்தைகளுக்கு வாசனையின் உதவியால் பள்ளிக்கு செல்ல உதவுவது மட்டுமல்லாமல், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பறவைகளை ஈர்க்கவும், நிழலை வழங்கவும் நடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கட்டிடத்தினுள் மாணவர்கள் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்வதற்காக பல விஷயங்களை வேறுப்படுத்தி செய்திருந்தாலும், மற்ற பள்ளிக் கட்டிடங்களிலிருந்து பார்வையற்றோருக்கான பள்ளிக்கு வேறுப்பட்டதாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக செயலாற்றியுள்ளார்.
"சில நுட்பமான கூறுகளுடன் அமைக்கப்பட்டிருந்தாலும் கட்டிடத்தின் அமைப்பு மற்ற பள்ளி கட்டிடங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகளில் இருந்து இப்பள்ளியை வேறுபடுத்தி காட்டக்கூடாது என்பதே எனது நோக்கம். மற்ற கட்டிடப்பணிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் பள்ளிக்கான கட்டிடமைப்பை மேற்கெள்வது தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது. பார்வையற்ற மாணவர்களுக்கு உகந்த இதுபோன்ற பள்ளிகள் வெறு எங்குமில்லை என்று நினைக்கிறேன். ஆனால், இதுபோன்ற பள்ளிகள் அமைப்பதற்கு மாறாக இந்த கூறுகள் அனைத்தும் சாதாரண பள்ளிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் சேர்க்கப்பட வேண்டும்," என்று கூறிமுடித்தார்.
பார்வையற்ற குழந்தைகளுக்கு கல்வி ஒளி கொடுக்கும் இளம் மென்பொறியாளர் கோமதி!