மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்யம் உருவாக்கிய எஸ்.ஆர்.எம் குழுமத்தின் வெற்றிக்கதை!
யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து உடன் நடத்திய சிறப்பு நேர்காணல்...
பெரியளவில் பின்புலம் ஏதுமின்றி ஒரு குறிப்பிட்ட துறையில் கால்பதித்து மிகப்பெரிய வணிகத்தை உருவாக்கியுள்ள தொழில்முனைவோர் பலரது வெற்றிக்கதைகளை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் ஆரம்பத்தில் ட்யூஷன் செண்டராக துவங்கப்பட்டு பள்ளி, டுடோரியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி என எஸ்.ஆர்.எம் குழுமம் பல்வேறு நிலைகளைக் கடந்து மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்யமாக உருவாகியுள்ளது.
கல்வித்துறை மட்டுமின்றி கட்டுமானம், போக்குவரத்து, விருந்தோம்பல், மருந்து என பல்வேறு துறைகளில் செயல்பாடுகளை விரிவடையச் செய்ததுடன் வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகிறது.
யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடனான நேர்காணலில் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் வெற்றிக்கதை குறித்து அதன் தலைவர் ரவி பச்சமுத்து பகிர்ந்துகொண்டார். அந்த நேர்காணலின் தொகுப்பு இதோ:
ஷ்ரத்தா ஷர்மா: உங்களது வளர்ச்சி குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்?
ரவி பச்சமுத்து: வளர்ச்சி குறித்து பேசவேண்டுமானால் என்னுடைய அப்பாவைப் பற்றி பகிர்ந்துகொள்ளவேண்டும். பொறியியல் படிக்கவேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. ஆனால் குடும்பத்தின் நிதிச்சூழல் காரணமாக அவரால் படிக்கமுடியவில்லை. எனவே திருச்சியில் முதலில் பிஎஸ்சி படித்தார். பின்னர் சென்னையில் பொறியியல் படித்தார். திருவேற்காடு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சிஎன் பாலிடெக்னிக்கில் பணிபுரிந்தார்.
சென்னையில் ட்யூஷன் செண்டர் நடத்தினார். அது பள்ளியாக மாறியது. பின்னர் பள்ளி டுடோரியலாக மாறியது. டுடோரியல் பாலிடெக்னிக்காக உருவானது. பாலிடெக்னிக்கில் இருந்து பொறியியல் கல்லூரியாக மாறியது.
ஷ்ரத்தா ஷர்மா: உங்கள் அப்பா உங்களை மருத்துவக் கல்லூரியைத் திறக்குமாறு அறிவுறுத்தியது குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்?
ரவி பச்சமுத்து: என் அப்பா 1982-ம் ஆண்டு பாலிடெக்னிக் துவங்கினார். 1983, 1984 ஆண்டுகளில் நான் மெல்ல அப்பாவின் செயல்பாடுகளில் என்னை இணைத்துக் கொண்டேன். முதலில் முழுநேரமாக என்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. சுமார் ஆறேழு ஆண்டுகள் அப்பா அறிவுறுத்தும் பணிகளை மட்டுமே செய்து பயிற்சி பெற்றுக்கொண்டேன். நாம் ஈடுபடும் பணி சரியா, தவறா என்பது குறித்து கவலைகொள்ளக்கூடாது என்பார். துணிந்து சுயமாக முடிவெடுக்கும் தைரியத்தை எனக்கு வழங்கினார்.
“நீ ஒன்றை உருவாக்கினால் அது முழுமையாக உன் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைக்காதே. தொழில்முறை வல்லுநர்களிடம் அதை ஒப்படைக்கவேண்டும். அவர்கள் சிறப்பாக நிர்வகிப்பார்கள். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நாம் தலையிட்டு தீர்வுகாண்போம்,” என்பார்.
ஷ்ரத்தா ஷர்மா: நீங்கள் தொடர்ந்து பலவற்றில் ஈடுபடுகிறீர்கள். உங்களைத் தொடர்ந்து செயல்படவைப்பது எது?
ரவி பச்சமுத்து: நாம் தொடர்ந்து செயல்படுவோம். வழியில் ஏற்படும் பிரச்சனைகளை அவ்வப்போது கையாள்வோம் என்று நான் பலரிடம் குறிப்பிடுவதுண்டு. ஈடுபடும் பணிகளை நிச்சயம் திட்டமிடுவோம். இருப்பினும் அதிகளவு கற்பனைகளை அதில் புகுத்துவதில்லை. செயல்பாடுகள் அனைத்தையும் எளிமையாக்க முயற்சிப்போம். சரியான நபரைத் தேர்வு செய்து ஒப்படைத்து உடன் பயணிப்பதே எங்களது அணுகுமுறையாக இருந்தது.
ஷ்ரத்தா ஷர்மா: எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளீர்கள். சமீபத்தில் ரோபோடிக் உதவியுடன் முழங்கால் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இத்தகைய நவீன முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்?
ரவி பச்சமுத்து: காட்டாங்குளத்தூரில் எங்களது மருத்துவமனை ஒன்று உள்ளது. அது 1,000 படுக்கை வசதி கொண்டது. இரண்டாவது மருத்துவமனை திருச்சியில் உள்ளது. அது சுமார் 750-800 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை. ஏழை மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவதையும் மருத்துவர்கள் நடந்துகொள்ளும் முறையையும் கவனித்துள்ளேன். கார்ப்பரேட் மருத்துவமனைகளுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பேன். அங்கு பின்பற்றப்படும் நுட்பங்களை பயிற்சி மருத்துவமனைகளில் கடைப்பிடிக்க முயற்சித்தேன். ஆனால் அதில் வெற்றியடையவில்லை. அதன் பின்னரே கார்ப்பரேட் மருத்துவமனையைத் துவங்கலாம் என முடிவெடுத்தோம்.
பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகள் வணீக ரீதியாகவே செயல்பட்டது. ஆனால் நாங்கள் கார்ப்பரேட், இன்ஸ்டிட்யூட் என இருவேறு கான்செப்டுகள் ஒன்றிணைக்கப்பட்ட மருத்துவமனையை உருவாக்க நினைத்தோம். இவ்வாறு உருவானதுதான் சிம்ஸ் மருத்துவமனை.
என்னுடைய அனுபவத்தில் பயிற்சி மருத்துவர்கள் சரியான ஆலோசனைகளை வழங்குவார்கள். ஏனெனில் நீங்கள் அதே மருத்துவரிடம் திரும்ப வருவீர்களா என்பது குறித்த கவலை அவர்களுக்கு இருக்காது. ஆனால் சில சமயம் சில கார்ப்பரேட் மருத்துவமனைகளில் அவர்களது முதலீட்டைத் திரும்பப்பெறும் நோக்கத்திற்காக சில அனாவசியமான செயல்முறைகளுக்கு நோயாளிகளை உட்படுத்துவார்கள். எனவேதான் இத்தகைய ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க விரும்பினேன்.
எங்கள் மருத்துவர்களிடையே போட்டி நிலவுவதில்லை. இதய நோய் சிகிச்சைக்காக ஒரு நோயாளி எங்கள் மருத்துவமனைக்கு வரும்போது அந்தப் பிரிவில் 10 மருத்துவர்கள் இருப்பினும் அந்த நோயாளி மூலம் கிடைத்த வருவாய் அனைத்து மருத்துவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதால் போட்டி இருப்பதில்லை.
இன்று மருத்துவ சாதனங்கள் விலையுயர்ந்ததாக உள்ளது. எனவே மருத்துவமனைகள் அதிக முதலீடு செய்வதால் அவற்றை திரும்பப்பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. நல்ல மருத்துவனைக்கு வருகை தந்து குறைவான கட்டணத்துடன் அறுவை சிகிச்சை செய்யும் நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
நோயாளிகள் செய்யும் தவறு என்னவெனில் ஒரு சில குறிப்பிட்ட மருத்துவர்கள் மட்டுமே அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்று வலியுறுத்தும்போது அவருக்கான தேவை அதிகமாகி சிகிச்சைக்கான கட்டணமும் அதிகமாகிவிடுகிறது. எங்கள் மருத்துவமனையில் நீங்களே மருத்துவரை தேர்வு செய்து கொண்டு குறைவான கட்டணத்தில் மருத்துவ சேவைகளைப் பெறலாம்.
ஷ்ரத்தா ஷர்மா: அனைவரும் அணுகும் வகையிலும் அதேசமயம் லாபகரமாகவும் எவ்வாறு மருத்துவமனையை நடத்துகிறீர்கள்?
ரவி பச்சமுத்து: நாங்கள் அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக மருத்துவம் செய்வதில்லை. ஏழை மக்களை பயிற்சி மருத்துவமனையில் இலவச சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு அனுப்புகிறோம். அதேசமயம் கார்ப்பரேட் அமைப்புடன்கூடிய மருத்துவமனையில் அதிகப்படியான கட்டணங்களை நோயாளிகளுக்கு விதிக்காமல் தேவையான கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறோம்.
ஷ்ரத்தா ஷர்மா: உங்கள் கல்லூரியில் ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து பணிபுரியும் திட்டங்கள் உள்ளதா?
ரவி பச்சமுத்து: காட்டாங்குளத்தூரில் இருக்கும் எங்களது முக்கிய நிறுவனம் ஏற்கெனவே பிரபலமாகியுள்ளது. அதன் நடவடிக்கைகளை மாற்றத்தை ஏற்படுத்தினால் சிக்கல்கள் ஏற்படும் என்பதற்காக ஹரியானா பல்கலைக்கழகத்தைத் துவங்கினோம். சோனிப்பெட் மற்றும் அமராவதியில் தனியாக இரண்டு பல்கலைக்கழகங்களை வெவ்வேறு கலாச்சாரத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அங்கு ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கிறோம். தொழில்துறைகளோட இணைக்கப்பட்ட பாடதிட்டங்களை வழங்குகிறோம்.
ஷ்ரத்தா ஷர்மா: நீங்கள் அதிக நன்கொடைகள் வழங்கி வருகிறீர்கள். இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது பலருக்கு உதவி செய்துள்ளீர்கள். அது குறித்து சொல்லுங்கள்.
ரவி பச்சமுத்து: ஏழை மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சீட் இலவசமாக வழங்கப்படுகிறது. சுனாமி, கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களின்போது மாணவர்களின் கல்வி கட்டணங்களைத் தள்ளுபடி செய்து விடுகிறோம்.
ஷ்ரத்தா ஷர்மா: இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ரவி பச்சமுத்து: அனைத்தும் எனக்கு சொந்தம் என்கிற கண்ணோட்டத்தில் நான் எதையும் பார்ப்பதில்லை. நான் சில கடமைகளை நிறைவேற்றும்பொருட்டு கடவுள் என்னை படைத்துள்ளார். அவற்றை நான் செய்து முடிக்கிறேன் அவ்வளவே.
ஷ்ரத்தா ஷர்மா: அதிக பணம் ஈட்டுவது, புதிய வணிகங்களை உருவாக்குவது, அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது, இவற்றில் எது உங்களை அதிக உற்சாகமூட்டுகிறது?
ரவி பச்சமுத்து: நான் என் வாழ்க்கையில் போதுமான பணம், பதவி, அதிகாரம் போன்றவற்றைப் பார்த்துவிட்டேன். நான் முழுமையாக சேவையில் ஈடுபடுகிறேன் என சொல்லமாட்டேன். ஆனால் ஒவ்வொரு நாளும் என்னைப் பரபரப்பாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
நான் ஈடுபடும் ஒவ்வொரு துறையிலும் அதற்கேற்றவாறு என்னை மாற்றிக்கொண்டு செயல்படுகிறேன். அப்போதுதான் அனைவருடனும் ஒன்றிணைய முடியும். கடந்த காலம் குறித்தோ வருங்காலம் குறித்தோ கவலைகொள்ளாமல் அந்த தருணத்தில் செய்யும் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்கிறேன்.