ஐ.ஏ.எஸ் தேர்வில் 5ம் இடம் பிடித்த ஸ்ருஷ்டியின் வெற்றி ரகசியம்...
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான, ஸ்ருஷ்டி ஜெயந்த தேஷ்முக், ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த காலத்தில், சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து வெளியேறியதாக கூறியிருக்கிறார். இணையத்தை தேர்வுக்காக தயாராக மட்டுமே பயன்படுத்தியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
23 வயதான ஸ்ருஷ்டி, அண்மையில் அறிவிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளில் 5வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அது மட்டுமல்ல, பெண் போட்டியாளர்களில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் வசிக்கும் ஸ்ருஷ்டி, சிறு வயதில் இருந்தே ஐ.ஏ.எஸ் ஆகும் கனவில் இருந்திருக்கிறார். அவரது தந்தை ஒரு பொறியாளர். தாய் ஒரு பள்ளி ஆசிரியை.
பள்ளிப் படிப்பை முடித்ததும் கெமிகல் இஞ்சினியர் படிப்பில் தேர்ச்சி பெற்ற ஸ்ருஷ்டி, தனது முதல் கனவான ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதை முழுமூச்சாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார். அதன் பயனாக, 2018 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
ஐ.ஏ.எஸ் தேர்வில் ஐந்தாம் இடம் பிடித்து வெற்றி பெற்றது தொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் பேசும் போது,
”சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்தேன். இணையத்தை படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தினேன். ஆன்லைன் தேர்வுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உதவியாக இருந்தன,” என்று கூறியுள்ளார்.
சிறு வயதில் இருந்தே ஐ.ஏ.எஸ் ஆகும் கனவு இருந்ததாக கூறிய அவர், நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளை படித்து நாட்டு நடப்புகளை தெரிந்து வைத்திருந்ததாக கூறுகிறார்.
சீராகப் படிப்பது மற்றும் தங்கள் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பது இலக்கை அடைய உதவும் என்றும் அவர் உற்சாகமாக கூறியுள்ளார். இதன் பயனாக அவர் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.
“ஸ்ருஷ்டி ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது, வேலை வாய்ப்பு பாதுகாப்பிற்காக பொறியியல் படிக்கச் சொன்னேன். ஸ்ருஷ்டி அசாதரணமான மாணவி இல்லை என்றாலும், கடினமாக உழைக்கக் கூடியவர். பேச்சுப் போட்டி போன்றவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்திருக்கிறார்,” என்கிறார் அவரது தந்தை ஜெயந்த் தேஷ்முக்.
தகவல் மற்றும் படங்கள் உதவி: ஹிந்துஸ்டான் டைம்ஸ்