தொழில் வளர்ச்சிக்கு சமூக ஊடகங்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய 7 உத்திகள்!
வர்த்தகங்களுக்கு சிறந்த பலன் அளிக்கக் கூடிய சமூக ஊடக சந்தைப்படுத்தல் உத்திகளை பார்க்கலாம்.
நீங்கள் சிறிய நிறுவனத்தை நிர்வகித்தாலும் சரி, பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பொறுப்பு வகித்தாலும் சரி, உங்கள் வர்த்தகத்திற்கு வலுவான சமூக ஊடக அம்சம் தேவை. பிராண்ட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், வாடிக்கையாளர்களை உங்கள் வர்த்தகம் நோக்கி ஈர்ப்பதிலும் சமூக ஊடகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.
தற்போதைய சூழலில், பிராண்ட்கள் தனித்துவம் மிக்க, லேசான சர்ச்சைக்குறிய எண்ணங்கள் கவனத்தை ஈர்க்க பயன்படுத்துகின்றன. இதனிடையே, பல பிராண்ட்கள் வெகுஜன ஊடகங்களில் வழக்கமான உத்திகளில் கவனம் செலுத்துகின்றன. எந்த ஊடகமாக இருந்தாலும் அதற்கான உத்தி தான் முக்கியம்.
![சமூக ஊடகம்](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Imageciv4-1599195172918.jpg?fm=png&auto=format)
உங்கள் இலக்கு
சமூக ஊடக சந்தைப்படுத்தல் முயற்சி தோல்வி அடைவதற்கான முக்கியக் காரணம், செயல்திறன் மிக்க உத்தி இல்லாதது தான். பெரும்பாலான நிறுவனங்கள் அதிக செயல்திறன் பெறுவதற்கான திட்டமிட்ட வரைப்படத்தை பின்பற்றுவதில்லை. மாறாக, அவை கவனத்தை ஈர்ப்பதற்காக கண்மூடித்தனமான பாதையில் செல்கின்றன.
முதலில், உங்கள் இலக்கு என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கீழ் கண்ட முக்கிய அம்சங்களை கவனியுங்கள்.
- உங்கள் இலக்கிற்கு உகந்த சமூக ஊடகம் எது?
- நீங்கள் தேவையான வர்த்தகத் தகவல்களை அளித்துள்ளீர்களா?
- வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களை கொண்ட சமூக ஊடகம் எது?
- இந்த சேவைகளில், நீங்கள் எப்படி சிறப்பாக செயல்பட்டு போட்டியாளர்களை மிஞ்ச முடியும்?
இதை அடையக்கூடிய, நடைமுறை சார்ந்த இலக்குகளை கொண்ட நீண்ட பயணம் இது என நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இலக்குகள், பட்ஜெட் மற்றும் காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் பரப்பு
இ-காமர்ஸ் வர்த்தகங்கள் ஆன்லைன் மூலமே விற்பனையை அடைவதால், அதிக வாடிக்கையாளர்களை சென்றடைவது முக்கியம். முதலில் இணையதளத்தை நோக்கி போக்குவரத்தை கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். அதன் பிறகு, மதிப்பு, நம்பகத்தன்மை மூலம் வலுவான வாடிக்கையாளர் பரப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
”நீங்கள் ஒரு இணையதளத்தை அமைத்துவிட்டு, அதை நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் நீங்கள் வெற்றி பெ,ற வேண்டும் எனில் தளத்திற்கு ட்ராபிக்கை உருவாக்க வேண்டும்” என வால்மார்ட் சி.இ.ஓ ஜோயல் ஆண்டர்சன் கூறுகிறார்.
உங்களை பின் தொடர்பவர்கள், உங்கள் உள்ளடக்கத்தால் ஈர்க்கப்படுவது நல்ல அறிகுறியாகும். இவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உங்கள் சார்பில் பரிந்துரைக்கலாம்.
போட்டியாளர்களை கவனிக்கவும்
உங்கள் போட்டியாளர்களுக்கு வெற்றியைத்தருவது உங்களுக்கும் வெற்றியைத்தரலாம். அவர்களுடைய சமூக ஊடக உத்திகளை அலசிப்பாருங்கள். இந்த ஆய்வு சந்தையின் நிலை பற்றிய புரிதலை ஏற்படுத்தி, இலக்கு வாடிக்கையாளர்களை சென்றடைய வழியை காண்பிக்கும். இதற்காக போட்டியாளர்களின் ஆய்வு அளவுகோள்கள் தேவைப்படலாம்.
ஒரு உத்தியில் கவனம் செலுத்தவும். பல உத்திகளை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். ஆனால், எண்ணங்களை திருடுவதற்கு பதிலாக ஊக்கம் பெற்று சுயமாக செயல்பட வேண்டும்.
ஆய்வு தேவை
உங்கள் முயற்சி சரியான திசையில் அமைந்துள்ளதா? விளம்பரம் மற்றும் உள்ளடக்கத்தில் போதிய கவனம் செலுத்தியுள்ளீர்களா?
முறையான ஆய்வு இல்லாமல், கற்பனைகள் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்து உத்திகளை வகுக்க வேண்டாம். சரியான ஆய்வு அடிப்படையில் உங்கள் துறைக்கு ஏற்ற உத்தியை அடையாளம் காணவும்.
உங்கள் திட்டம் எத்தனை பெரிதாக இருந்தாலும் சரி, உங்கள் சமூக ஊடக உத்தி கண்காணிக்கப்பட வேண்டும். உங்களை பின் தொடர்பவர்கள் உள்ளடக்கத்தை விரும்பினாலும், அதனால் விற்பனை ஏற்படவில்லை எனில் எந்த பயனும் இல்லை. எனவே வாடிக்கையாளர்கள் ஈடுபாடு, கிளிக் செயல்பாட்டு ஆகியவற்றை கண்காணிப்பது முக்கியம்.
உள்ளடக்கம்
உங்கள் சமூக ஊடக உத்தி, வலுவான உள்ளடக்கத்தை சார்ந்திருக்கிறது. ஆர்வத்தை தூண்டும், தனித்தன்மையான உள்ளடக்கத்திற்கு மதிப்பு அதிகம். உங்கள் வசீகரத்துடன் இணைந்த வகையில் உங்கள் பிராண்ட் சார்ந்த ஈடுபாடு மிக்க உள்ளடக்கத்தை உருவாக்கவும்.
கீவேர்டு மற்றும் போக்குகள் சார்ந்த செயல்திறன் வாய்ந்த அணுகுமுறையை கண்காணிப்பது கடினமாக இருந்தாலும், அதிக பலன் தரக்கூடியதாகும். அதிக மதிப்பு கொண்ட, தாக்கம் நிறைந்த உள்ளடக்கத்தை வழங்கினால், உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வரலாம்.
மாறுபட்ட உத்தி
உங்கள் போதாமைகளை அறிவதில் கவனம் செலுத்தவும். உங்கள் உள்ளடக்கம் மற்றும் விளம்பரம் ஏன் எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை என ஆய்வு செய்யவும். துறை சார்ந்த கீவேர்டுகள் மற்றும் பிரபலமான ஹாஷ்டேகில் கவனம் செலுத்தினால் பலன் கிடைக்கும் என்றாலும், மிகை விளம்பரம் பிராண்டை பாதிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
சமூக ஊடகங்கள் தினமும் 3.2 பில்லியன் காட்சிகளை நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது. உங்கள் சமூக ஊடக உத்தியை தீர்மானிக்கும் போது, ஒவ்வொரு பதிவுக்கும் வாடிக்கையாளர் எதிர்வினை மாறுபடும். உங்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப மாறுபட்ட வழிகளை பின்பற்ற வேண்டும்.
முடிவு
சமூக ஊடக போக்குகள் மாறிக்கொண்டே இருப்பதால் உங்கள் உத்திகளும் அதற்கேற்ப மாற வேண்டும். தொடர் பரிசோதனைகள் மூலம், எந்த உத்தி பலன் அளிக்கிறது என கண்டறியலாம். புதிய சேனல்களை முயன்று பார்க்க தயங்க வேண்டாம்.
தமிழில்: சைபர்சிம்மன்