(ஸ்டார்ட் அப் பாரத்) - ஒருங்கிணைந்த உயிரி எரிபொருள் மேடையாக உருவாகும் கோவை ஸ்டார்ட் அப் Buyofuel
கோவையைச்சேர்ந்த உயிரி எரிபொருள் ஸ்டார்ட் அப் நிறுவனமான பய்யோபியல் (Buyofuel) மூலப்பொருள் திரட்டிகள், உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்கள், கழிவு உற்பத்தியாளர்கள் ஆகியோரை இணைக்கும் மேடையாக விளங்குகிறது.
இந்தியாவில் உயிரி எரிபொருள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 2019ல் அரசு உயிரி எரிபொருள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குனரக உரிமம் பெற்றே இறக்குமதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியா எரிசக்தி உற்பத்திக்கான கழிவுகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
சரியான வழிகாட்டி கொள்கை வாயிலாக, உயிரி எரிபொருள் சார்ந்த வர்த்தகத்தை துவக்குவதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்தது. கோவையைச் சேர்ந்த ’பய்யோபியல்’ (
) இத்தகைய நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.2020 மே மாதம், கிஷன் கருணாகரன், வெங்கடேஸ்வரன் செல்வன், பிரசாத் நாயர் மற்றும் சுமந்த் ஆகியோரால் துவக்கப்பட்ட Buyofuel எரிச்கதி உற்பத்திக்கான கழிவுகள் மற்றும் உயிரி எரிபொருளுக்கான ஒற்றை மேடையாக திகழ்கிறது. மூலப்பொருள் சேகரிப்பாளர்கள், உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்கள், நுகர்வோர், கழிவு உற்பத்தியாளர்களை ஒரே மேடையில் இணைக்கிறது.
துவக்கம்
“உயிரி எரிபொருள்கள் ஒரு போதும் மைய கவனத்திற்கு வந்ததில்லை. ஏனெனில் இதில் கண்டறிதல் பிரச்சனை மற்றும் பிளவுபட்ட விநியோகம் இருந்தது,” என்கிறார் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கிஷன் கருணாகரன்.
கழிவு உற்பத்தி ஆதாரங்கள் மற்றும் உயிரி எரிபொருள் உற்பத்தியாளர் இரு தரப்பினருமே பிரிந்து கிடக்கின்றனர்.
சிறு மற்றும் நடுத்தர உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்கள் அனைவருமே அங்கும் இங்குமாக இருப்பதோடு, நுகர்வோருக்கான அணுகல் இல்லாமல் உள்ளனர். இது மிகப்பெரிய வாய்ப்பாகும். இதே போல, கழிவு உற்பத்தி ஆதாரங்களை அறிவதும் சிக்கலாக இருக்கிறது.
”மூன்றாவது மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தியாளர் மற்றும் நிகர எரிசக்தி இறக்குமதியாளராக இந்தியா இருப்பதை மீறி, படிம எரிபொருள் மீதான சார்பை பெருமளவில் குறைக்க முடியவில்லை,” என்கிறார் கிஷன்.
2026ல், இந்தியா 20 சதவீத பிலெண்டட் பெட்ரோல் விற்பனையை இலக்காகக் கொண்டுள்ளது, இப்போது, எத்தனால் பிலெண்டிங் 9.77 சதவீதமாக இருக்கிறது.
எத்தனால், பயோடீசல், பயோ கேஸ் ஆகியவை உயிரி எரிபொருள் வகைகளாகும். எத்தனால், பல வகையான பயன்பாடுகளை கொண்டுள்ளது.
கோவை குழு
கோவையைச்சேர்ந்த இந்நிறுவனம் 38 பேர் கொண்டு குழுவை பெற்றுள்ளது. 4 பேர் தொழில்நுட்ப பிரிவில் உள்ளனர். 30 பேர் செயல்பாடு பிரிவில் உள்ளனர்.
உயிரி எரிபொருள் தொழில்முனைவோராக 12 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட கிஷன், டிஎம்,என் பயோபியல் ஆலையை தமிழ்நாட்டில் அமைத்துள்ளார். அதே நேரத்தில் அவர் சி.ஓ.ஓ பிரசாத்தை சந்தித்தார். அவர் சமையல் எண்ணெய்யை பயோடீசலாக மாற்றுவதில் ஈடுபட்டிருந்தார்.
சி.டி.ஓ வெங்கட் செல்வன் சிறு தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல்மயமாக்கலில் எட்டு ஆண்டு அனுபவம் உள்ளவர். சி.எம்.ஓ சுமந்த் குமார், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் எட்டு ஆண்டு அனுபவம் கொண்டவர்.
செயல்பாடுகள்
இந்தத் துறையின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் Buyofuel நிறுவனர்கள் படிம எரிபொருள்களுக்கு மாற்றாக பலவகையான உயிரி எரிபொருள் வாங்குவதை எளிதாக்குவதற்காக கண்டறிதல் மேடையை உருவாக்க தீர்மானித்தனர்.
விசாரணை, ஆர்டர் மற்றும் டெலிவரி ஆகிய அனைத்தையும் இந்த மேடையில் சாத்தியமாக்க விரும்பினர்.
இந்த ஸ்டார்ட் அப், வாடிக்கையாளர்கள் எளிதாக தரமான எரிபொருளை கண்டறிந்து வாங்க வழி செய்கிறது. நிறுவனர்கள் தொடர்பு மூலம் 2020 ஆகஸ்ட்டில் முதல் விற்பனையை நிகழ்த்திய நிறுவனம், 2021 ஜனவரியில் அனைவருக்கும் சேவையை துவக்கியது.
அதன் பிறகு, இந்நிறுவனம் 23,000 டன் உயிரி எரிபொருளை விற்பனை செய்துள்ளதாக கிஷன் கூறுகிறார். 2022 ஏப்ரலில், அதிகபட்சமாக 10000 டன் மற்றும் மார்ச் காலாண்டில் 7,000 டன் விற்பனையை நிறுவனம் பெற்றது.
“பெரிய அளவில் வாங்குபவர்களுக்கு தேர்ந்தெடுத்தவற்றை அளிக்கும் சந்தையாக விளங்குகிறோம். ஏனெனில், இவர்கள் பல்வேறு வெண்டர்களுடன் பதிவு செய்வது அல்லது பலவகை சிறிய உற்பத்தியாளர்களை தொடர்பு கொள்வது போன்ற சிக்கல்களை விரும்புவதில்லை,” என்கிறார் கிஷன்.
இந்த சந்தையில் உள்ள அதிக தேவை மற்றும் சப்ளை இத்தகைய சிறப்பு சந்தைக்கான வாய்ப்பை அளிக்கிறது என்கிறார்.
நிறுவனம் ஒவ்வொரு பதிவையும் சரி பார்க்கிறது. நேரடி டெலிவரி வழங்கி வர்த்தகத்தை எளிதாக்குகிறது. 50 சதவீத வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வருவதாக கிஷன் கூறுகிறார்.
நிறுவனம் பயன்பாட்டிற்கு ஏற்ற பரிவர்த்தனை கட்டணமாக, கிலோ திரவத்திற்கு 5 பைசா, கிலோ பிரிக்கேட்டிற்கு 15 பைசா மற்று பொருட்களுக்கு கிலோவுக்கு 10 பைசா என வசூலிக்கிறது. உள்ளூர் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் துவங்கிய நிலையில், நிறுவனம் தற்போது 1,000 பயனாளிகள், 450 கழிவு உற்பத்தியாளர்கள், 200 உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்கள், 350 வாடிக்கையாளர்கள் எனக்கொண்டுள்ளது. குஜராத், கோவா, கர்நாடகம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ளனர்.
மேலும், 80 சதவீத பயனாளிகள் முதல் முறை டிஜிட்டல் பயனாளிகள் மற்றும் 20 சதவீதம் வர்த்தக வாடிக்கையாளர்கள், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி, ராம்கோ சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்தியாமார்ட், ஜஸ்ட்டயல் மற்றும் பயோபியல்சர்கிள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நிறுவனம் இன்பெக்ஷன் பிரைம் வென்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.1.6 கோடி நிதி திரட்டியது. அடுத்த ஆறு மாதங்களில் அடுத்த சுற்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்திய நிலக்கரி அமைச்சக தகவல்படி, இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 6.27 சதவீதம் அதிகரித்து 777.26 மெட்ரிக் டன்னான உள்ளது. 2020 நிதியாண்டில் இது 715.99 மெட்ரிக் டன்னாக இருந்தது.
இதே போல, நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி, 2022 மார்ச் மாதம் 35 சதவீதம் அதிகரித்தது. 2021 மார்ச்சில் இது 3.12 சதவீதமாக இருந்தது. உலகில் இந்தியா இரண்டாவது பெரிய நிலக்கரி நுகர்வு நாடாக உள்ளது. சீனாவுடன் சேர்ந்து, மூன்றில் இரண்டு பங்கு நுகர்வை கொண்டுள்ளது.
2021 ஏப்ரல் மாதம் முதல், 2022 மார்ச் மாதம் வரை, இந்தியா 20.27 பில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலிய பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதாக பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வு செல் தெரிவிகிறது.
“இது மிகப்பெரிய வாய்ப்பாகும். இதில் ஐந்து முதல் பத்து சதவீதத்தை எங்கள் மேடை மூலம் பதிலீடு செய்ய முடிந்தால் கூட மிகப்பெரிய எண்ணிக்கையாக இருக்கும்,”என்கிறார் கிஷான்.
“இந்தியாவின் தற்போதைய எரிசக்தி நெருக்கடி, நிலக்கரி இறக்குமதி சார்பு மற்றும் நிலக்கரி சப்ளை சிக்கல்களால் உண்டானது என்கிறார்.
இந்திய உற்பத்தியாளர்களிடம் இருந்து உயிரி எரிபொருளை தருவிக்க உதவுதன் மூலம், மிகப்பெரிய எரிபொருள் வாடிக்கையாளர்கள் மாற்று எரிபொருளுக்கு மாற வழி செய்வதாகவும் கூறுகிறார்.
ஆங்கிலத்தில்: ஐஸ்வர்யா லட்சுமி | தமிழில்: சைபர் சிம்மன்