‘செல்லப் பிராணிகளுக்கும் ஆரோக்கிய உணவு தேவையே’ - TABPS Pets தொடங்கிய கோவை தம்பதி!
பிரபு காந்திகுமார், பிருந்தா பிரபு தம்பதி தொடங்கியுள்ள, கோயமுத்தூரைச் சேர்ந்த TABPS Pets ஸ்டார்ட் அப் ஆயுர்வேதத்தைக் கொண்டு செல்லப்பிராணிகளுக்கான உணவு மற்றும் பராமரிப்புப் பொருட்களை வழங்கி வருகிறது.
கோயமுத்தூரைச் சேர்ந்தவர்கள் பிரபு காந்திகுமார், பிருந்தா பிரபு தம்பதி. இவர்களுக்கு சின்ன வயதிலிருந்தே செல்லப் பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்கும்.
செல்லப்பிராணிகளுக்கு எந்த மாதிரி உணவு கொடுக்கலாம் என்கிற சந்தேகம் எல்லோருக்குமே இருக்குமல்லவா? அப்படித்தான் இவர்களது நண்பர்களுக்கும் இருந்துள்ளது. இதைப் பற்றி இந்தத் தம்பதியிடம் பலர் கேட்டிருக்கிறார்கள்.
இப்படித்தான் இவர்கள் செல்லப்பிராணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவு பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினார்கள். இந்த ஆய்வு இவர்களுக்கு பல விஷயங்களைப் புரியவைத்துள்ளது. அதுவே, தொழில் முயற்சியாகவும் மாறியுள்ளது.
இந்தியாவில் செல்லப்பிராணிகளுக்கான உணவு சந்தையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை இவர்களது ஆய்வு உணர்த்தியது.
செல்லப்பிராணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகின்றன. தயாரிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பின்னரே இங்கு வந்தடைகின்றன. இதனால் இதிலுள்ள சத்துக்கள் அழிந்துவிடுகின்றன. அதுமட்டுமல்ல இறக்குமதி செய்யப்படும் இந்தத் தயாரிப்புகள் இந்தியாவில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு ஏற்றதாக இருப்பதில்லை.
ஆரோக்கியத்திற்காக கொடுக்கப்படும் உணவே ஆரோக்கியத்தை கெடுத்து சருமப் பிரச்சனைகள், ஒவ்வாமை, கல்லீரல் பாதிப்பு, எதிர்ப்பு சக்தி குறைபாடு என ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.
செல்லப்பிராணிகளுக்கு ஆயுர்வேதத்தில் தீர்வு
2021ம் ஆண்டு பிரபு, பிருந்தா இருவரும் சௌம்யா மாலினி, அருண் முகர்ஜி ஆகியோரை இணை நிறுவனர்களாக இணைத்துக்கொண்டு
தொடங்கினார்கள். கோவையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் செல்லப்பிராணிகளுக்கான உணவு வகைகளை வழங்குகிறது. இது ஆயுர்வேதம் சார்ந்த உணவு என்பது இதன் சிறப்பம்சம்.நிறுவனர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்ததை அடுத்து சூப்பர் ப்ரீமியம் பிரிவில் FiloMilo என்கிற பிராண்டின்கீழ் நாய்களுக்கான பிஸ்கெட் வழங்கும் முயற்சியில் களமிறங்கினார்கள்.
“சந்தையில் கிடைக்கும் பிராண்டுகள் தரமானதாக இருப்பதில்லை. அதில் எந்த ஊட்டச்சத்தும் இருப்பதில்லை. நாய்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்கு ஆயுர்வேதம் பலனளிக்கும் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம்,” என்கிறார் பிரபு.
ஆயுர்வேத பிராமி பொடி நாய்களின் நரம்பியல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இதனால் அவற்றிற்கு எளிதாகப் பயிற்சியளிக்க முடியும். இந்த பிராமி பொடி, கால்சியல், சிக்கன் போன்றவற்றைக் கொண்டு TABPS பிஸ்கட்களைத் தயாரிக்கிறது.
அதுமட்டுமல்ல, நாயின் சருமம், முடி போன்றவற்றையும் மேம்படுத்துகிறது. நாயின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் இந்த பிஸ்கட்கள் கிலோ 350 ரூபாய் என்கிற விலையில் கிடைக்கின்றன.
“எங்கள் பிராண்ட் பிஸ்கட்களை சாப்பிட ஆரம்பித்த நாய்கள் மற்ற பிராண்டுகளை எடுத்துக்கொள்வதில்லை,” என்று பிரவு காந்திகுமார் குறிப்பிடுகிறார்.
நாய்களுக்கு மட்டுமல்லாமல் பூனைகளுக்கான தயாரிப்புகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது. வேம்பு, செம்பருத்தி, கற்றாழை போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இரண்டு ஷாம்பூ வகைகளை இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.
“குழந்தைகளுக்கு நாம் பயன்படுத்தும் ஷாம்பூக்கள் எப்படி மிருதுவானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஷாம்பூக்களை நாங்கள் வழங்குகிறோம்,” என்கிறார்.
பட்ஜெட் பிரிவு
கொரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு செல்லப்பிராணிகளை தத்தெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் TABPS Pets சந்தை வாய்ப்பும் விரிவடைந்திருக்கிறது.
லேப்ரடார் நாயின் பராமரிப்பு செலவு 6 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். இவ்வளவு அதிக தொகையை பலரால் செலவிட முடியாது. எனவே, இந்தத் தம்பதி தனியாக Purple Tail என்கிற பிராண்டை உருவாக்கி வருகிறார்கள். இந்த முயற்சி இன்னமும் பரிசோதனை கட்டத்திலேயே இருக்கிறது.
செல்லப்பிராணிகளுக்காக குறைந்த விலையில் ஷாம்பூக்களை சாஷே வடிவில் வழங்கவும் இந்த ஸ்டார்ட்அப் விரும்புகிறது.
கால்நடை மருத்துவர்கள் மாடு, ஆடு, கோழி போன்ற விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளில் அதிகம் அக்கறை காட்டுகிறார்கள். நாய்கள், பூனைகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
இந்த தம்பதி பல்வேறு கால்நடை மருத்துவர்களை சந்தித்துப் பேசினார்கள். அப்போது இவர்களுக்கு தெளிவு கிடைத்துள்ளது. சோளத்திற்கு பதிலாக கேழ்வரகு பயன்படுத்தலாம் என்றும் சிக்கன், மீன் போன்ற புரோட்டீன் சத்துக்களை செல்லப்பிராணிகளின் உணவில் சேர்க்கலாம் என்றும் பல மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர்.
TABPS Pets குழுவில் ஊட்டச்சத்து நிபுணர்கள், உணவு தொழில்நுட்பவியலாளர்கள் என ஒரு ஆய்வுக் குழுவே பணியாற்றுகிறது. 10 பேர் கொண்ட குழுவாக செயல்படும் இவர்கள் செல்லப்பிராணிகளுக்கு கொடுப்பதற்கான வெவ்வேறு உணவுகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், ஆயுர்வேத உட்பொருட்களைக் கொண்ட ஒரு ஊட்டச்சத்து பொடியை அறிமுகப்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதை எளிதாக செல்லப்பிராணிகளின் உணவில் கலந்து கொடுத்துவிடலாம்.
இந்நிறுவனம் தயாரிப்பு தொடர்பான பல்வேறு செயல்முறைகளை அவுட்சோர்ஸ் செய்கிறது.
நாய்கள் மற்றும் பூனைகளின் உணவு வகை மாறுபடும் என்பதால் இதுகுறித்து ஆய்வு அவசியம் என பிரபு விவரிக்கிறார்.
“நாய் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடும். ஆனால் பூனைக்கு குறைந்தது 12 முறை உணவு அவசியம்,” என்கிறார்.
சந்தை விவரம்
TABPS Pets தமிழகத்திலும் கேரளாவிலும் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 390-க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் கிடைக்கின்றன. திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் செல்லப்பிராணிகளுக்காக மீண்டும் மீண்டும் வாங்குவதைப் பார்க்கமுடிகிறது என்கிறார் பிரபு.
ஆஃப்லனில் ஸ்டோர்களில் மட்டுமல்லாது அமேசான் போன்ற சந்தைப்பகுதிகளிலும் டி2சி முறையில் நேரடியாக வாடிக்கையாளர்களிடமும் இந்த ஸ்டார்ட் அப் விற்பனை செய்கிறது.
ஒவ்வொரு மாதமும் 45-50 சதவீதம் வருவாய் அதிகரித்து வருவதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
தென்கிழக்கு ஆசியப் பகுதிகள், மத்தியக் கிழக்கு பகுதிகள் என தொடங்கி ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே சுயநிதியில் இயங்கி வரும் TABPS Pets இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏஞ்சல் முதலீட்டாளர் குழுவிடமிருந்து 4 கோடி ரூபாய் சீட் நிதி பெற்றுள்ளது.
”பலர் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். தரமான உணவை தங்கள் செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கவேண்டும் என்றே அனைவரும் நினைக்கிறார்கள். இவர்களுக்கு தரமான தயாரிப்புகளை வழங்கி சந்தையில் எங்களை நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறோம்,” என்கிறார் பிரபு.
ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா பூஜரி | தமிழில்: ஸ்ரீவித்யா