‘கிலோ அளவில் பிரியாணி’ - 4 ஆண்டில் ரூ.48 கோடி ஈட்டும் ‘பிரியாணி பை கிலோ’
2015-ம் ஆண்டு தொடங்கிய ‘பிரியாணி பை கிலோ’ அடுத்த 4 ஆண்டுகளில் 150-க்கும் அதிகமான அவுட்லெட்களுடனும் 500கோடி இலக்கை நோக்கி பயணிக்கிறது.
இந்தியாவில் பிரியாணி பிரியர்கள் அதிகம். இங்கு ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 95 பிரியாணி ஆர்டர்கள் செய்யப்படுவதாக (அல்லது ஒரு விநாடிக்கு 1.6 பிரியாணி) 2019-ம் ஆண்டு ஸ்விக்கியின் ஆண்டு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
உணவுத் துறையில் தொழில்நுட்ப செயல்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில், பலர் விரும்பி உண்ணும் இந்த உணவு வகையின் எதிர்காலம் க்ளௌட் கிச்சனான இருக்கும் என்பதை கௌசிக் ராய், விஷால் ஜிந்தால் இருவரும் உணர்ந்தனர். இவ்விருவரும் 2015-ம் ஆண்டு ‘பிரியாணி பை கிலோ' (Biryani by Kilo-BBK) என்கிற உணவு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பைத் தொடங்கினார்கள். உலகளாவிய பிராண்டை உருவாக்கவேண்டும் என்பதே குருகிராமைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
அப்போதிருந்து இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க வகையில் வருவாய் ஈட்டி வருகிறது. நிதியாண்டு 2016ல் 86 லட்ச ரூபாயாக இருந்த வருவாய் 2020 நிதியாண்டில் 48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தனித்துவம்
மற்ற உணவகங்கள் போன்று ‘பிரியாணி பை கிலோ’ பிரியாணி வகைகளை மொத்தமாகத் தயாரிப்பதில்லை. ஒவ்வொரு தனிப்பட்ட ஆர்டருக்கும் ஃப்ரெஷ்ஷாக பிரியாணியை ‘தம்’ செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இதன் தனித்துவம்.
அதுமட்டுமின்றி சிறந்த பிரியாணி அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக மாசாலாக்கள் முறையாக கலக்கப்பட்டு நறுமணத்துடன் கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் இந்நிறுவனம் செய்கிறது. அதாவது ஒவ்வொரு ஆர்டருடனும் மண் அடுப்பு அனுப்பி வைக்கப்பட்டு சூடாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
பிபிகே நிறுவனம் பிரியாணி மட்டுமின்றி கெபாப், கோர்மா, ஃபிர்னி போன்றவற்றையும் டெலிவர் செய்கிறது. ஒவ்வொரு முறையும் ஃப்ரெஷ்ஷாக பிரியாணி தயாரிக்கும் திட்டம் சிறப்பாக பலனளித்தது.
“பிரியாணி இந்தியாவின் பாரம்பரியமிக்கது. ஹைதராபாத், லக்னோ, பெங்கால் என பல வகைகளில் கிடைக்கும் பிரியாணி முழுமையான உணவு. தற்சமயம் இந்தியாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட நகரங்களில் கிட்டத்தட்ட 40 அவுட்லெட்களுடன் பிபிகே செயல்பட்டு வருகிறது. நாங்கள் விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறோம்,” என்றார் கௌஷிக்.
இந்த ஸ்டார்ட் அப் அப்போதிருந்து ஒவ்வொரு நகரிலும் அரிசி, இறைச்சி, காய்கறிகள், மசாலாக்கள் ஆகியவற்றை வாங்கும் பணியையும் தொழில்நுட்பத்தையும் சீரமைத்து வருகிறது. 100-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
இந்த விற்பனையாளர்கள் அவுட்லெட் விற்பனை குறித்த தகவல்களை வழங்குவார்கள். இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பிராண்ட் தேவையான பொருட்களை மட்டும் வாங்குகிறது. இதனால் அளவுக்கதிகமாக இருப்பு வைக்கப்படுவதும் தவிர்க்கப்படுகிறது.
அடுத்த மூன்றாண்டுகளில் வளர்ச்சியடைய இதே முறையைப் பின்பற்ற நிறுவனர்கள் தீர்மானித்துள்ளனர். ஸ்விக்கி, ஜொமேட்டோ போன்ற தளங்களுடன் இணைந்து செயல்படும் அதேநேரம் தங்களது சொந்த தளத்திலும் விற்பனை செய்யவேண்டும் என்பதே இந்நிறுவனர்களின் திட்டம். நிறுவனத்தின் செயல்பாடுகள் லாபகரமாக இருப்பதாக பிபிகே தெரிவிக்கிறது.
பிபிகே சிறந்த நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி), தொழில்நுட்பம், செயல்பாட்டு திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் உலகத் தரம் வாய்ந்த உணவு மற்றும் பானங்கள் நிறுவனமாக வளர்ச்சியடைய முடிந்தது என்கிறார் கௌசிக்.
கௌசிக் 1997ம் ஆண்டு பீட்சா எக்ஸ்பிரஸில் பணிபுரியத் தொடங்கினார். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு Zooropa Foods சிஓஓ ஆனார். விஷால் Vector, Bharatiya போன்ற தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு Carpediem Capital Partners நிறுவினார்.
விஷால் ஜிந்தால் ஐஐடி-பிஹெச்யூ-வில் பொறியியல் படிப்பும் நியூயார்க் சிராகஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ-வும் முடித்தார். இவர் பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கியதுடன் Carpediem Capital Partners இணை நிறுவனராகவும் இருந்தார்.
விஷால், கௌசிக் இருவருக்கும் தரமான பிரியாணி மற்றும் கெபாப் சங்கிலித் தொடர் நிறுவனத்தை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் எண்ணம் தோன்றியது. நிலையான இயக்க நடைமுறைகள், அமைப்பு மற்றும் செயல்முறைகள், தரப்படுத்துதல், பயிற்சிகள், தணிக்கைகள் ஆகியவற்றுடன் தரமான சேவையை வழங்க விரும்பினார்கள்.
இவ்விருவரும் இதுவரை பிரியாணி ஸ்டார்ட் அப்’பில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். 1000 பேர் அடங்கிய குழுவாக செயல்படும் இந்நிறுவனம் 2019ம் ஆண்டு திரட்டிய இந்தத் தொகையை டெல்லியில் அதன் செயல்பாடுகளை சீரமைக்கப் பயன்படுத்திக்கொண்டது.
கொரோனா வைரஸ் தாக்கம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் மக்கள் உணவகங்களுக்கு வருவதில்லை. இதனால் உணவு தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட 30 சதவீத சிறு உணவகங்கள் செயல்படாமல் போக வாய்ப்புள்ளது.
எனினும் கோவிட்-19 தங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்கின்றனர் பிபிகே நிறுவனர்கள்.
“சுகாதாரமான முறையில் உணவுத் தயாரிக்கும் நம்பகமான பெரிய பிராண்டை மக்கள் விரும்புவார்கள். பிரியாணி பை கிலோ சுகாதாரத்தை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதுடன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது,” என்றார் கௌசிக்.
இந்தக் கருத்தை ஆமோதிக்கும் விஷால், “ஊரடங்கு தளர்த்தப்பட்டு உணவு அவுட்லெட்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பிபிகே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுகாதாரம், பாதுகாப்பு, தகவல் தொடர்பு போன்றவற்றில் பிபிகே சிறப்பு கவனம் செலுத்துவதால் விரைவில் அனைத்து பகுதிகளிலும் சூழல் மாறும் என்று நம்புகிறோம்,” என்றார்.
இந்நிறுவனம் தரப்படுத்துதல், தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை வலுப்படுத்துவதில் தற்போது முதலீடு செய்து வருகிறது. ஊழியர்கள் வளர்ச்சியிலும் பிபிகே கவனம் செலுத்துகிறது.
“உணவு டெலிவரியில் கவனம் செலுத்துவதால் செலவுகளைக் குறைத்து விரைவாக வளர்ச்சியடைவோம். தற்போதைய நெருக்கடியான சூழலிலும் அமெரிக்காவில் டொமினோஸ் விற்பனை அதிகரித்துள்ளது,” என்கின்றனர் நிறுவனர்கள்.
சவால்கள் மற்றும் திட்டங்கள்
தரப்படுத்துவதும் உணவின் தரத்தை நிலைத்திருக்கச் செய்வதும் ஆரம்பகட்ட சவால்களாக இருந்தன. பணியமர்த்துவது, பயிற்சி, ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வது போன்றவை இந்நிறுவனம் சந்தித்த மற்ற சவால்கள்.
எனினும் இந்நிறுவனம் அதன் வலைதளம், செயலி, கால் செண்டர், ஜொமேட்டோ/ஸ்விக்கி போன்றவற்றில் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை கையாளும் வகையில் விநியோகச் சங்கிலியை அமைப்பதில் கவனம் செலுத்தியது.
இந்தியாவில் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யும் முறை அதிகரிக்கும் என்றும் இந்தச் சந்தை 25-30 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 2022-ம் ஆண்டில் 7.5 – 8 பில்லியன் டாலரை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக கூகுள் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் பிரியாணி சந்தை ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தையில் 1,500 கோடி ரூபாயாகவும் ஒழுங்குப்படுத்தப்படாத சந்தையில் 15,000 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்படுவதாக பிபிகே தெரிவிக்கிறது.
இந்த ஸ்டார்ட் அப் 20 நகரங்களில் 40 அவுட்லெட்களுடன் செயல்படுகிறது. 2021 நிதியாண்டிற்கான இதன் வருடாந்திர வருவாய் சுமார் 70-80 கோடி ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வருங்காலத் திட்டம்
அடுத்த 18 மாதங்களில் இந்தியா முழுவதும் 70-80 அவுட்லெட்களுடன் செயல்பட்டு 150-200 கோடி ரூபாயாக வருவாயை அதிகரிப்பதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி அடுத்த நான்காண்டுகளில் பிபிகே இந்தியா முழுவதும் 150-க்கும் அதிகமான அவுட்களுடன் செயல்படவும் சர்வதேச அளவில் விரிவடையவும் திட்டமிட்டுள்ளது. 500 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை அடுத்த நான்காண்டுகளில் எட்ட இந்நிறுவனர்கள் விரும்புகின்றனர்.
வருங்காலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்நிறுவனர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பிரியாணி பிரிவிற்கும் உணவு டெலிவரி பிரிவிற்கும் அதிகளவில் வாய்ப்பிருப்பதாகவே இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இரண்டிலும் விரிவடைந்து உலகளவிலான உணவுச் சேவையை வழங்கும் இந்திய நிறுவனமாக வளர்ச்சியடைய விரும்புகின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: ஸ்ரீவித்யா