நல்ல தூக்கம் தரும் மெத்தைகள்: 3 ஆண்டுகளில் ரூ.114 கோடி வருவாய் ஈட்டிய 'Wakefit'
2016 ல் துவங்கிய பெங்களூருவைச்சேர்ந்த ’வேக்ஃபிட்’ தனது மெத்தை, தலையணைகள் மூலம் ஆரோக்கியமான தூக்கத்தை முன் வைத்து, ஆன்லைன் விற்பனையில் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது.
கடினமான நாளுக்குப்பிறகு, சுகமான மெத்தையில் படுத்துத் தூங்குவது இதம் அளிக்கும். இதைத் தான் ஸ்டார்ட் அப் நிறுவனமான ’வேக்ஃபிட்’ (Wakefit) செய்து வருகிறது.
தூங்குவதற்கு ஏற்ற படுக்கும் முறைக்கு உதவும் வகையில் ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட வேக்ஃபிட் மெத்தைகள் 2016ல் அறிமுகம் செய்யப்பட்டன. முதல் மாதத்தில் இருந்து லாபம் கண்டு வருவதாக கூறும் வேக்ஃபிட், தனது ஆண்டு வருவாயில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
முதல் நிதியாண்டில், ரூ.6.7 கோடி வருவாய் ஈட்டிய நிறுவனம் அடுத்த நிதியாண்டில் ரூ.22.6 கோடி வருவாய் ஈட்டியது. 2019 நிதியாண்டியில் ரூ.80 கோடி வருவாய் ஈட்டியதாக கூறும் நிறுவனம், 2020 நிதியாண்டில் 3 மடங்கு வளர்ச்சியுடன் ரூ.240 கோடி ஈட்ட தயாராகி வருகிறது.
அங்கித் கார்க் மற்றும் சைத்ன்யா ராமலிங்கேகவுடா ஆகியோரால் துவங்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த வேக்ஃபிட், தனது மூலப்பொருட்களை ஐரோப்பா, மத்திய கிழக்கில் இருந்து தருவித்து, மெம்மரி போன் மெத்தைகளை விற்பனை செய்கிறது. நாடு முழுவதும் 4.5 லட்சம் யூனிட்களை டெலிவரி செய்திருப்பதாக நிறுவனம் குறிப்பிடுகிறது. தற்போது நிறுவனத்தின் மாத வருவாய் ரூ.8 முதல் 9 கோடியாக இருக்கிறது.
எளிய துவக்கம்
ஐஐடி ரூர்கேலாவில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த அங்கித் (30) பெங்களூருவைச் சேர்ந்த டாப்சோ, ஸ்டார்ட் அப்பில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, தனது ஸ்டார்ட் அப்பிற்கான ஆய்வை துவங்கினார். Wakefit துவக்குவதற்கு முன், மெத்தைகளை வாங்கி அமேசான் தளம் மூலம் விற்பனை செய்தார். இதன் மூலம் ரூ.60 லட்சம் லாபம் கிடைத்தது.
ஆனால் அங்கித் மேம்பட்ட மெத்தைகளை உருவாக்க விரும்பி, 2016 ல் வேக்ஃபிட் நிறுவனத்தை துவக்கினார். டேப்சோவில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சைதன்யா ராமலின்கே கவுடாவுடன் இணைந்து நிறுவனத்தை துவக்கினார். இருவரும் தங்கள் சேமிப்பு ரூ.18 லட்சத்தை துவக்கமாக கொண்டனர். இ-காமரஸ் பிரபலமாகி இருக்கும் நிலையில், ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் சந்தை புதுமைக்கு தயாராக இருப்பதாக கருதுகின்றனர்.
“இணைய பயன்பாட்டாளர்கள் எங்கள் முதல் வாடிக்கையாளர்களாக இருந்தனர். முதல் 100 டெலிவரியின் போது வீடுகளுக்குச் சென்று கருத்தறிய வீடியோ நேர்காணல் எடுத்தோம்,” என்று ஆரம்ப நாட்கள் பற்றி அங்கித் கூறுகிறார்.
இந்த கருத்துகள், நீடித்தத் தன்மை, அழகியல், பேக்கேஜ் உள்ளிட்ட அமசங்களில் மெத்தைகளை எப்படி மேம்படுத்தலாம் என உணர்த்தின. மேலும் பலவிதமான உடல் நிலை மற்றும் வயதானவர்களுக்கான மெத்தைகள் குறித்தும் உணர்த்தின.
இன்று, வேக்ஃபிட் அமேசானில் அதிகம் விற்பனையாகும் மெத்தை பிரிவில் உள்ளது. அர்பன் லேடர் மற்றும் பெப்பர்பிரை விற்பதைவிட அதிகம் விற்பதாக நிறுவனம் கூறுகிறது.
அங்கித் தங்கள் ஆலையின் பரப்பு 3,000 சதுர அடியில் இருந்து தற்போது 70,000 சதுர அடியாக அதிகரித்திருப்பதாக கூறுகிறார். புனே, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் வேர்ஹவுஸ்களை கொண்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள், மேலும் 6 வேர்ஹவுஸ்களை அமைக்க உள்ளது.
ரொக்க கவலை இல்லை
வேக்ஃபிட் தரத்தை உறுதி செய்ய தனது மூலப்பொருட்களை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்கிறது. பெங்களூருவில் உற்பத்தி நடைபெறுகிறது. தர சோதனை ஐரோப்பாவில் நடைபெறுகிறது. ஃபோமுக்கான சான்றிதழ் பெற்றுள்ளனர். மெத்தையின் பயன்படுத்தப்படும் ரசாயனங்களும், இதற்கான கிரீன்கார்டு சான்றிதழ் பெற்றுள்ளது. நிறுவனம் தனது லாபத்தை ஜெர்மனி உற்பத்தி இயந்திரத்தில் முதலீடு செய்திருப்பதால், செலவு குறைந்து செயல்திறன் அதிகரித்துள்ளது. ஆனால், ரொக்க கவலை இனியும் இல்லை என்கிறார் அன்கித்.
“தொழிலாலர் செலவை குறைத்து செயல்திறனை அதிகமாக்கியுள்ளோம். வாடிக்கையாளரை பெறுவதற்கான செலவு ரூ.800-900 ஆக இருக்கிறது என்றால் சராசரி விற்பனை அளவு ரூ.11,000 ஆக இருக்கிறது. எனவே ரொக்கப் பிரச்சனை இல்லை,” என்கிறார் அங்கித்.
மேலும் இடைத்தரகர்கள் இல்லாததால், போட்டியாளர்களை விட 50 சதவீதம் குறைவான விலையில் விற்க முடிவதாக தெரிவிக்கிறார். வேக்ஃபிட் மாதம், 7500 முதல் 9,000 மெத்தைகள் வரை விற்பனை செய்கிறது. லடாக், ஜம்மூ காஷ்மீர் முதல் இந்தியா முழுவதும் டெலிவரி செய்கிறது. டிஜிட்டல் முறையில் மார்க்கெட்டிங் செய்கிறது.
வாடிக்கையாளர் அனுபவம்
வாடிக்கையாளர் எதிர்பார்ப்பு தொடர்பான வேக்ஃபிட் ஆய்வு மூலம் நிறைய அறிந்து கொண்டுள்ளது. உதாரணமாக, 48 சதவீதம் பேர் முதுகு வலி கொண்டிருப்பதாக கூறியதையும், 80 சதவீதம் பேர் வாரத்தில் சில நாட்கள் பணியிடத்தில் தூக்கமாக உணர்வதையும் ஆய்வு மூலம் தெரிந்து கொண்டுள்ளது.
தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண, வேக்ஃபிட் இதற்கான அம்சங்களை மெத்தையில் சேர்த்தது. கோடைக்காலத்தில் குளிர்ச்சி அளிப்பதற்காக, ஓபன் செல் அமைப்பு கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. அதிக அடர்த்தி ஃபோம், இதம் அளிப்பதாகவும் கூறுகிறது. அதன் மெம்மரி ஃபோம் வலி நிவாரணம் அளிப்பதாகவும் கூறுகிறது.
மேலும் தற்கால தலைமுறையினர் வாடகைக்கு எடுப்பதை விரும்புவதால், ஆன்லைன் பர்னீச்சர்களுடன் மெத்தையை வாடகைக்கு அளிப்பதாகவும் தெரிவிக்கிறது.
ஆன்லைனில் கவனம்
வாழ்வியல் சார்ந்த இ-காமர்ஸ் நிறுவனங்களில், எக்ஸ்பிரியன்ஸ் செண்டர் எனப்படும் நேரடி அனுபவ மையங்களை அமைக்கும் போக்கு காணப்படுகிறது. பெப்பர்பிரை, அர்பன்லேடர் மற்றும் வேக்ஃபிட்டின் நேரடி போட்டியாளரான சன்டே மேட்ரஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்புகளை நேரடியாக தொட்டு பார்த்து உணர வழி செய்யும் விற்பனை மையங்களை கொண்டுள்ளன.
ஆனால் வேக்ஃபிட் இதில் இருந்து மாறுபடுகிறது.
“பலரும் குறிப்பாக பெண்கள், பலர் முன்னிலையில் மெத்தையில் படுத்து பார்ப்பதை விரும்புவதில்லை. மேலும் மெத்தையை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அது வசதியாக இருப்பதை உணர முடியும். அதனால் தான் நாங்கள் 100 நாளில் திரும்பப் பெறும் விற்பனை வசதியை தருகிறோம்,’ என்கிறார் அங்கித்.
ஆரம்ப காலத்தில் அணியை உருவாக்குவது நிறுவனத்திற்கு சவாலாக இருந்தது. ”எல்லாவற்றையும் நாங்களே செய்வது கடினமாக இருந்தது. சரியான நபர்களை சரியான நேரத்தில் கண்டறிந்தோம். நேரடி பரிந்துரை மற்றும் லிங்க்டுஇன் மூலம் கண்டறிந்தோம்,” என்கிறார் அங்கித்.
இன்று நிறுவனம் 120 பேர் கொண்டு அணியை பெற்றுள்ளது. இவர்கள் தூக்க வல்லுனர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். ஊழியர்கள் எண்ணிக்கையை 20 சதவீதம் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
wakefit தற்போது, மெம்மரி ஃபோம், டுவல் கம்பர்ட் ஆகிய மெத்தைகள், தலையணைகள், படுக்கை விரிப்பு ஆகியவற்றை அளிக்கிறது. விரைவில் கர்ப கால தலையணை. நர்சிங் தலையணை, திரைச்சீலைகள் உள்ளிட்ட ரகங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இ-காமர்ஸ் துறையில் கையகப்படுத்தல் வழக்கமாக இருக்கிறது. என்றாலும், வேக்ஃபிட் தனியே செயல்படுவதை விரும்புகிறது. அண்மையில் நிறுவனம், செக்கோயா கேபிட்டல் நிறுவனத்திடம் இருந்து ஏ சுற்று நிதியாக ரூ.65 கோடி திரட்டியது.
ஆங்கில கட்டுரையாளர்: ஆதிரா நாயர், அபூர்வா.பி | தமிழில்: சைபர்சிம்மன்