சொந்த ஊரிலும் ஜெயிக்கலாம்: நெல்லை மண்ணில் லட்சங்களில் ஈட்டும் ப்ராண்ட் மார்கெட்டிங் ஆனந்த்!

திருநெல்வேலியில் அதிகமான தொழில்கள் இருக்கின்றன, அதிக வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் நெல்லை தொழில் நகரம் அல்ல, என நிலவிவரும் மாயையை உடைக்கவே நான் எனது நிறுவனத்தை திருநெல்வேலியில் தொடங்கினேன் என்கிறார்.

சொந்த ஊரிலும் ஜெயிக்கலாம்: நெல்லை மண்ணில் லட்சங்களில் ஈட்டும் ப்ராண்ட் மார்கெட்டிங் ஆனந்த்!

Wednesday September 30, 2020,

3 min Read

வியாபாரம் செய்து வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் சென்னை போன்ற பெரு நகரங்களுக்குத்தான் போகவேண்டுமா சொந்த ஊரான தன் சிறு நகரத்திலேயே, தான் விரும்பிய துறையில் வெற்றி பெற முடியாதா என்ற சர்ச்சைக்குரிய கேள்விக்குத்தான் தன் வாழ்க்கையையே விடையாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆனந்த்.


எந்த ஓர் தொழிலை தொடங்கினாலும், அதில் முழு வெற்றியடைய பல்வேறு யுக்திகளை கையாள வேண்டுயுள்ளது. அதில் முக்கியமானது தான் இந்த பிராண்ட் மார்க்கெட்டிங் துறை. இவர் இத்துறையில் தடம் பதித்தபோது, இவரது நண்பர்கள், உறவினர்கள் என பலரும் இத்துறையில் வெற்றி பெற ஏற்ற இடம் இதுவல்ல. அதற்கெல்லாம் சென்னை போன்ற பெரு நகரங்களுக்குத்தான் போகவேண்டும் என பல்வேறு கருத்துக்களை கூறியபோதும், நான் பிறந்த என் மண்ணிலேயே நான் ஜெயித்துக் காட்டுகிறேன் என துணிந்து களமிறங்கி இன்று வெற்றி பெற்றும் காட்டியிருக்கிறார் ஆனந்த்.


இதுகுறித்து ஆனந்த நம்மிடம் தெரிவித்ததாவது, நான் 2009ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தேன். புத்தக விற்பனை, ஈவென்ட் மேனேஜ்மென்ட், கல்வி பயிற்சி நிறுவனம் என பல்வேறு துறைகளில் இறங்கி, அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றேன்.

“நான் இறங்கிய அனைத்து துறைகளிலும் வெற்றி பெற என்ன காரணம் என நான் சிந்தித்தபோதுதான் நான் மேற்கொண்ட பிராண்ட் மார்க்கெட்டிங் தொழில்நுட்பமே எனது வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பது தெரியவந்தது,” என்கிறார்.

இதையடுத்து, தனது புதிய தொழிலான பிராண்ட் மார்க்கெட்டிங்கை, தனது சொந்த ஊரான திருநெல்வேலியிலேயே தொடங்கியுள்ளார் ஆனந்த்.

ஆனந்த்

ஆனந்த எஸ்பி, நிறுவனர் மற்றும் சிஇஒ Axsus

2016ஆம் ஆண்டில் ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கிய நிறுவனமே Axsus ஆகும். ஆண்டுக்கு ரூ.3 முதல் 5 லட்சம் வரை வருவாய் ஈட்டித் தரும் இந்நிறுவனத்தின் கடந்தாண்டு டர்ன்ஓவர் மட்டும் ரூ. 10 லட்சமாகும்.

இத்தகைய லாபகரமான தொழிலான இந்த பிராண்டு மார்க்கெட்டிங்குக்கு ஏன் திருநெல்வேலி போன்ற பகுதிகளில் வரவேற்பு இல்லை என அவர் ஆராய்ந்தபோதுதான், இங்குள்ள தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் அனைவரும் பரம்பரை பரம்பரையாகவே ஓர் தொழிலை மேற்கொண்டு வருவதும், இவர்கள் தங்கள் தயாரிப்புகளை புதிய  வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.

பிராண்ட் மார்க்கெட்டிங்  என்பது சாதாரண மார்க்கெட்டிங்கை போல பொருள்களை விற்பது மட்டுமேயின்றி, நிறுவனத்துக்கான நோக்கம், குறிக்கோள், நிரந்தரமான வாடிக்கையாளர்கள் போன்றவற்றை உருவாக்கித் தருவதே இத்துறையின் முக்கியp பணியாகும்.


அதாவது பொருள்களுக்கான அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சென்று, மக்களுக்கும், அந்த குறிப்பிட்ட பிராண்டுக்குமான நிரந்தமான ஓர் பந்தத்தை ஏற்படுத்துவதே எங்களின் குறிக்கோளாகும் என பிராண்ட் மார்க்கெட்டிங் குறித்து ஓர் சிறிய அறிமுகம் அளிக்கிறார் ஆனந்த்.

திருநெல்வேலியில் அதிகமான தொழில்கள் இருக்கின்றன. அதிகமான வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள், ஆனால் திருநெல்வேலி தொழில் நகரம் அல்ல, தொழிலுக்கான இடம் அல்ல என்று அனைவரும் நினைக்கிறார்கள். இந்த மாயையை உடைக்கவே நான் எனது நிறுவனத்தை திருநெல்வேலியில் தொடங்கினேன் என்கிறார்.

எங்களது Axsus மார்க்கெட்டிங் கம்பெனி மூலம் இதுவரை சுமார் 25 ஆயிரத்துக்கும் மேல் விளம்பர டிசைன் செய்து கொடுத்திருக்கிறேன். ஏராளமான நிறுவனங்களுக்கு லோகோஸ் தயார் செய்து கொடுத்திருக்கிறேன். எங்களுக்கு நிரந்தரமாக 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

10 வருடங்களுக்கும் மேலாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். பில்டர்ஸ், சூப்பர் மார்க்கெட், பால் தயாரிப்புகள் என என்னுடைய பல்வேறு வாடிக்கையாளர்கள், எனது பிராண்ட் மார்க்கெட்டிங்கால் தங்களது துறையில் அடுத்த கட்டத்துக்குப் போயுள்ளனர் என பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் ஆனந்த்.

மேலும், திருநெல்வேலியில் நெல்லை மராத்தான் என்ற நிகழ்வை 2 வருடமாக Axsus நிறுவனம் செய்து வருகிறது. இதில் மட்டும் 7500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் எங்கள் நிறுவனத்தின் பெயர் நெல்லையைத் தாண்டி, தமிழகம் முழுவதும், ஏன் வட இந்தியா வரை கூட பிரபலமானது எனக் கூறலாம்.

புதிதாக தொழில் தொடங்கும்போது அல்லது தொடங்கியபின் தொழில்முனைவோர்கள் கவனிக்க வேண்டியது 2 முக்கியமான விஷயங்கள் ஆகும். முதலில் பிராண்ட் மார்க்கெட்டிங். இரண்டாவது மார்க்கெட்டிங் ஆகும். இதில், கவனம் செலுத்துபவர்கள் தங்கள் தொழிலில் மாபெரும் வெற்றியை பெறுகிறார்கள்.


இதில் கவனம் செலுத்தாமல் தேவையில்லாத முதலீடுகளைச் செய்பவர்கள் தங்கள் நிறுவனத்தை தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே மூட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின்றனர் என்கிறார் ஆனந்த்.

குறிப்பாக இந்த கொரானோ ஊரடங்கு நேரத்தில் பெரும்பாலானோர் தங்களது தொழில்களை எப்படி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது, தங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு தக்க வைப்பது என என்னிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர்.

ananth


இவர்களுக்காகவே ஊரடங்கு நேரத்தில் உலகத்தையே வீட்டுக்குள் வரச் செய்யும் டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆன்லைன் சேல்ஸ் போன்ற வியாபாரத் திட்டங்களை வகுத்து, இதுகுறித்து கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 40 நாட்களில் பல்வேறு செமினார்கள், வெபினர்கள் மூலம் பல்வேறு வியாபார திட்டங்களை வகுத்து கொடுத்தேன்.

இதன் மூலம் மட்டும் சுமார் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டினேன். இதுவே டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் எனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றே நான் கருதுகிறேன் என்கிறார்.

கொரானோ ஊரடங்கு காலத்துக்குப் பிறகு இனி வேலையில்லா பிரச்னை தலை தூக்கக்கூடும். எனவே இனி எதிர்காலத்தில் நிறைய தொழில்முனைவோர் வெளிவர வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு திருநெல்வேலி ஸ்டார்ட்அப் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோருக்கான திட்டங்களை வகுப்பது, வங்கிக் கடன் பெற்றுத் தருவது, தொழிலைத் தொடங்குவது, தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது, வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பது என அனைத்தையும் கற்றுத் தரும் ஸ்டார்ட் அப்பை தொடங்கியுள்ளோம்.


இதன்மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் பயன் அடைவார்கள். இதற்கான பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், இதற்கென தனியாக வெப்சைட் உருவாக்கும் பணியும் விரைவில் நடைபெற உள்ளது என்றார் ஆனந்த்.


இணையதள முகவரி: www.anandsp.com