நிதி முதலீடு பெற்ற தமிழக ஸ்டார்ட்-அப்: ஊட்டச்சத்துடன் ஸ்பைருலினா தயாரிப்புகள் அறிமுகம்!
Prolgae நிறுவனம் இந்திய டி2சி மற்றும் பி2சி சந்தைகளுக்காக ஸ்வீட் ஸ்பைருலினா பொடி, ஸ்பைருலினா புரோட்டீன் பார் என இரண்டு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Prolgae Spirulina supplies pvt limited என்ற பெயரில் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்அப், சுருள்பாசி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகிறது. 2017ஆம் ஆண்டு ஃபின்லாந்து மற்றும் 2018ம் ஆண்டு ஸ்லோவோக்கியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து, தற்போது ஸ்பைரூலினா என்றழைக்கப்படும் சுருள் பாசி (நீலப் பச்சை பாசி) வளர்ப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஆகஸ் சதாசிவம்.
கடந்த மூன்றாண்டுகளில் 10 உலக நாடுகளைச் சேர்ந்த 15 வாடிக்கையாளர்கள், Prolgae நிறுவனத்துடன் இணைந்துள்ளனர். 2019ம் ஆண்டு ஸ்லோவோக்கியா நாட்டைச் சேர்ந்த ஏஞ்சல் முதலீட்டாளர் Maros மூலம் இரண்டாம் சுற்று சீட் நிதியை திரட்டியது இந்நிறுவனம்.
தற்போது 2021-ம் ஆண்டு இந்திய ஏஞ்சல் முதலீட்டாளர் விஜயனிடமிருந்து அறிவிக்கப்படாத தொகையை மூன்றாம் சுற்று சீட் நிதி திரட்டியுள்ளதாக, Prolgae நிறுவனர் ஆகஸ் சதாசிவம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெயிலில் உலரவைக்கப்பட்ட ஆர்கானிக் ஸ்பைருலினா உற்பத்தியை மும்மடங்கு அதிகரிக்க உள்ளது இந்நிறுவனம்.

ஆகஸ் சதாசிவம்
நிதி முதலீடைக் கொண்டு இந்நிறுவனம், ஸ்பைருலினா பயன்படுத்தி நுகர்வோர் தயார்ப்புகளை முன்னெடுக்கத் திட்டமிட்டு இரண்டு புதிய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதுபற்றி ஆய்வு மேற்கொண்டபோது ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி, ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதால், ஸ்பைருலினாவை பொடியாக தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
”சமீபத்தில் Prolgae இந்திய டி2சி மற்றும் பி2சி சந்தைகளுக்காக ஸ்வீட் ஸ்பைருலினா பொடி, ஸ்பைருலினா புரோட்டீன் பார் என இரண்டு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக,” ஆகஸ் தெரிவித்தார்.
ஸ்பைருலினா தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடு
ஸ்பைருலினா இரண்டு வெவ்வேறு முறைகளில் தயாரிக்கப்படுவதாக ஆகஸ் விவரிக்கிறார். வெயிலில் உலரவைக்கப்பட்டு காய்ந்த ஸ்பைருலினாவைப் பெறலாம். அல்லது ஸ்ப்ரே முறையில் வெப்பமூட்டி காய்ந்த ஸ்பைருலினாவைத் தயாரிக்கலாம்.
இதில் ஸ்ப்ரே மூலம் தயாரிக்கும் முறையில் 120 டிகிரி செல்ஷியஸ் வெப்பமூட்டப்படுகிறது. ஆனால் வெயிலில் 30-35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் உலரவைக்கப்படுவதால் ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் தக்கவைக்கப்படுகிறது. எனவே வெயிலில் உலரவைக்கப்படும் முறையே அதிகம் விரும்பப்படுகிறது, என்கிறார்.
ஸ்பைருலினா வெயிலில் உலரவைக்கப்பட்டு, பொடியாக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்து, Prolgae சமீபத்தில் இந்திய டி2சி மற்றும் பி2சி சந்தைகளுக்காக ஸ்வீட் ஸ்பைருலினா பொடி, ஸ்பைருலினா புரோட்டீன் பார் என இரண்டு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஸ்பைருலினா புரோட்டீன் பார் 3 சுவைகளில் கிடைக்கும்.
இனிப்பு ஸ்பைருலினா பொடியை 200 மி.லி தண்ணீர், ஜூஸ் அல்லது ஸ்மூத்தியில் கலந்து குடிக்கலாம்.
ஒருநாளைக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளும் உணவு, ஜூஸ், ஸ்மூத்தி போன்றவற்றில் 5 கிராம் ஸ்பைருலினா பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.
5 கிராம் ஸ்பைருலினா 5 கிலோ காய்கறிகளின் கலவைக்கு சமமானது. இந்த சூப்பர்ஃபுட் 63% புரோட்டீன், 12 வைட்டமின், 8 மினரல் மற்றும் அதிகளவு ஆண்டிஆன்சிடண்ட் கொண்டுள்ளது. நோய் எதிர்பாற்றலுக்கு சிறந்தது.

நாள் முழுவதுக்கும் தேவையான எனர்ஜி பெற தினமும் ஒரு ஸ்பைருலினா புரோட்டீன் பார் எடுத்துக்கொள்ளலாம், என்கிறார் ஆகஸ். பொதுவாக ஸ்பைருலினா கசப்புத்தன்மை கொண்டதால், அதை பல சுவைகளில் புரோட்டீன் பார்’களாக தற்போது தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் ஆகஸ் சதாசிவம்.
வரும் நாட்களில் உணவு மற்றும் பானங்கள் பிரிவில் ஸ்பைருலினா கொண்டு தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட கூடுதல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த Prolgae திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் நோக்கம்
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் பொறியியல் முடித்தவர் ஆகஸ் சதாசிவம். இவர் ஸ்டார்ட் அப் முயற்சி தொடங்க விரும்பினார். பல்வேறு துறை குறித்து ஆய்வு செய்ததில் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதை உணர்ந்தார்.
”வருங்காலத் தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டும். ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளவேண்டும். புவி வெப்பமயமாதலைக் குறைத்து வருங்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான உலகை உருவாக்கித் தரவேண்டும். இந்த நோக்கங்களை முன்னிறுத்தி Prolgae நிறுவனத்தை நிறுவினேன்,” என்கிறார் ஆகஸ்.
ஸ்பைருலினா இந்த நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உதவுகிறது. ஒருபுறம் ஸ்பைருலினா ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் தாதுச்சத்துக்களும் புரதச்சத்துக்களும் அதிகளவில் இருக்கின்றன. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இது ஏற்கெனவே மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

மற்றொருபுறம் ஸ்பைருலினா சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. ஸ்பைருலினா உற்பத்தியில் கார்பன் வெளியேற்றம் குறைவு. இதனால் புவி வெப்பமயமாதல் குறையும். குறைந்த நிலத்திலும் குறைவான நீர் பயன்பாட்டுடனும் ஸ்பைருலினா தயாரிக்க முடியும்.
இந்த காரணங்களுக்காக ஆகஸ், பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவரும் ஏஞ்சல் முதலீட்டாளருமான மிகா ரோஷியோ உடன் இணைந்து 2017-ம் ஆண்டு Prolgae நிறுவினார்.
Prolgae வெயிலில் உலரவைக்கப்பட்ட ஸ்பருலினாவை 2018-ம் ஆண்டு முதல் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆர்கானிக் சான்றிதழ் பெற்றது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதிலும் நோய் எதிர்பாற்றலை மேம்படுத்திக்கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழலில் Prolgae போன்ற தயாரிப்புகள் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.