நல்லா தூங்கி 'ஸ்லீப் சாம்பியன்' ஆகி 9 லட்சம் பரிசு வென்ற பெங்களூரு பெண்!
வேக்ஃபிட்டின் ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூன்றாவது சீசனில் 100 நாட்கள் சரியான நேரத்திற்கு நிம்மதியாகத் தூங்கி எழுந்து, ரூ.9 லட்சத்தைப் பரிசாகப் பெற்றுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த ஷைஸ்வரி என்ற இளம்பெண்.
மனிதர்கள் மட்டுமல்ல.. செடி, கொடி, விலங்கு, பறவை என உயிருள்ள எல்லாமே நீண்டநாட்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்று. ஆனால், மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் பொருளாதார நெருக்கடி உட்பட பல்வேறு காரணங்களால் மனிதர்களின் தூக்கம் மாறி வருகிறது. அதன் பரிசாக உடல் உபாதைகளும் இளம் வயதிலேயே வந்து ஒட்டிக் கொள்கிறது.
அதனால்தான் எந்தப் பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றாலும், அவர் கேட்கும் முதல் கேள்வியாக, ‘இரவில் நன்றாக உறங்குகிறீர்களா?’ என்பது உள்ளது. எனவே, நல்ல உறக்கத்தைப் பெறுவதற்காக மக்கள் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால், வேலைப்பளு, பொருளாதாரப் பிரச்சினை, மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால், படுத்ததும் தூக்கம் அனைவருக்கும் வசப்பட்டு விடுவதில்லை. இரவெல்லாம் விழித்துக் கொண்டிருந்து, பகலில் தூங்கி வழிபவர்கள் நம்மூரில் ஏராளம்.
ஸ்லீப் இன்டர்ன்ஷிப்
பெங்களூருவைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் Wakefit, கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்லீப் இன்டர்ன்ஷிப் என்ற போட்டியை நடத்தி வருகிறது. தூக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும், எத்தகைய மன அழுத்தத்திலும் ஒருவர் எப்படி நன்றாகத் தூங்க முடியும் என்பதை அறியும் நோக்கத்திலும் இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர் 22 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். உறக்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
போட்டியாளார் ஒவ்வொரு இரவு 8 முதல் 9 மணி நேரம் வரை முழுமையாகத் தூங்க வேண்டும். அதோடு, பகலில் 20 நிமிடம் நன்றாக தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. வசதியாகத் தூங்க இலவச மெத்தை ஒன்றும் வழங்கப்படும். தினமும் தூங்கிய நேரம் பற்றி Wakefit க்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். வார இறுதி நாட்களில் தூக்க நேரத்தை நீட்டிக்க வேண்டியிருக்கும். இதன்மூலம் அவர்களின் தூக்கம் கண்காணிக்கப்பட்டது.
அனுபவம் வாய்ந்த தூக்க ஆலோசகர்களைச் சந்தித்து பயிற்சிப் பெறவும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தூக்கத்தை அதிகப்படுத்தி ‘ஸ்லீப் சாம்பியன்’ ஆக பதவி உயர்வு பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு.
லட்சங்களில் பரிசுத்தொகை
தூங்குவதற்கான போட்டி என்ற போதிலும், இதன் பரிசுத் தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என்பதால், இதில் கலந்து கொள்ள ஒவ்வொரு சீசனிலும் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தாண்டும் சுமார் 5 லட்சம் பேர் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தனர். அவர்களில், பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப்பின், 12 போட்டியாளர்கள் இறுதிக் கட்டம் வரை வந்தனர்.
அவர்களில், ஷைஸ்வரி என்ற இளம்பெண், எல்லாப் பிரிவுகளிலும் வென்று, இந்த வருடத்தின் ‘ஸ்லீப் சாம்பியனாக’ வெற்றி பெற்றதுடன், ரூ.9 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றுள்ளார். இவர், பெங்களூருவைச் சேர்ந்த முதலீட்டு வங்கியாளர் ஆவார்.
தனது இந்த வெற்றி குறித்து ஷைஸ்வரி கூறுகையில்,
“நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு ஒழுக்கம் மிகவும் தேவை. உடல், தன்னைத்தானே சீர்படுத்த தூக்கம் மிகவும் அவசியம். அத்தகைய போட்டிகளில் நீங்கள் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் வழக்கமான தூக்க நேரத்தை உருவாக்க வேண்டும். இரவில் மொபைல் மற்றும் டிவி பார்ப்பதை குறைக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
பைக்கில்கூட தூங்குவேன்...
“கோவிட் ஊரடங்கு காலத்தில் எனது தினசரி வாழ்க்கை முறையும் பெரிதும் மாறியது. நான் சரியான நேரத்திற்கு தூங்கவேயில்லை. அதோடு எனது வேலை நிமித்தமாகவும் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டி இருந்தது. இந்த இண்டர்ன்ஷிப் பயிற்சி, என்னை ஒழுங்கான தூங்கும் நபராக மாற்றி இருக்கிறது.
இப்படி தூங்குவதற்காக நடத்தப்படும் போட்டி வேடிக்கையானது. தேர்வுக்குத் தயார் செய்யலாம்.. தூங்குவதற்கு எப்படி தயாராக முடியும்? எனவே, போட்டி காலங்களில் எனக்கும் மன அழுத்தம் ஏற்பட்டது.
”ஆனால், எந்த மாதிரியான சூழ்நிலையிலும் தூங்கும் அளவிற்கு நான் பழக்கப் பட்டிருந்தேன். சமயங்களில் பைக்கில் செல்லும்போதுகூட தூங்கி இருக்கிறேன்,” என நகைச்சுவையாக தனது தூங்கும் திறமை பற்றிக் குறிப்பிடுகிறார் ஷைஸ்வரி.