'காட்டின் என்சைக்ளோபீடியா' துளசி கவுடா: பத்ம விருது விழாவில் கவனம் ஈர்த்த சுவாரஸ்யம்!

சுற்றுச்சூழல் ஈடுபாடு காரணமாக 72 வயதிலும் உழைக்கும் மூதாட்டி!

'காட்டின் என்சைக்ளோபீடியா' துளசி கவுடா: பத்ம விருது விழாவில் கவனம் ஈர்த்த சுவாரஸ்யம்!

Wednesday November 10, 2021,

2 min Read

அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த விளங்குபவர்கள் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு 1954 முதல் பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது.


அந்தவகையில், கடந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்தவிழாவில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தவர் என்றால், 72 வயதான மூதாட்டி துளசி கவுடா-வை குறிப்பிடலாம். 


விழாவில் பழங்குடி பெண்ணுக்கே உரித்த பாரம்பரிய ஆடையில், வெறுங்காலுடன் ரெட் கார்பட்டில் நடந்து வந்து பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்திவிட்டு விருதும் பெற்றார். செருப்பு போடாமல் வெறுங்காலில் விருதுபெற்ற மூதாட்டி துளசி கவுடாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Tulasi Gowda

யார் இந்த துளசி கவுடா?

துளசி கவுடா கர்நாடகாவில் உள்ள ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கர்நாடக மாநிலம் அங்கோலா பகுதிக்கு அருகில் உள்ள ஹொன்னாலி கிராமம் தான் அவரின் பூர்வீகம். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்த துளசி கவுடாவுக்கு கல்வி அறிவு கிடையாது. ஆனால், காடுகளும் அதில் வாழும் விலங்கினங்கள் குறித்தும் மிக நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறார். குறிப்பாக காடுகள் மீது துளசி கவுடாவுக்கு அலாதி பிரியம் உண்டு.


இந்த பிரியத்தின் காரணமாக தனது 12வது வயதிலேயே வனத்துறையில் தன்னை ஒரு தன்னார்வலராக இணைத்துக்கொண்டு மரங்களை நடுவது காடுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்திக்கொண்டார். சில ஆண்டுகளிலேயே, ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்த துளசி கவுடாவின் அர்ப்பணிப்பு காரணமாக வனத்துறையில் அவரின் வேலை நிரந்தரமாக்கப்பட்டது.

துளசி கவுடா

தனது வாழ்நாள் முழுவதும் இயற்கையைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணித்த துளசி,

“இதுவரை 30,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். 14 ஆண்டுகள் வனத்துறையில் நிரந்தர பணியாளராக இருந்து ஓய்வு பெற்ற மூதாட்டி துளசி, ஓய்வுக்கு பின்பும் தினமும் காடுகளை பராமரிப்பது, மரம் நடுவது என சுழன்று வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக தனது ஊதியத்தையும் ஓய்வதியத்தையும் வெகுவாக செலவிட்டுள்ள துளசி கவுடா வன ஆர்வலர்கள் மத்தியில் ‘காடுகளின் கலைக்களஞ்சியம்' (Encyclopedia of Forest) என்று அழைக்கப்படுகிறார்.”

இவ்வாறு அழைக்கப்படக் காரணம், காடுகளில் இருக்கும் அரியவகையான தாவரங்களும் மூலிகைகளும் அவைகள் கொடுக்கும் பலன்கள் குறித்தும் துல்லியமாக அறிந்து வைத்திருப்பதுதான். இதையடுத்து தான் அவரை கௌரவப்படுத்தும்விதமாக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.